சனி, ஜூன் 13, 2015

“சிறுமலராய்“ ஒரு பெரும் ஆல்!






















 கடந்த வெள்ளி (12.06.2015 ) அன்று மாலை திருச்சி மாவட்டத்தின் கடைக்கோடியில் ஒரு சிற்றூர் விழாக்கோலம் பூண்டிருந்தது...மஞ்சள் ஆடையுடன் பெண்கள் முளைப்பாரியும்.... மாவிளக்கும் பால்குடங்களும் ஏந்தியபடி நையாண்டி மேளம் முழங்க அணிவகுத்து சென்றனர்....காண்போரெல்லாம்  ஏதோ மாரியம்மன் திருவாழாஎன்றே நினைத்திருப்பர்.... ஆனால் அத்தனையும் காணிக்கையாக செலுத்தப்பட்டதோ திருவள்ளுவரின் திருவுருவத்திற்கு என்றால் யார்தான் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியும்! 

கிராமத்து மக்கள் மூடநம்பிக்கையால் அவ்வாறு செய்திருக்கக்கூடும் என்று நினைப்பவர் முட்டாள்! ஆனால் மக்கள் அறிந்துள்ளனர் யாரால் இவ்வுலம் உய்வுற்றது என்று! ஆம் அவர்கள் உணர்ந்துள்ளனர் வள்ளுவமே வழிகாட்டி என்று ! 

25 ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது இந்த சிற்றூர் உலகின் முன்னணி கிராமமாக திகழப்போகிறது என்று. 
சிறுமலர் பண்புச்சோலை சிறார் காப்பகமாக தொடங்கப்பட்டு சிறுமலர் தொடக்கப்பள்ளியாக தோன்றி இன்று உயர்நிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது. மேலும் மேலும் கல்வியில் உச்சத்தை எட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! தற்போது அங்கு பயின்றுவரும் மாணவர்களும் பள்ளியால் பயனடையும் உள்ளுர் மக்களுமே சான்று!
பள்ளியின் முன்பகுதியில் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறது திருவள்ளுவரின் திருவுருவச் சிலை! அச்சிலை ஞானச் செல்வத்தால் உருவாகி அரிமாவால் நிமிர்ந்து நிற்கிறது! ஆய்வறிஞர் திரு குணா அவர்களின் திருக்கையால் திறப்புவிழா நிகழ்ந்தது. ஆன்றோர்களும் சான்றோர்களும் முன்னிலை வகிக்க அனைத்து தமிழ்ப் பற்றாளர்களும் தமிழர் களத்தின் வீர வேங்கைகளும் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். 
அடுத்ததாக தொடக்கப்பள்ளிக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்வுகள் தொடங்கியது. தமிழறிஞர்களின் படங்களை தங்கள் பிஞ்சுக் கைகளால் ஏந்தியபடி மழலைகள் ஊர்வலமாய் புறப்பட்டது கண்கொள்ளாக் காட்சி அது! திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களின் நற்கைகளால் திறப்புவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் புனிதர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். மலேசியாவிலிருந்து வாழ்த்துரை வழங்கிய திரு. சாமுவேல்ராஜ் அவர்களின் உரை அனைவரும் எழுச்சி கொள்வதாய் இருந்தது. 

தனது தொடக்க உரையில் அரிமாவளவன் அவர்கள் சிறுமலர் பள்ளியின் வரலாற்றையும் அது பயணிக்கவிருக்கும் நோக்கத்தையும் சிறப்பாக எடுத்துரைத்தார். ஒரு பள்ளியின் கட்டிடத்திறப்பு விழாவில் பெரிதாக என்ன சிறப்பு இருக்கப் போகிறது என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே! ஏனெனில் இது மழலையர் பள்ளியா மிகப்பெரிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகமா என்று எண்ணுமளவிற்கு கம்பீரமாய் எழுந்திருக்கிறது தமிழ்ப்பள்ளி! உலகத்தரத்தில் முதன்மையான தமிழ்ப்பள்ளி என்ற பெருமையை பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது! 

அனைவரும் வியந்து தமது வாழ்த்துக்களை எடுத்துரைத்தனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் கல்வி வியாபாரிகளுக்கு ஓர் சாட்டையடியாய் இருந்தது! ஆங்கில மோகத்தை அறுத்தெறியும் வகையில் ஆற்றலுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறப்பாக நாடகம் நிகழ்த்தினர்! 
இறுதியில் பள்ளியின் அறக்கட்டளை நிர்வாகி லில்லி அவர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தினார்.