வெள்ளி, டிசம்பர் 16, 2016

புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்களின் இறுதி ஊர்வலம்.....

15.12.16

                 புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்களின் இறுதி ஊர்வலம்......மண்ணுலகை  விட்டு மறைந்தாலும் தன் சிந்தனைகளை இளையோர்களிடம் விதைத்துச் சென்ற மாவீரன்! எழுதுகோலை துவக்காக்கிய வெடிவாள் சித்தர்! அரும்பெரும் தமிழரின் இறுதி ஊர்வலப் பதிவுகள்......





































ஈடில்லா பேரிழப்பு!

16.12.2016


         நேற்று பெங்களூரில் ஐயா பாவிசைக்கோ அவர்களை மண்ணிலும் மனதிலும் விதைத்து விட்டு இன்று காலை ஊர் வந்து சேர்ந்தேன்! 73 வயது! உடன் பிறந்தோர் 11 பேர்! பெரிய குடும்பம் மட்டுமல்ல மிக மிக வசதியான குடும்பம்! ஆனால் கொண்ட கொள்கைப் பற்றினால் வசதிகளை இழந்துவிட்டார்! குடும்பத்தை இழந்துவிட்டார்! 


       ஒரு இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தாலும் அவரைத் தமிழ்ப்பற்றாளர், ஈழப் போராளி, புலவர் என்றுதான் தெரியுமே தவிர வேறெந்த அடையாளத்தையும் சுமக்காதவர்! கொள்கையினால் சந்தித்த தொல்லைகள் ஏராளம். 
     கலப்புத் திருமணம்! கொள்கைத் தீவிரத்தினாலும் அதனால் அரசு கொடுத்தத் தொல்லைகளினாலும் இந்தக் குடும்பத்தையும் பிரிய வேண்டிய சூழல்! மரணப் படுக்கையில்தான் கடைசித் தங்கை மட்டும் வந்து பார்த்தார்! மற்றவர்கள் பலர் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை! அண்ணன் ஒருவர் பாரீசில் வழக்கறிஞராக இருந்து மறைந்தவராம்! மற்றவர் பாரீஸ் தமிழ்ச் சங்கத் தலைவராம்! இறுதியில் மனைவியும் வந்து மரணப் படுக்கையில் பார்த்தார்! தம்பி விக்ரம் வீட்டில்தான் கடைசிக் காலத்தில் இருந்தார்! 
          லிங்கராசபுரம் செல்லும் சாலைத் தொடக்கத்திலிருக்கும் ஒரு கோயிலின் அருகில் உள்ள மரமே நாங்கள் அவரைப் பல நேரம் சந்திக்கும் இடம்! வானமே கூரை! மரமே நிழல் தந்தது! ஒரு போர் வீரனுக்குரிய மிடுக்கு எப்போதும் அவரிடம் இருந்தது! தனித் தமிழ் ஈழமும் தனித் தமிழ்நாடு எம் இரு கண்கள் என்று சொன்னவர் மட்டுமல்லர்! பேச்சு, மூச்சு, செயல் அத்துணையும் அதுவே! சிறைகள், கொடுமைகள், பட்டினி, பசி என்று இனத்திற்காக இவர் சந்தித்த ஈகங்கள் இணையற்றவை! விரிவாக பின்னர் இது பற்றி கட்டாயம் பதிய வேண்டும்!
      ஆனால் அப்படிப்பட்ட ஒரு மாமனிதனுக்கு, பிறந்த வீட்டையும் கட்டிய மனைவியையும் பிள்ளைகளையும் துறந்து இனத்திற்காக உழைத்து ஓடான இந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்த நாங்கள் அதிகபட்சம் 200 பேர் திரண்டிருந்தோம்!
       பெங்களூர் நகர வீதிகளில் குறிப்பாக அலசூர் அருகில் அவரைச் சுமந்து சென்று கல்லறையில் விதைத்தோம்!

மீதமுள்ள தமிழர்கள் நாம் எங்கே போனோம்?

நம்மைத்தானே அவர் சொந்தமென்றெண்ணி வாழ்வைக் கரைத்தார்!
கடைசி காலத்தில்கூட அவரது மனைவி அவரைக் கண்டுகொள்ளவில்லையே என்று சிலர் வருத்தப்பட்டனர்! அது பெரிதல்ல! எந்த இனத்திற்காக அவர் உழைத்தாரோ அவர்களில் பலர் அவரை அறிந்திருந்தும் வரவில்லை என்பதே எனது சினத்தோடு கூடிய வருத்தம்!

புலவரின் உடல் இனி அசையாது! ஆனால் உயிர் நம் உணர்வோடும், நம் உழைப்போடும், ஒத்துழைப்போடும் களமாடும்!

ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் இன உணர்வோடு செயல்படுவோம்!
விழ விழ எழுவோம் வீறு கொண்டு எழுவோம் என்று நான் வீதிகளில் முழங்கினேன்!
புலவர் நமக்குள் இனவிடுதலை நெருப்பை விதைத்துச் சென்றிருக்கிறார்! அணைப்பதும் அணையாது காப்பதும் நம் கைகளிலேயே இருக்கிறது!

புலவரின் உடல் மீது வைத்திருந்த அவரது பேனா என்னிடம் இறுதியில் ஒப்படைக்கப்பட்டது!

அவரது எண்ணமும் எழுத்தும் களம் உள்ள மட்டும் நிற்காது!

அரிமாவளவன்
பொதுச்செயலாளர்
தமிழர்களம்

செவ்வாய், டிசம்பர் 13, 2016

மாமனிதனுக்கு வீர வணக்கம்


இவரின் இழப்பு தமிழினத்திற்கும், தமிழர் களத்திற்கும், எனக்கும் பேரிழப்பே!
குணா ஐயாவுடைய பல நூல்களுக்குத் திருத்தம் போட்டவர் இவர்! அத்துணை தமிழ்ப் புலமை கொண்டவர் இவர்!

இவருடைய ஒவ்வொரு பேச்சையும் நான் சுவைத்தும் சிரித்தும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்!

எந்தத் தோல்வியையும் படிக்கட்டாக மாற்றும் பேச்சுத் திறன் கொண்டவர் இவர்!
ஈழத்தில் நாம் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் இவர் சொன்ன செய்திகளே பல நூறு இளைஞர்களை நம்பிக்கையோடு வைத்திருந்தது!

ஈழம், விடுதலைப் புலிகள், தலைவர் பிரபாகரன் போன்றவைகளெல்லாம் அவரது உயிர் மூச்சன்றி வேறில்லை!

எதிரிகள் மீது அவர் பாவித்த சொற்கள் சீறிச் செல்லும் தோட்டாவைவிட கூர்மையானது வேகமானது!

அவரது மறைவு பெரும் வருத்தத்தைக் கொடுத்தாலும் அவரது வாழ்வை நினைக்கும்போது மிகப் பெருமையாகவே இருக்கிறது!

தமிழர்களம் அவரது ஈகத்திற்கும் இணையில்லா தமிழினப் பற்றிற்கும் தலை வணங்குகிறது!

அவரது அடக்கம் அவரது பிறந்த நாளான இம்மாதம் 15ஆம் நாளன்று நண்பகல் வெங்காலூர் நகரில் நடைபெறும்!

நான் அவரது இறுதிப் பயணத்தில் பங்கேற்க செல்கிறேன்!
தமிழர்கள நண்பர்களும், தமிழின ஓர்மையாளரும் வந்திடுக!

இம் மாமனிதனுக்கு வீர வணக்கம் செலுத்துவது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் இனத்திற்கும் நாம் செலுத்தும் மரியாதையும் கடமையும்கூட!

வெங்காலூர் செல்வதற்கான தமிழர்களத்திற்ககான ஒருங்கிணைப்பை மேற்கு மண்டலச் செயலர் தம்பி அரசிடம் ஒப்படைத்திருக்கிறேன்!

அவரது எண் 9443363587

அரிமாவளவன்
பொதுச்செயலாளர்
தமிழர்களம்

செவ்வாய், நவம்பர் 29, 2016

27.11.2016
திருச்சி
மாவீர்ர் நாள் நிகழ்வு

          திருச்சியில் தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் திரு அரிமாவளவன் அவர்களின் தலைமையில் மாவீர்ர்கள் நாள் நிகழ்வு நடைபெற்றது. 

               நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய புதுவை அழகர் அவர்கள் ஈழத்தில் விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த எண்ணற்ற மாவீரர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை அவர்களின் கனவை நனவாக்க நம் வாழ்நாளை அர்ப்பனிக்கவேண்டும் என்றும், அதற்காக நமது தனித்திறன்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டுமெனவும் அதுவே இன்றைய மாவீர்ர் நாளில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதியேற்பு என்று உரை நிகழ்த்தினார். 
            நமது தேசிய இனம் தனி நாடுகேட்டுப் பெற வேண்டிய சூழலை இந்தியாவே உருவாக்கிவருகிறது. ஆகையால் நாம் சாதி மதம் கடந்து ஒரே தமிழினமாக நின்று களமாடவேண்டியது காலத்தின் தேவை என்றும், கருப்பு பண ஒழிப்பு, என்பது தமிழர்கள் மீது ஏவப்பட்டுள்ள பொருளாதார போர் என்றும், இதனால் சிறு குறு தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டும், இங்கே உற்பத்தியாளர்கள் முடக்கப்பட்டும், வடநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவை மட்டும் செழிப்பாக வளர மோடி அரசு முட்டுக்கொடுக்கிறது என்றும். 

              உயர்கல்வியில் அனைத்து தேர்வுகளும் தமிழிலும் எழுத அனுமதிக்க நாம் கட்டாயப்படுத்த வேண்டும் என்றும், நமது பிள்ளைகள் அதிகளவில் அரசுப்பணிக்கு செல்ல ஆயத்தப்படுத்தவேண்டும் எனவும், அதற்காக இப்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்கக் கூடாது என்றும்.

         ஒருபக்கம் இந்திய அரசு தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டுகொள்ளாமல், இன்னொருபுறம் சொந்த நாட்டிற்குள் ஏதிலியைப்போல தமிழர்கள் வாழவேண்டிய நெருக்கடியையும் கொடுக்கிறது. மொத்தத்தில் ஈழத்தில் நடைபெற்ற ஒரு படுகொலையைப்போல இங்கே தமிழகத்திலும் நடக்க சாதி, மத மோதல்களை மறைமுகமாக செய்கிறது இந்த பா.ச.க அரசு என்றும் தெரிவித்தார். 

         நிகழ்வின் இறுதியில்  மாணவர்களின் கலைநிகழ்வுகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் விடுதலை நெருப்பை பற்றவைப்பதாகவும், எழுச்சியூட்டுவதாகவும் அமைந்திருந்தது. ஒரு நல்ல வீறுகொண்ட தலைமுறை   உருவாகி வருகிறது என்பது பெருமைக்குரியது!

       முன்னதாக தமிழர்களத்தின் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக்கூட்டமும், தமிழர்களத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த விவாதமும் நடைபெற்றது.களத்திற்கான கொள்கை வரைவை வரும் பிப்ரவரி திங்கள் நான்காம் நாள் சென்னையில் வெளியிடுவோம்! எம் மக்களுக்கான உரிமை மீட்பில் முழு ஈடுபாட்டுடன் களமாடுவது என்றும்  அண்மைக்கால நிகழ்வுகளையும், நகர்வுகளையும் ஆய்வு செய்தோம்! தமிழர் தேசிய அரசியலில் நம்பிக்கை கொண்டோரையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் எமது முயற்சி தொய்வின்றி தொடரும் என்று அரிமாவளவன் தெரிவித்தார்.
                        
                        நிகழ்வில் தமிழகத்தின் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும், தமிழர்களத்தின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விரைவில் தமிழர்களம் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டியதன் அவசியத்தையும், அதற்கான முன்னெடுப்புகளையும் குறித்து பேராசியர் சாம்சன் எடுத்துரைத்தார். 

மாண்ட வீரர் கனவு பலிக்கும்!
நாளை எங்கள் நாடு பிறக்கும்!!
வீடுகள் தோறும் வீரம் பிறக்கும்!
விண்ணும் மண்ணும் விடுதலை முழங்கும்!!



































செய்தி ஊடக பிரிவு கருவூர்.