புதன், மே 14, 2014

"இப்போதாவது அணுஉலையை மூடுங்கள்! தமிழர்களம் அரிமாவளவன் கோரிக்கை!!

14.05.14
திருச்சி

இதுதான் சர்வதேசத் தரத்துடன் இருக்கிற பாதுகாப்பான அணுஉலையா?



ஆயிரம் பொய்களைச் சொல்லி, அடக்குமுறைகளை ஏவி, பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணத்தை விழுங்கி, 30 ஆண்டுகளாகப் இழுத்து இழுத்துக் கட்டிய அணு உலையை மக்களின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் அரசு வலுக்கட்டாயமாகத் திறந்தது. அது தன் முழுத் திறனை அடைவதற்கு முன்பாகவே இன்று விபத்து நடந்திருக்கிறது. ஆறு அப்பாவி ஊழியர்களை அரக்க பரக்க மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். இன்னும் உள்ளே உண்மையில் என்ன நடந்தது என்பதை நிச்சயமாக உலகத்திற்குச் சொல்ல மாட்டார்கள்.
சாமானியர்களின் சாவு என்பது இந்திய ஆட்சியாளர்களுக்கு குப்பையைக் கூட்டி அள்ளிப் போடுவது போலத்தான். போபாலில் அப்படித்தான் நடந்தது! பல நச்சு ஆலைகளில் நடப்பதும் அப்படியே! கூடங்குளம் அணுஉலையிலும் இப்போது அப்படியே தொடங்கியிருக்கிறது. இனி கூடங்குளம் சாவுச் செய்திகளும், விபத்துச் செய்திகளும் வரிவிளம்பரங்கள் போல அன்றாடம் வந்து தொலைக்கும்!



         கூடங்குளம் அணு உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என்று இத்தனை நாளும் வம்படி வேலைகள் செய்து கொண்டிருந்த அமைச்சர் நாராயணசாமி எங்கே? மக்களைப் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாத இந்தியத் தலைமையமைச்சர் இப்போதாவது வாய் திறப்பாரா? 

         எல்லா விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன என்று இறுதி ஆணி அடித்த உச்ச நீதி மன்றம் இப்போது என்ன சொல்லப்போகிறது? கூடங்குளம் அணுஉலையைத் திறந்தே தீரவேண்டும் என்று விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்த அரசியல் கட்சிகள் எங்கே? 
        மக்களின் அச்சத்தைப் போக்கிவிட்டு அணுஉலையைத் திறக்கலாம் என்று சொன்ன துரோகக் கட்சிகள் இப்போது எங்கே? இவர்களெல்லாம் இந்த அப்பாவி மனிதர்கள் உயிருக்குப் போராடுவதைக் கணக்கில் எடுப்பார்களா? இல்லையா?
          அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்களத்தின் ஒற்றைக் கோரிக்கை, “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு” என்பதுதான்! வரப்போகும் பேரிடருக்கு அச்சாரம் போட்டிருக்கிறது இந்த விபத்து! இப்போதாவது பாதுகாப்பான அணு உலை என்பது இப்பூவுலகில் கிடையாது என்பதை தாழ்மையோடு ஏற்றுக் கொண்டு, உடனடியாக அணுஉலையை மூடும் வேலையை அணுசக்தி வாரியமும், இந்திய அரசும் முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்."