ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

புதிய விடியல் காண.....- அரிமா கருத்துரை

7.4.13
இடிந்தகரை

                    புதிய விடியல் காண..... என்ற தலைப்பில் இடிந்தகரையில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திரு.சுப.உதயகுமார் தலைமை தாங்கினார். கல்லுரி மாணவர்களும் பொதுமக்களும் அணுஉலை எதிர்ப்பாளர்களும் திரளாக கலந்து கொண்ட நிகழ்வில் தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் ..... கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம். இது மக்கள் போராட்டம். தமிழர்களம் மக்களோடு மக்களாக எப்போதும் களத்தில் போராடும் ஓர் அமைப்பாகும். இந்திய தேசியத்தையும், திராவிட நச்சுக்களையும், திராவிட கட்சிக்களையும் அழித்தொழித்து தமிழர்கள் அனைவரும் தமிழர்களமாய் ஒன்றிணைந்து செயல்படுவதே தமிழின விடுதலைக்கு வழிவகுக்கும் என்றும், காவிரி, முல்லைப்பெரியாறு, குறிஞ்சான்குளம் படுகொலை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்றும் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
- செய்தி - ராமன் - தமிழர்களம்

அணுஉலை எதிர்ப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம்!





07.04.13
இடிந்தகரை
                       கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் திரு.சுப.உதயகுமாரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழகமெங்கும் இருந்து திரளான அணுஉலை எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது மேலான ஆலோசனைகளை தெரிவித்தனர். இதன் மூலம் இடிந்தகரை மக்களின் போராட்டமானது அடுத்தகட்ட நகர்விற்கு சென்றுள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழர்களத்தின் தென்மண்டல பொறுப்பாளர் மை.பா.நன்மாறன், திரு.புஷ்பராயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து போராட்டத்தின் தன்மைகுறித்து விளக்கிப் பேசினர்.

- செய்தி - ராமன் - தமிழர்களம்

ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு தனி ஈழமே தீர்வு! என்ற தீர்மானத்தை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாநிலை போராட்டம்!








07.04.13
பாளையங்கோட்டை
                        ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு தமிழ் ஈழமே தீர்வு என்ற முழக்கத்தோடு, உறவுக்கு கை கொடுக்கவும், உணர்வுக்கு தோள் கொடுக்கவும், போராடும் கரங்களோடு ஆசிரியர்களின் கரங்களும் இன்று இணையும் வண்ணமாக ஒருநாள் அடையாள உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. தமிழினம் வென்றாக வேண்டும் என்ற இலக்கோடு இந்த உண்ணாநிலை போராட்டத்தை அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பினரும், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கமும்,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்களும் இணைந்து நடத்தினர். நிகழ்வில் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்து  கொண்ட இந்த நிகழ்விற்கு தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் ஆதரவு தெரிவித்தார். 


- செய்தி - ராமன், தமிழர்களம்.

செவ்வாய், ஏப்ரல் 02, 2013

தமிழர்களை காவுவாங்கத் துடிக்கும் ஸ்டெர்லைட் ஆலை - அரிமா கண்டன அறிக்கை!


மாற்றமுடியாத மாய உலகத்துத் தீர்ப்புகளா?
போபால் போல பல்லாயிரம் பேர் மடிந்தால்தான் ஸ்டெர்லைட்டை மூடுவார்களா?
அரிமாவளவன் கேள்வி!
 
உயிர்க் கொல்லி ஆலையாக ஸ்டெர்லைட் ஆலை வடிவெடுத்து தூத்துக்குடி நகரில் பல ஆண்டுகளாக நிற்கிறது.  கடந்த காலங்களில் ஸ்டெர்லைட்டிலிருந்து வெளிவரும் நச்சுவளியினால் பலர் உயிரிழந்திருக்கின்றனர்.  சுற்றுச் சூழல் கெட்டு நாசமாகியிருக்கிறது.  ஆலையைச் சுற்றியிருக்கிற விளைநிலங்களும் குளங்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.  இதற்கெதிராக பல ஆண்டுகளாக மக்கள் போராடிப் போராடிக் களைத்துப் போயிருக்கிற வேளையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த நச்சுவளிக் கசிவினால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றனர், மரங்களும் செடிகளும் கருகியிருக்கின்றன.  மற்றொரு போபால் விபத்து நெருங்கியிருக்கிறது.  நல்லவேளை அந்நகரத்து மக்கள் தப்பித்திருக்கின்றார்கள்.
இதையறிந்த மாவட்ட நிர்வாகமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக ஆலையை மூடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.  இதற்கிடையில் பழைய வழக்குக்கான தீர்ப்பு இன்று உச்சநீதி மன்றத்தில் அறிவிக்கப்பட்டது.  வடநாட்டவர்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகைக்கு முன்னதாகவே தீர்ப்பை எழுதிவிட்டோம் என்கிறார் நீதியரசர்.  அப்படியானால் அண்மையில் நடந்த நச்சுவளிக்கசிவையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கருத்தில் கொள்ள மறுக்கிறார்.  அப்படி என்ன திருத்த முடியாத தீர்ப்பு அது?
தூக்குத் தண்டனைத் தீர்ப்பை செவ்வாய்க் கிழமை ஒருவர் எழுதிவிட்டதால் புதன் கிழமை கிடைத்த ஆதாரம் தண்டனை விதிக்கப்பட்டவன் குற்றவாளி இல்லை என்று உறுதிபடச் சொன்னால் நீதிபதி தீர்ப்பை மாற்றாமல் தண்டித்த நபரைக் கழுவிலேற்றிவிடுவாரா?
போபால் போன்ற ஒரு நச்சுவளிக் கசிவினால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்த பின்னர்தான் இந்த நாட்டில் இதுபோன்ற ஆலைகள் மூடப்படும் என்றால் நீதிமன்றங்களும் அரசாங்கமும் ஆட்சியாளர்களும் இந்த நாட்டுக்குத் தேவை இல்லையே!  வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன் வைத்தூரு போலக் கெடும் என்பதுபோல கடந்த 23ஆம் தேதி நடந்த நச்சுவளிக் கசிவு என்பதை பெரும் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும்.  இல்லையென்றால் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடிக்கும் என்று தமிழர்களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர் குணா...... அ.பசுபதி

சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள் - தேவமைந்தன் பெங்களூரு நகரிலும் தமிழ்நாட்டிலுமுள்ள தூயதமிழ் நாட்டமுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களால் அன்புடனும் தோழமையுடனும் அறிஞர் குணா என்று அழைக்கப்படும் திரு சாமுவேல் குணசீலன், கோலார் தங்கவயலில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்தவர். தந்தையார் திரு அ.மா.து. சாமுவேல் அவர்கள். தாயார் திருமதி மனோன்மணி அவர்கள். ஏந்துகள் மிக்க வங்கிப் பணியைத் துறந்து மக்கள் இயக்கங்களில் இறங்கிப் பாடாற்றிய அறிஞர் குணா, கருநாடகச் சிறைகளில் பலமுறை இருந்தவர். அண்மைய நெடுஞ் சிறைக்காலத்துக்குப்பின் மக்கள் உரிமை இயக்கத்தின் தொடர்ந்த முயற்சிகளால் விடுதலை பெற்றவர். இவரைப் போற்றிய தூயதமிழ் இயக்கம் சார்ந்த அறிஞர்களில் திராவிட இயக்கத்தின்பால் பற்றுக் கொண்டவர்கள் வெறுத்தாலும் சரி என்று 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற ஆய்வைத் துணிந்து வெளிப்படுத்தியவர். அந்த ஆய்வின் முடிபுகள், நம் திண்ணை வலையேட்டின் மே 1, 2008 பதிவேற்றத்தில், தோழர் எஸ்ஸார்சி தந்துள்ள குறிப்புகளாக வெளிவந்துள்ளன. குணாவின் ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, அவர் அறிவாற்றலின் தோழர்கள் அமைத்துக் கொண்டதுதான் 'FORT' என்ற அமைப்பு. 'Forum For Research On Tamilnadu' என்பது இதன் விரிவாக்கம். பெங்களூரு நகரில் 'டிஸ்பென்ஸரி சாலை' 48ஆம் இலக்கத்தில் இது இயங்கத் தொடங்கியது. இதுவே 'தமிழக அரண்' என்று பின்னர் பெயர் தாங்கியதாக நினைக்கிறேன். குணாவின் சிறந்த ஆராய்ச்சிகளாக எனக்குத் தெரிந்தவை பின்வருமாறு: 1. சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979) 2. தமிழர் மெய்யியல்(1980) 3. Marxist Dialectics(1983) 4. Asiatic Mode - A Socio-cultural Perspective(1984) 5. தமிழியப் பொதுவுடைமை(1985) 6. மார்க்சியமும் பெரியாரியமும் 7. மார்க்சிய இயங்கியல் 8. தமிழீழ அரசியலின் அகப்புற அழுத்தங்கள் (கட்டுரை)(1985) 9. இந்தியத் தேசியமும், திரவிடத் தேசியமும்(1986) 10.தமிழ்த் தேசிய இனச் சிக்கல் - உலக நம்பிகளின் இயங்காவியல்(The Metaphysics of the Abstract Internationalists)(1987) 11.வகுப்பும் சாதியும் வரணமும்(1988) 12.திராவிடத்தால் வீழ்ந்தோம் (1994) இவற்றுள் முதலாவதை இக்கட்டுரையில் பார்ப்போம். சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979) இந்நூலை 1972ஆம் ஆண்டே குணா எழுதினார். மூன்றாண்டுகளுக்குப் பின், அச்சுக்குத் தந்துவிட்டு வீடு திரும்பிய போது, 'மிசா'வின்கீழ் சிறையிடப்பெற்றார். இதன் சுருக்கத்தை 1974ஆம் ஆண்டே, 'Origin Of Casteism - An Integral Theory' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். அதற்குப்பின் ஐந்து ஆண்டுகள் கழித்துத் தமிழில் முழுமையான வடிவம் பெற்று ஆறு ரூபாய் விலைக்கு 1979 சனவரியில் வெளிவந்தது. கோயம்புத்தூர் உப்பிலிபாளையத்தில் தென்றல் நூலகத்தால் வெளியிடப்பட்டது. அதற்கு முன் அத்தகைய சிந்தனை தமிழில் - தூயதமிழில் வெளிவந்ததில்லை. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணருக்கு மிகவும் பிடித்த குணாவின் ஆய்வு இது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பாவாணருக்கு இடதுசாரிச் சிந்தனைகள்மேல் ஈடுபாடு இருந்ததில்லை. இறைநம்பிக்கை மிகுந்தவராக விளங்கியவர் பாவாணர். அப்படிப்பட்டவரையே ஈர்த்த நூல் 'சாதியத்தின் தோற்றம்.' "சாதியம் என்பது ஒருவகைப் பொருளியல் - சமுதாய வாழ்க்கை முறை. இன்றைய அரை நிலவுடைமைச் சமுதாயத்தின் அரசியல், பண்பாட்டுத் துறைகளின் உள்நோக்கமாகவும் அது அமைகின்றது. அச் சாதியத்திற்கு, அதற்கே உரிய கட்டுமானங்கள் உண்டு; தனி வடிவமைப்புகள் உண்டு. அவ் வடிவமைப்புகள் அதற்கேயுரிய உருவவியலைப் படைக்கின்றன. அச் சாதியத்திற்குத் தனித்த உள்ளியக்கமும் உண்டு. அவ்வுள்ளியக்கமே அதனை நீட்டிக்கும் உள்ளாற்றலாகும்" எனத் தொடங்கி, சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, இயக்கம் பற்றிய சிக்கலைப் பொருள்முதல் இயங்கியல் என்னும் மார்க்சிய முறையில் அணுகி, அவற்றின் காரணங்களைப் பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம், பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம் ஆகிய அகநிலை(பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம்)க் காரணங்கள் மூன்றாகவும் புறநிலைக் காரணங்கள் மூன்றாகவும்(பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம்) பகுத்து, ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்திருக்கிறார். அறிவாராய்ச்சியியல்(epistemology), மார்க்சீயச் சிந்தனையியல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமல்லாமல் அம்பேத்கர் சிந்தனையியலில் ஈடுபாடு கொண்டவர்களும் வாசித்தறிய வேண்டிய ஆராய்ச்சி இது. இதில் உள்ள நான்காம் - அகநிலைக் காரணமான - பண்பாட்டுக் காரணம் குறித்த ஆய்வில் டாக்டர் பாபுராவ் சாகேப் அம்பேத்கர் அவர்களின் 'Castes in India - their Mechanism, Genesis and Development' என்ற நூலில் இடம்பெறும் அறிஞர் கப்ரியேல் தார்த் கண்டறிந்த 'போலி நடத்தை விதிகளை' சாதியத்தின் தோற்றத்துக்கு அறிவியல் விதிகளாக அம்பேத்கர் எடுத்தாள்வதைக் குணா திறனாய்ந்திருப்பதை மீள்வாசிப்பில் தலித்தியக் கொள்கை அறிஞர்கள் திறனாய்ந்திருக்கிறார்கலா என்று எனக்குத் தெரியவில்லை. நண்பர்கள் எவரேனும் தெரிவித்தால் பயன்பெறுவேன். ஐந்தாம் இயலான மத/சமயக் காரணம் பற்றிய பகுதி... பண்டைக் கிரேக்கத்தில் பெலொப்பனீசியப் போருக்குப் பின்னர் ஏதென்சு, கடலரசியாகத் தான் செம்மாந்திருந்த நிலையினின்றும் தாழ்ந்து இழிந்தபொழுது, அத்தீனிய உயர்குடியாட்சியினருக்கு (Athenian aristocrats) பிளேட்டோ அகத்தியமானதோர் அறிவுரை தந்தார். அறநிலையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அந்த அறிவுரை, "மேன்மையான பொய்களை(Noble Lies) வடித்துச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!" என்பதே. அப்பொழுதுதான் அவர்கள், பெலொப்பனீசியப் போரின் முடிவால் தங்களுக்கு ஏற்பட்ட மானக்கேட்டை மக்களிடையில் மறைத்து, தங்களுக்கே உரியதாகத் தாங்கள் நம்பிவந்த நாட்டாட்சியாகிய 'உயர்குடியாட்சி''(Aristocrocracy)யைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது அவர் தருக்கம். இதை, பண்டைய இந்திய ஆட்சியாளர்கள், புரோகித வர்க்கத்துடன் சேர்ந்துகொண்டு புனைந்த நான்முகன் - நால்வருணக் கோட்பாட்டுடன் குணா ஒப்பிடும் பகுதி(ப.122) ஆய்வாளர்களுக்கு விருந்தாகும். இதே இயலில் தொடர்ந்து பிளேட்டோ போன்றே மக்கள் சமமானவர்களாக வாழ்வதை விரும்பாத அவர்தம் மாணவர் அரிஸ்டாட்டிலின் கருத்தோட்டங்களை, இந்து வேதங்கள் - குறிப்பாக இருக்கு வேதம், அதன் பின்னுழைவு என்று கருதப்படும் 'புருஷசூக்தம்' ஆகியவற்றின் நால்வருணச் சாதிப்புடன் ஒப்பிட்டு ஆராயும் குணாவின் திறன் வாசித்தறிய வேண்டியதாகும். வேதங்கள் இந்திய மண்ணிலேயே பிறந்தவை, குறிப்பாக ஆரியர் அல்லாதவர்களாலேயே பெரிதும் இயற்றப்பட்டவை என்பதற்குப் பாவாணர் தம் 'தமிழர் வரலாறு' என்ற நூலில் காட்டும் எட்டுக் காரணங்களை குணா எடுத்துக்கூறியிருக்கிறார். பிந்திய சமணர்கள் வருணாச்சிரம தர்மத்தை சூழ்நிலைக்கேற்பத் தாமும் ஏற்றுக்கொள்ள முன்வந்ததை இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை தம் 'பண்டைய கேரளம்' என்ற நூலில் ஆய்ந்திருப்பதை எடுத்துக் கூறியுள்ளதோடு அதற்குத் தமிழகச் சான்றாகத் திருத்தக்க தேவர் தம் சீவக சிந்தாமணியின் இலக்கணையார் இலம்பகத்தில்(பாடல்கள் 2462 - 2469) சீவகனின் திருமணச் சடங்குகள் வைதிக முறையில் நடந்ததாகப் பாடியிருப்பதை ஒப்புநோக்கியுள்ளார். பிந்திய காலப் பௌத்தமும் அதே வருணாச்சிரம வழியில் சென்ற நிலையை எடுத்துரைக்கிறார். கிட்டத்தட்ட நூற்று அறுபது பக்கங்கள் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள 'சாதியத்தின் தோற்றம்' முதற்பதிப்பில் குணா மொழிந்த கருத்துகளையெல்லாம் குறிப்புகளாக்குவதோ கூறிமுடிப்பதோ என்னால் இயலாதவை.


**** நன்றி: திண்ணை.காம்

திங்கள், ஏப்ரல் 01, 2013

அறிவர் குணாவின் “எண்ணியம்“ புத்தக வெளியீட்டுவிழா பதிவுகள்!
















அறிவர் குணாஅவர்கள் எழுதிய எண்ணியம் புத்தக வெளியீடு!

30.03.13
புதுவை
                   அறிவர் குணா அவர்கள் எழுதிய “எண்ணியம்“ என்ற புத்தகம் வெளியீட்டு விழா புதுவை தமிழர்களத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. நிகழ்விற்கு தமிழர்களம்தின் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் தலைமை தாங்கினார். திரு.புரட்சிகுமார் மற்றும் தமிழர்கள செயல்வீரர்கள் முன்னிலை வகிக்க, நிகழ்வில் தமிழர்களத்தின் புதுவை மாநில செயலாளர் திரு. கோ.பிரகாசு,வரவேற்புரை நிகழ்த்தினார். புத்தகத்தை தமிழறிஞர் திரு.வீரசிங்கம் வெளியிட ந.மு. தமிழ்மணியும், திரு.நெய்வேலி பாலு அவர்களும் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். சொல்லாய்வறிஞர் திரு. அருளி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். விழாவின் நாயகன் திரு. அறிவர் குணா அவர்கள் ஏற்புரை வழங்கினார். விழாவின் முடிவில் தமிழர்களத்தின் மாவட்ட செய்திதொடர்பாளர் திரு.அன்பழகன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுபெற்றது. விழாவை மிக நேர்த்தியாக ஒருங்கிணைப்பு செய்தார் தமிழர்களத்தின் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் பேராசிரியர் திரு. சாம்சன் அவர்கள்.

                        முன்னதாக விழாவின் துவக்கத்தில் தமிழர் தேசிய பாடல்களை பாடினார் புலவர்............................... அதன்பிறகு கலைவாணர் நாடக அரங்கு சிறார்கள் நிகழ்த்திய “நந்தவனத்தில் ஓர் ஆண்டி“ என்ற விழிப்புணர்வு எழுச்சி நாடகம் தமிழர்களின் உணர்வுகளை தட்டிஎழுப்புவதாக இருந்தது மிகவும் பாராட்டுதலுக்குறியது அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்! அதே போல பிரகாசின் அருமை புதல்வி தமிழ்த்தாய் வேடமணிந்து தமிழினம் என்பதை ஏன் மறந்தாய் தமிழா? என்ற கேள்வியுடன் மாற்றானிடம் மண்டியிடாதே என்றும், தமிழ்நாடு தமிழருக்கே என்றும் வீரமுழக்கமிட்டது நம்மை எழுச்சிகொள்ளச் செய்வதாக இருந்தது. சிறுமிக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

இனி நிகழ்வில்......

     கோ.பிரகாசின் வரவேற்புரையில்........
                   நாகரிகங்கள் தோன்றியது தமிழர்களிடத்திலிருந்தே என்றும், வரலாற்றை முழுவதுமாக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும், தமிழர்களின் தொன்மையை மீட்க தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், எண்ணியம் எங்கோ தோன்றி வளர்ந்தது அல்ல அது தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தது என்றும் எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

     ந.மு.தமிழ்மணி தனது வாழ்த்துரையில்......
                              மிகப்பெரிய இடையூருக்கு நடுவே இந்த புத்தகத்தை அறிவர் குணா எழுதியிருக்கிறார். இப்புத்தகம் தமிழின மீட்சிக்கான ஓர் “கருத்தாயுதம்“ எனவும், பாரதியாரின் கோட்பாட்டுப்படி பிற நாட்டு சாத்திரங்கள் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்றார். அப்படி அனைத்தையும் தேடிச்சென்றால் அங்கெல்லாம் தமிழின் தொன்மங்களே எஞ்சியிருக்கிறது என்பது வியப்பளிக்கிறது என்றும், தமிழர்கள் எண்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது நாம் அறிந்து கொண்ணவேண்டிய ஒன்று என்றும், கணக்கதிகாரம் போன்ற தமிழ் புத்தகங்கள் தமிழர்களிடமிருந்து களவாடப்பட்ட உண்மை இப்போது வெளிப்படுகிறது எண்ணியம் என்ற கணிதம் தமிழர்களின் அறிவுச் செல்வத்தை வெளிப்படுத்துகிறது. ஆரியர்களின் இடைச்செருகல் நிறைந்திருக்கும் தொல்காப்பியம் தமிழில் கி.மு.7000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகும் என்றும், தமிழர்களின் முதல் நாகரிகம் இரும்பு நாகரிம் என்றும் உலக நாகரிகங்களின் தோற்றுவாய் தமிழர் நாகரிகமே என்றும் கூறிய அவர் சிலர் அறிவர் குணா அவர்களின் பெயரைக் கேட்டாலே ஒவ்வாமை ஏற்பட்டுவிடும். திராவிடத்தில் வீழ்ந்த நாம் குணாவின் புத்தகங்களை பரப்புரை செய்து மாணவர்களை படிக்கச்செய்வதன் மூலமே இழந்த அறிவுச் செல்வத்தை மீட்டெடுக்க முடியும் என்றார். 

        நெய்வேலி பாலு அவர்களின் உரை வீச்சில்......
                          புத்தக வெளியீடு என்பது கலை பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தி காப்பாற்றுவது சிறப்பானதாகும். அறிவுச் சுரங்கமாக விளங்குகிறது அறிவர் குணாவின் புத்தகங்கள் என்றும், ஆய்வுகள் ஆழமானதாக அகலமானதாகவும் இருக்கிறது என்றும், தமிழர்களின் வரலாற்றுப்பெட்டகமாக விளங்குகிறது என்றும் கூறினார். தமிழர்களின் தொன்மையான அறிவியல் தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தமிழர்கள் வெறும் கோயில் குளங்களை மட்டும் கட்டிவைத்துள்ளார்கள் என்பது மட்டுமல்ல ஆதிகாலம் முதல் அனைத்து வகையான தொழிற் கருவிகளையும் கண்டுபிடித்து அதை முறையாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை நாம் இலகுவாக மறந்து விட்டோம். தமிழினம் வீழ்ந்தழிய வேண்டும் என்பதற்காகவே திராவிடச்சேறு அவன்மீது தெளிக்கப்பட்டது. நமது அடிமைத்தனத்தை உடைத்தெறிய அறிவர் குணாவின் புத்தகங்களை படித்திடவேண்டும் என்று விளக்கினார்.

            அரிமாவளவன் நெருப்புரை.........
                     எண்ணியம் தமிழர்கள் அனைவரும் படித்து பயன்பெறவேண்டிய ஓர் அருமையான புத்தகம் என்று புரியவைத்தது அவரின் துவக்கஉரை. மேலும் தமிழகமெங்கும் ஒரு மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. நாம் கனவு கண்ட காலம் தமிழின விடுதலை நம்மை நெறுங்கி வருகிறது என்றும், தமிழ்த்தேசியம் திராவிடக் கருத்தியலை நசுக்கி ஒடுக்கி மிதித்து விடுதலை பெறும் காலம் அறிவர் குணாவின் புத்தகங்களால் உருவாகியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஒருகாலத்தில் இதே தமிழ் மண்ணில் ஐயாவின் புத்தகங்களை தமிழர்களத்தினர் விற்கச் சென்ற இடமெல்லாம் செருப்படி பெற்றது இன்று நினைவுக்கு வருவதில் வியப்பானது என்னவென்றால் அது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்று ஐயாவின் கருத்துக்கள் பரவி வருவதுதான். அதனடிப்படையில் இன்று திராவிடம் மண்டியிட்டுக்கிடக்கிறது. தமிழர்களை திராவிடத்திற்கெதிராக பேசவைத்துள்ளது என்றும், மேலும் ஈழப் விடுதலை பெறுவதற்காகவே பதவிகளை துறக்கிறோம் என்று நாடகமாடும் கயவர்களின் செயல்கள் கேலிக்கூத்தாக உள்ளது கேவலமானது என்றும் திராவிடம் டெசோ என்ற செத்த சவத்தை தட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறது என்றும், திராவிடத்தை ஆதரிப்பவர்கள் பலர் அதைவிட்டு வெளியேறி வருவதையும் நாம் கவனிக்க வேண்டும் எனவும், தமிழின விடுதலையைப் பெற மாணவர்களே, இளைஞர்களே, பெண்களே அனைவரும் தமிழர் களத்திற்கு வாருங்கள் என்றும் கூறினார். மேலும் கரிவாசம் போன்ற தமிழின துரோகிகளை அம்பலம்படுத்திட வேண்டும் எனவும், இன்று மாணவர்களுக்குள்ளே நீரு பூத்த நெருப்பாக தமிழின விடுதலை கனன்றுகொண்டிருக்கிறது என்றும் அமெரிக்காவின் தீர்மானம் துரோகம் நிறைந்தது அது இலங்கையின் மீதுள்ள வணிக நலன்களுக்காக அக்கறை கொண்டு நடிக்கிறது எனவும், முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் இந்தியத்தின் கோரமுகமும், கம்யுனிசத்தின் புரட்டுகளும் தமிழர்களுக்கு புரிந்தது. இந்தியாவால் கொல்லப்பட்ட தமிழர்கள் தனித்துவிடப்பட்டதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. நமக்கென ஒரு நாடு வேண்டும் தமிழ்நாடுதான் தமிழர்களுக்கான முதல் நடாக இருக்கும் என்பதையும் ஈழம் அதன் குழந்தையாக பிறக்கும் என்பதையும் விளக்கினார். எனவே இங்கே விடுதலைப்போரை இப்போதே துவங்க வேண்டும் அதற்கு அனைவரும் அணியமாக வேண்டும். தமிழர் தேசம் மலர எண்ணற்றவர்கள் உயிர் ஈகம் செய்துள்ளதை றாம் மறந்துவிடக்கூடாது எனவும், தமிழறிஞர்களின் கனவுகள் நினைவாகும் காலத்தில் அதை அறுவடை செய்யப்பார்க்கின்றனர் அவர்களையும் நாடு அடையாளம் காண வேண்டும் எனவும், தமிழ்தேசியம் பேசும் தமிழர்கள் சினிமா மோகத்தில் இருக்கின்றனர் என்றிருந்தோம். ஆனால் உலகப்பரப்பில் தமிழர்கள்  அனைவரும் கூத்தாடிகளாகத்தான் இருக்கிறோம் என்பது வேதனையானது. தமிழ் அமைப்புகளுக்கு தமிழரல்லாதவர்கள் தலைவர்களாக இருக்கின்றனர் . ஈழப் போராளிகளின் போராட்டத்தைக்கண்டு மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் 20 நாடுகள் சுற்றிவளைத்து தாக்கியபோது நாம் வேடிக்கைமட்டும்தானே பார்த்தோம். அதனடிப்படையில் ராசபக்சே மட்டும் குற்றவாளியல்ல இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளை தவிக்கவிட்ட வகையில் நாமும்  குற்றவாளிகள்தான் இனியும் தமிழர்கள் விழித்தெழாவிட்டால் தமிழகமும் இன்னொரு முள்ளிவாய்க்காலாக மாறும். எனவே மாணவர்களும் இளைஞர்களும், பெண்களும் களமாட வேண்டும்! அப்போதுதான் விடுதலை அடையமுடியும் ஈழமும் மலரும் என்றார். 

     புதுவை தமிழர்களத்தின் வழக்கறிஞர் அணியின் புரட்சிகுமார்......
               அறிவர் குணாவின் புத்தகங்கள் மிகப்பெரிய ஆய்வுக்கடலாகும். அவற்றை அனைவரும் படித்ர் தமிழின நலனுக்காக போராடவேண்டும் எனவும் அதற்காக அண்ணன் அரிமா அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக வழிநடத்தவேண்டும் எனவும் பேசினார். 

    சொல்லாய்வு அறிஞர் அருளி அவர்கள்.......
           அறிவர் குணா ஒரு தவமுனிவர், அவர் எளிமை மிக்கவர், ஒற்றை முயற்சியால் ஆழமாக அகலமாக ஆய்வுகளை மேற்கொண்டவர். 45 ஆண்டுகளாக அறிவுத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு இனமீட்புப் போரைநிகழ்த்திவருபவர். அறிவாளிகள் என்போரும், கல்வியாளர்கள் என்போரும் அறிவர் குணாவின் புத்தகங்களை படிக்காமல் விட்டது பெருந்துன்பம் எனவும், 2000 ஆண்டுகளாக தன்மானம் இழந்து கிடக்கிறான் தமிழன் என்பதை வள்ளுவர் வழியில் குணா நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார். அவரின் புத்தகங்கள் பெரவலாக அனைவருக்கும் சென்றடையவேண்டும். தமிழ் மானம் என்பது ஒரு கருத்தியல் ஆகும். அத்தகைய கருத்தியலை நமக்கு ஊட்டி விழிப்படையச் செய்வது குணாவின் ஆய்வு நோக்கமாகும்.என்று தெளிவு படுத்தினார்.

அறிஞர் குணாவின் ஏற்புரை........
               45 ஆண்டுகளாக எழுதுகிறேன் ....ஆனால் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் என் பெயர் கிடையாது. இதுவும் எனக்குப் பெருமைதான் ஏனெனில் எனது கொள்ளை நிலைப்பாடு எனது தனித்தன்மையை இழக்கச்செய்யவில்லை. முற்போக்குகளும், பிற்போக்குகளும் எனக்கு கல்லறை கட்டி அதில் எனது புத்தகங்களையும் சேர்த்தே புதைத்தனர். தமிழ்தேசியம் பேசுபவர்கள்  நான் தனித்தமிழில் எழுதுவதில் அடம்பிடிப்பதாக சொல்லுவார்கள். ஆனால் அவர்களும் கூட எனக்கு வாய்க்கரிசிதான் போட்டார்கள். பல 100 ஆண்டுகளாக புதைந்து கிடந்த அறிவுப்புதையல் வெளிக்கொணர நான் ஒரு காரணமாயிருந்தேன். எனை புதைத்த இடத்திலிருந்து மீட்டெடுத்தவர் தமிழர்களத்தின் அரிமாவளவன் ஆவார் அதனால்தான் உயிரோடிருக்கிறேன். ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்கள் மறைக்கப்பட்டது வேதனையானதாகும். பல்லில்லாத புத்தமதமும், அருகம், சைனம், போன்றன யாவும் ஆசிவகர்கள் என்ற தமிழ் அறிவர்களிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டனர். பின்பு ஆசிவகத்தை அழித்தனர். அயோத்திதாசர் மிகப்பெரும் அறிவாளி ஆனால் அவர் ஏன் புத்தமதத்தை தழுவினார் என்பதை ஏற்க முடியவில்லை. அவரின் கருத்துக்களை கடன்வாங்கிய ராமசாமி நாயக்கர் அவரை இருட்டடிப்பு செய்தார். இதேபோல பல தமிழர்கள் வீசியெறியப்பட்ட விதைகளாயினர். ஆனால் அந்த விதைகள் முளைக்கும் என்று திராவிடம் அப்போது அறிந்திருக்கவில்லை. தலித் என்று மற்றொருபுறம் தமிழரை இருட்டடிப்பு செய்கிறது திராவிடம். ஆரியம் திராவிடம் எனடற உருப்படிகள் தமிழியத்தை அடிப்படையாக கொண்ட வரலாற்றியலை இருட்டடிப்பு செய்து விட்டது.  எனவே நாம் வரலாற்றை நேர்செய்ய வேண்டிய கட்டாய காலத்தில் இருக்கிறோம்! அணுவியம், வைசேடிகம் ( சிறப்பியம்), ஆசிவகம் என்ற மூன்று மெய்யியல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழர்களுக்கு புத்தகங்களாக வழங்கப்பட்டுள்ளது. நியாயம் என்ற அளவையியல் கருத்துமரபை ஆய்வு செய்ய மாணவர்கள் முன்வர வேண்டும். தமிழர்களின் தொன்மையான ஆய்வு மரபை மீட்க வேண்டும்!! என்று தனது ஏற்புரையை நிறைவு செய்தார்.


செய்தி - கருவைமுருகு