ஞாயிறு, ஜனவரி 17, 2016

வள்ளுவர் முற்றத்தில் ஒரு வண்ணத் திருவிழா!

16.01.2016


          நேற்று வள்ளுவர் நாளை முன்னிட்டு வெள்ளக்குளம் வள்ளுவர் முற்றத்தில் 200க்கும் மேற்பட்ட இளைளேயார் ஒன்றுகூடி “லஞ்சம் மற்றும் மது மறுப்பு” உறுதிமொழி ஏற்றனர்!
   
      தொடக்கத்தில் மாணவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சீமைக் கருவேலங் கன்றுகளை எரித்து அழித்தனர்! பின்னர் வள்ளுவருக்கு வணக்கம் செலுத்திய பின்னர் மருங்காபுரி, மணப்பாறை, மதுரை பகுதிகளிலிருந்து ஏற்கெனவே பயிற்சி பெற்று முன்பதிவு செய்திருந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்களோடு நான் கலந்துரையாடினேன்! தமிழகத்தைச் சீரழிககும் மது, லஞ்சம் பற்றி விரிவாகக் கலந்துரையாடினோம்! “நாங்கள் தமிழ் மாணவர்கள்” என்ற தமிழுணர்ச்சி ததும்பும் பாடலை கூடியிருந்தோர் எழுச்சியோடு பாட எட்டாம் வகுப்பு மாணவி தேவி அவர்கள் நடுவில் உரையாற்றினார்! இளம் மாணவர்கள் “விதியை நம்பி முடங்காதே! எதிர்ப்பைக் கண்டு கலங்காதே! லஞ்சம் கொடுக்காதே” என்று குத்தலும், நக்கலுமாக கூடியிருந்தோர் குலுங்கிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்ற ஒரு தெரு நாடகத்தை போட்டனர்!
   
     அனைவருக்கும் திருவள்ளுவர் திருவுருவம், ஓர் சிறு அகல் விளக்கு, சுறவம் மாதத்திற்கான அன்புடமை அதிகாரத்தின் 10 குறள்கள் அடங்கிய ஓர் குறள் அட்டை, திருக்குறள் மற்றும் ஏழிளந்தமிழ் அடங்கிய நூல் ஒன்று வழிபடு பரிசாக வழங்கப்பட்டது. வீடுகளில் ஒவ்வொரு நாளும் குறள் ஓதவும் வள்ளுவர் வழிபடவும் சில முறைகளை நான் அறிமுகப்படுத்தினேன்! பின்னர் அனைவரும் எழுந்து வள்ளுவர் முற்றத்தில ஓர் உறுதி மொழி எடுத்தோம்! லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்றும் போதைப் பொருள்களுக்கு அடிமை ஆக மாட்டோம் என்றும் கைகளை உயர்த்தி உறுதி கூறினோம். முயன்றால் முடியாதது ஏதுமில்லை! நாமும் நம் பகுதிகளில் முயற்சிக்கலாமே!