வெள்ளி, மார்ச் 11, 2016

தள்ளாடும் நிலையில் தேர்மேளம்!

11.03.16
கரூர்
                          மலையாளிகளின் செண்டை மேளத்திற்கு மூலமாக விளங்கிய தாய்மேளமான “தேர்மேளம்” செண்டையை விட அளவில் சற்று சிறியது...ஆனால் அது ஏற்படுத்தும் அதிர்வலைகளோ அலாதியானது! தமிழ்நாட்டில் எனக்குத்தெரிந்து இந்த தேர்மேளம் கரூர் மாவட்டத்தில் லிங்கத்தூர் எனும் கிராமத்தில் வாழும் பறையர் குல மக்கள் மட்டுமே இசைக்கின்றனர். 32 அடவுகளைக் கொண்டு இசைக்கப்படும் இந்த தோலிசைக்கருவிகளை தற்போது 20க்கும் குறைவானவர்களே இசைக்கின்றனர்...அவர்களும் 50 வயதைக் கடந்தவர்கள்!

       தற்போது மீண்டெழும் தமிழர் பண்பாட்டியல் கூறுகள் அடிப்படையில் பறை இசைக்கருவியை அனைவரும் விரும்பி கற்கின்றனர். தமிழ் நாட்டில் ஆண்களும் பெண்களுமான இசைக்குழுக்கள் தொழில்முறையிலும் வருவாய் ஈட்டுகின்றனர். ஆனால் இந்த தேர்மேளம் இசைக்கருவியை தங்களது பிள்ளைகள்கூட இசைக்க கற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் எங்களுக்குப் பிறகு இந்த தோலிசைக்கருவியை இசைக்க ஆளில்லை என்று ஆதங்கப்படுகிறார் தேர்மேள இசைக்கலைஞர் திரு. நல்லதம்பி.

      கேரள செண்டை மேளத்திற்கு கடுமையான எதிர்ப்பை நம்மிடம் பதிவு செய்த காளிதாஸ் அவர்கள் ஒருமுறை திருவிழாவில் ஏற்பட்ட போட்டியின்போது மலையாளிகள் தேர்மேள இசைக்கருவியின் அடவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கியதை பெருமையுடன் குறிப்பிடுகிறார்...

          திருச்சி மாவட்டம் குளித்தலை, மணப்பாறை போன்ற பகுதிகளில் இவர்களின் இசைக்கு நல்லவரவேற்பு இருப்பதாகவும் ஆனால் பரவலாக தொடர்ந்து தங்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையென்றும்....இந்த கலைக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுத்தால் தமிழகத்தில் கோளோச்சும் மலையாள செண்டையை தவிர்த்து இந்த தேர்மேளத்தை சிறப்படையச் செய்யலாம் எனவும்....மேலும் யாராவது இந்த கலையை கற்றுக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு முறைப்படி பயிற்சியளிக்கவும் தயாராக இருப்பதாக இசைக்குழுவினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு  - திரு.நல்லதம்பி - 9843285381 லிங்கத்தூர், கரூர் மாவட்டம்.