வெள்ளி, டிசம்பர் 16, 2016

ஈடில்லா பேரிழப்பு!

16.12.2016


         நேற்று பெங்களூரில் ஐயா பாவிசைக்கோ அவர்களை மண்ணிலும் மனதிலும் விதைத்து விட்டு இன்று காலை ஊர் வந்து சேர்ந்தேன்! 73 வயது! உடன் பிறந்தோர் 11 பேர்! பெரிய குடும்பம் மட்டுமல்ல மிக மிக வசதியான குடும்பம்! ஆனால் கொண்ட கொள்கைப் பற்றினால் வசதிகளை இழந்துவிட்டார்! குடும்பத்தை இழந்துவிட்டார்! 


       ஒரு இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தாலும் அவரைத் தமிழ்ப்பற்றாளர், ஈழப் போராளி, புலவர் என்றுதான் தெரியுமே தவிர வேறெந்த அடையாளத்தையும் சுமக்காதவர்! கொள்கையினால் சந்தித்த தொல்லைகள் ஏராளம். 
     கலப்புத் திருமணம்! கொள்கைத் தீவிரத்தினாலும் அதனால் அரசு கொடுத்தத் தொல்லைகளினாலும் இந்தக் குடும்பத்தையும் பிரிய வேண்டிய சூழல்! மரணப் படுக்கையில்தான் கடைசித் தங்கை மட்டும் வந்து பார்த்தார்! மற்றவர்கள் பலர் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை! அண்ணன் ஒருவர் பாரீசில் வழக்கறிஞராக இருந்து மறைந்தவராம்! மற்றவர் பாரீஸ் தமிழ்ச் சங்கத் தலைவராம்! இறுதியில் மனைவியும் வந்து மரணப் படுக்கையில் பார்த்தார்! தம்பி விக்ரம் வீட்டில்தான் கடைசிக் காலத்தில் இருந்தார்! 
          லிங்கராசபுரம் செல்லும் சாலைத் தொடக்கத்திலிருக்கும் ஒரு கோயிலின் அருகில் உள்ள மரமே நாங்கள் அவரைப் பல நேரம் சந்திக்கும் இடம்! வானமே கூரை! மரமே நிழல் தந்தது! ஒரு போர் வீரனுக்குரிய மிடுக்கு எப்போதும் அவரிடம் இருந்தது! தனித் தமிழ் ஈழமும் தனித் தமிழ்நாடு எம் இரு கண்கள் என்று சொன்னவர் மட்டுமல்லர்! பேச்சு, மூச்சு, செயல் அத்துணையும் அதுவே! சிறைகள், கொடுமைகள், பட்டினி, பசி என்று இனத்திற்காக இவர் சந்தித்த ஈகங்கள் இணையற்றவை! விரிவாக பின்னர் இது பற்றி கட்டாயம் பதிய வேண்டும்!
      ஆனால் அப்படிப்பட்ட ஒரு மாமனிதனுக்கு, பிறந்த வீட்டையும் கட்டிய மனைவியையும் பிள்ளைகளையும் துறந்து இனத்திற்காக உழைத்து ஓடான இந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்த நாங்கள் அதிகபட்சம் 200 பேர் திரண்டிருந்தோம்!
       பெங்களூர் நகர வீதிகளில் குறிப்பாக அலசூர் அருகில் அவரைச் சுமந்து சென்று கல்லறையில் விதைத்தோம்!

மீதமுள்ள தமிழர்கள் நாம் எங்கே போனோம்?

நம்மைத்தானே அவர் சொந்தமென்றெண்ணி வாழ்வைக் கரைத்தார்!
கடைசி காலத்தில்கூட அவரது மனைவி அவரைக் கண்டுகொள்ளவில்லையே என்று சிலர் வருத்தப்பட்டனர்! அது பெரிதல்ல! எந்த இனத்திற்காக அவர் உழைத்தாரோ அவர்களில் பலர் அவரை அறிந்திருந்தும் வரவில்லை என்பதே எனது சினத்தோடு கூடிய வருத்தம்!

புலவரின் உடல் இனி அசையாது! ஆனால் உயிர் நம் உணர்வோடும், நம் உழைப்போடும், ஒத்துழைப்போடும் களமாடும்!

ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் இன உணர்வோடு செயல்படுவோம்!
விழ விழ எழுவோம் வீறு கொண்டு எழுவோம் என்று நான் வீதிகளில் முழங்கினேன்!
புலவர் நமக்குள் இனவிடுதலை நெருப்பை விதைத்துச் சென்றிருக்கிறார்! அணைப்பதும் அணையாது காப்பதும் நம் கைகளிலேயே இருக்கிறது!

புலவரின் உடல் மீது வைத்திருந்த அவரது பேனா என்னிடம் இறுதியில் ஒப்படைக்கப்பட்டது!

அவரது எண்ணமும் எழுத்தும் களம் உள்ள மட்டும் நிற்காது!

அரிமாவளவன்
பொதுச்செயலாளர்
தமிழர்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக