சனி, ஜூலை 16, 2011

புதுச்சேரி முதல்வர் சந்திப்பு





ஈழ விடுதலையை மேடைகளில் பேசி பெற முடியாது- தமிழர் களம் அரிமாவளவன் பேச்சு

புதுவை: ஈழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டுவது போன்றது என்று தமிழர் களம் அரிமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பாவலரேறு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது

முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழ மண்ணில் நடந்து வருகிற ஓர் இன அழிப்புக் கொடுமைகளின் ஒரு பகுதி. இப்படித்தான் தமிழினம் அங்கு காலாகாலமாக அழிக்கப்பட்டு வருகிறது என்பதை உறங்கிக் கிடந்த உலகிற்கு உசுப்பிச் சொன்ன ஓர் நிகழ்வு. அறுபது ஆண்டுகளாக ஈழத்தில் நடக்கிற அக் கொடுமைகள் ஈராயிரம் ஆண்டுகளாக உலகப்பரப்பில் தமிழருக்கு நடக்கும் அநீதிகளுக்கு மற்றுமொரு சாட்சி.

கன்னடக் களப்பிரர்கள் 300 ஆண்டுகள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து ஆண்டபோது தமிழரின் தலைகளைக் கொய்து மதுரையைச் சுற்றி அடுக்கி வைத்துக் கொக்கரித்தார்கள் என்பது வரலாறு. ஆக, ராசபக்சேக்களும், கோத்தபாயாக்களும் அன்றே இருந்திருக்கிறார்கள்!

நாயக்க மன்னர்கள் தமிழர் நாட்டை வன்கவர்பு செய்தபோது மீனவப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு சிதைத்து அழித்தார்கள் என்று வரலாறு சொல்லுகிறது.

மும்பையிலிருந்து மராத்திய வெறியர்களால் தமிழர்கள் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். அவர்தம் குடியிருப்புகளெல்லாம் தரைமட்டமாயின.

பர்மாவில் சயாம் ரயில்பாதை போட்டபோது ஒரு லட்சத்து ஐம்பாதாயிரம் தமிழர்களைச் சப்பானியப் படைகள் கொன்று குவித்திருந்தன.

கர்நாடகத்தில் 1991ல் காவிரிக் கலவரம் என்ற பேரில் கொலைகள், கற்பழிப்புக்கள், சொத்தழிப்புக்கள் என்று தமிழர் பட்ட துயரங்கள் சொல்லி மாளாது. அன்றைக்கு ஆறு லட்சம் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு இடப்பெயர்வு செய்தார்கள்.

தமிழகக் கடற்கரைகளில் 540க்கும் மேலான எம் மீனவர்கள் படு பயங்கரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டிருக்கின்றனர்.

தமிழகக் காடுகளில் வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பேரில் கர்நாடகக் காவல்துறையினரால் கொல்லப்பட்டோரும், சிதைக்கப்பட்டோரும், கற்பிழந்து தவித்தோரும் எண்ணிக்கையிலடங்கார்.

மலேசியாவில், சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் உரிமைகளற்றக் குடிகளாக குறுக்கப்படுவது காலாகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள்.

இன்றைக்கு தமிழர்கள் நாடிழந்து ஏதிலிகளாய் சொந்த மண்ணிலும் உலகின் எல்லா நாடுகளிலும் உழன்று வருகின்றனர். அரணாய் நின்று காக்க வேண்டியத் தாய்த் தமிழகம் இந்தியக் கொத்தடிமைக் கூடாரத்தின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறது. இல்லாத திராவிடம் என்ற கொடுஞ்சிறையில் அது நலிவுற்றுக் கிடக்கிறது. இந்த நிலை மாறினாலேயே உலகத் தமிழரின் வாழ்வில் விடியல் பிறக்கும்.

ஈழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டும் வம்படி வீரர்கள்.

ஈராயிரம் ஆண்டுகாலப் பகை இது! இதை நாம் உணராமல் இலங்கையையும் சிங்களனையும் தமிழ்நாட்டு மேடைகளில் கொத்திக் காய வைப்பது என்பது நோகாமல், நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தாமல், துளியேனும் குருதி சிந்தாமல் விடுதலையை விருட்டென்று பறித்துவிடலாம் என்று நாம் காணுகிற கற்பனைக் கனவு.

தமிழர் தேசியம் மலர வேண்டுமென்றால் நாம் அயராது பாடுபட வேண்டும். அப்படிப் பாடுபடுவது என்பது மாதமொருமுறை நடத்தும் கருத்தரங்குகளில் கேட்ட கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க, கேட்டவர்களே மீண்டும் மீண்டும் கூடுவது அல்ல. அல்லது உண்ணா நோன்பு போன்ற போராட்டங்கள் வழியில் நம்மை நாமே வருத்திக் கொள்ளவதுமில்லை. நமது கருத்துக்களை நமது குடும்ப உறுப்பினர்கள், உற்றார், உறவினர்கள் என்ற அளவிலே முதலில் பரப்பிட வேண்டும். பின்னர் அதுவே பரந்துபட்டத் தளங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

நமது இளைய தலைமுறைக்கு நமது நண்பர் யார்? எதிரி யார்? என்ற அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

“வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்” என்ற வள்ளுவனின் கோட்பாட்டையே மாவோ பின்னாளில், “நண்பன் யார்? எதிரி யார்?” என்று வகுத்துக் கொண்ட பின் “களமிறங்கு” என்றான்.

தமிழ்நாட்டில் இது போராடும் காலம். விடுதலையை விழிகளில் தாங்கி விடுதலை நெருப்பை நெஞ்சில் ஏந்தி நடை போட வேண்டிய நேரமிது. நம்மில் இருக்கும் சிறு சிறு பூசல்களைக் கொளுத்திப் போட்டுவிட்டு தமிழர் தேசியம் காண கரம் கோர்ப்போம் என்றார்.

இந்த விழாவில் ந.மு. தமிழ்மணி, சொல்லாய்வறிஞர் அருளியார், தமிழர்களத்தின் புதுவை மாநிலச் செயலாளர் பிரகாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, ஜூலை 03, 2011