திங்கள், ஏப்ரல் 01, 2013

அறிவர் குணாஅவர்கள் எழுதிய எண்ணியம் புத்தக வெளியீடு!

30.03.13
புதுவை
                   அறிவர் குணா அவர்கள் எழுதிய “எண்ணியம்“ என்ற புத்தகம் வெளியீட்டு விழா புதுவை தமிழர்களத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. நிகழ்விற்கு தமிழர்களம்தின் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் தலைமை தாங்கினார். திரு.புரட்சிகுமார் மற்றும் தமிழர்கள செயல்வீரர்கள் முன்னிலை வகிக்க, நிகழ்வில் தமிழர்களத்தின் புதுவை மாநில செயலாளர் திரு. கோ.பிரகாசு,வரவேற்புரை நிகழ்த்தினார். புத்தகத்தை தமிழறிஞர் திரு.வீரசிங்கம் வெளியிட ந.மு. தமிழ்மணியும், திரு.நெய்வேலி பாலு அவர்களும் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். சொல்லாய்வறிஞர் திரு. அருளி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். விழாவின் நாயகன் திரு. அறிவர் குணா அவர்கள் ஏற்புரை வழங்கினார். விழாவின் முடிவில் தமிழர்களத்தின் மாவட்ட செய்திதொடர்பாளர் திரு.அன்பழகன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுபெற்றது. விழாவை மிக நேர்த்தியாக ஒருங்கிணைப்பு செய்தார் தமிழர்களத்தின் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் பேராசிரியர் திரு. சாம்சன் அவர்கள்.

                        முன்னதாக விழாவின் துவக்கத்தில் தமிழர் தேசிய பாடல்களை பாடினார் புலவர்............................... அதன்பிறகு கலைவாணர் நாடக அரங்கு சிறார்கள் நிகழ்த்திய “நந்தவனத்தில் ஓர் ஆண்டி“ என்ற விழிப்புணர்வு எழுச்சி நாடகம் தமிழர்களின் உணர்வுகளை தட்டிஎழுப்புவதாக இருந்தது மிகவும் பாராட்டுதலுக்குறியது அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்! அதே போல பிரகாசின் அருமை புதல்வி தமிழ்த்தாய் வேடமணிந்து தமிழினம் என்பதை ஏன் மறந்தாய் தமிழா? என்ற கேள்வியுடன் மாற்றானிடம் மண்டியிடாதே என்றும், தமிழ்நாடு தமிழருக்கே என்றும் வீரமுழக்கமிட்டது நம்மை எழுச்சிகொள்ளச் செய்வதாக இருந்தது. சிறுமிக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

இனி நிகழ்வில்......

     கோ.பிரகாசின் வரவேற்புரையில்........
                   நாகரிகங்கள் தோன்றியது தமிழர்களிடத்திலிருந்தே என்றும், வரலாற்றை முழுவதுமாக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும், தமிழர்களின் தொன்மையை மீட்க தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், எண்ணியம் எங்கோ தோன்றி வளர்ந்தது அல்ல அது தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தது என்றும் எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

     ந.மு.தமிழ்மணி தனது வாழ்த்துரையில்......
                              மிகப்பெரிய இடையூருக்கு நடுவே இந்த புத்தகத்தை அறிவர் குணா எழுதியிருக்கிறார். இப்புத்தகம் தமிழின மீட்சிக்கான ஓர் “கருத்தாயுதம்“ எனவும், பாரதியாரின் கோட்பாட்டுப்படி பிற நாட்டு சாத்திரங்கள் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்றார். அப்படி அனைத்தையும் தேடிச்சென்றால் அங்கெல்லாம் தமிழின் தொன்மங்களே எஞ்சியிருக்கிறது என்பது வியப்பளிக்கிறது என்றும், தமிழர்கள் எண்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது நாம் அறிந்து கொண்ணவேண்டிய ஒன்று என்றும், கணக்கதிகாரம் போன்ற தமிழ் புத்தகங்கள் தமிழர்களிடமிருந்து களவாடப்பட்ட உண்மை இப்போது வெளிப்படுகிறது எண்ணியம் என்ற கணிதம் தமிழர்களின் அறிவுச் செல்வத்தை வெளிப்படுத்துகிறது. ஆரியர்களின் இடைச்செருகல் நிறைந்திருக்கும் தொல்காப்பியம் தமிழில் கி.மு.7000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகும் என்றும், தமிழர்களின் முதல் நாகரிகம் இரும்பு நாகரிம் என்றும் உலக நாகரிகங்களின் தோற்றுவாய் தமிழர் நாகரிகமே என்றும் கூறிய அவர் சிலர் அறிவர் குணா அவர்களின் பெயரைக் கேட்டாலே ஒவ்வாமை ஏற்பட்டுவிடும். திராவிடத்தில் வீழ்ந்த நாம் குணாவின் புத்தகங்களை பரப்புரை செய்து மாணவர்களை படிக்கச்செய்வதன் மூலமே இழந்த அறிவுச் செல்வத்தை மீட்டெடுக்க முடியும் என்றார். 

        நெய்வேலி பாலு அவர்களின் உரை வீச்சில்......
                          புத்தக வெளியீடு என்பது கலை பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தி காப்பாற்றுவது சிறப்பானதாகும். அறிவுச் சுரங்கமாக விளங்குகிறது அறிவர் குணாவின் புத்தகங்கள் என்றும், ஆய்வுகள் ஆழமானதாக அகலமானதாகவும் இருக்கிறது என்றும், தமிழர்களின் வரலாற்றுப்பெட்டகமாக விளங்குகிறது என்றும் கூறினார். தமிழர்களின் தொன்மையான அறிவியல் தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தமிழர்கள் வெறும் கோயில் குளங்களை மட்டும் கட்டிவைத்துள்ளார்கள் என்பது மட்டுமல்ல ஆதிகாலம் முதல் அனைத்து வகையான தொழிற் கருவிகளையும் கண்டுபிடித்து அதை முறையாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை நாம் இலகுவாக மறந்து விட்டோம். தமிழினம் வீழ்ந்தழிய வேண்டும் என்பதற்காகவே திராவிடச்சேறு அவன்மீது தெளிக்கப்பட்டது. நமது அடிமைத்தனத்தை உடைத்தெறிய அறிவர் குணாவின் புத்தகங்களை படித்திடவேண்டும் என்று விளக்கினார்.

            அரிமாவளவன் நெருப்புரை.........
                     எண்ணியம் தமிழர்கள் அனைவரும் படித்து பயன்பெறவேண்டிய ஓர் அருமையான புத்தகம் என்று புரியவைத்தது அவரின் துவக்கஉரை. மேலும் தமிழகமெங்கும் ஒரு மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. நாம் கனவு கண்ட காலம் தமிழின விடுதலை நம்மை நெறுங்கி வருகிறது என்றும், தமிழ்த்தேசியம் திராவிடக் கருத்தியலை நசுக்கி ஒடுக்கி மிதித்து விடுதலை பெறும் காலம் அறிவர் குணாவின் புத்தகங்களால் உருவாகியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஒருகாலத்தில் இதே தமிழ் மண்ணில் ஐயாவின் புத்தகங்களை தமிழர்களத்தினர் விற்கச் சென்ற இடமெல்லாம் செருப்படி பெற்றது இன்று நினைவுக்கு வருவதில் வியப்பானது என்னவென்றால் அது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்று ஐயாவின் கருத்துக்கள் பரவி வருவதுதான். அதனடிப்படையில் இன்று திராவிடம் மண்டியிட்டுக்கிடக்கிறது. தமிழர்களை திராவிடத்திற்கெதிராக பேசவைத்துள்ளது என்றும், மேலும் ஈழப் விடுதலை பெறுவதற்காகவே பதவிகளை துறக்கிறோம் என்று நாடகமாடும் கயவர்களின் செயல்கள் கேலிக்கூத்தாக உள்ளது கேவலமானது என்றும் திராவிடம் டெசோ என்ற செத்த சவத்தை தட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறது என்றும், திராவிடத்தை ஆதரிப்பவர்கள் பலர் அதைவிட்டு வெளியேறி வருவதையும் நாம் கவனிக்க வேண்டும் எனவும், தமிழின விடுதலையைப் பெற மாணவர்களே, இளைஞர்களே, பெண்களே அனைவரும் தமிழர் களத்திற்கு வாருங்கள் என்றும் கூறினார். மேலும் கரிவாசம் போன்ற தமிழின துரோகிகளை அம்பலம்படுத்திட வேண்டும் எனவும், இன்று மாணவர்களுக்குள்ளே நீரு பூத்த நெருப்பாக தமிழின விடுதலை கனன்றுகொண்டிருக்கிறது என்றும் அமெரிக்காவின் தீர்மானம் துரோகம் நிறைந்தது அது இலங்கையின் மீதுள்ள வணிக நலன்களுக்காக அக்கறை கொண்டு நடிக்கிறது எனவும், முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் இந்தியத்தின் கோரமுகமும், கம்யுனிசத்தின் புரட்டுகளும் தமிழர்களுக்கு புரிந்தது. இந்தியாவால் கொல்லப்பட்ட தமிழர்கள் தனித்துவிடப்பட்டதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. நமக்கென ஒரு நாடு வேண்டும் தமிழ்நாடுதான் தமிழர்களுக்கான முதல் நடாக இருக்கும் என்பதையும் ஈழம் அதன் குழந்தையாக பிறக்கும் என்பதையும் விளக்கினார். எனவே இங்கே விடுதலைப்போரை இப்போதே துவங்க வேண்டும் அதற்கு அனைவரும் அணியமாக வேண்டும். தமிழர் தேசம் மலர எண்ணற்றவர்கள் உயிர் ஈகம் செய்துள்ளதை றாம் மறந்துவிடக்கூடாது எனவும், தமிழறிஞர்களின் கனவுகள் நினைவாகும் காலத்தில் அதை அறுவடை செய்யப்பார்க்கின்றனர் அவர்களையும் நாடு அடையாளம் காண வேண்டும் எனவும், தமிழ்தேசியம் பேசும் தமிழர்கள் சினிமா மோகத்தில் இருக்கின்றனர் என்றிருந்தோம். ஆனால் உலகப்பரப்பில் தமிழர்கள்  அனைவரும் கூத்தாடிகளாகத்தான் இருக்கிறோம் என்பது வேதனையானது. தமிழ் அமைப்புகளுக்கு தமிழரல்லாதவர்கள் தலைவர்களாக இருக்கின்றனர் . ஈழப் போராளிகளின் போராட்டத்தைக்கண்டு மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் 20 நாடுகள் சுற்றிவளைத்து தாக்கியபோது நாம் வேடிக்கைமட்டும்தானே பார்த்தோம். அதனடிப்படையில் ராசபக்சே மட்டும் குற்றவாளியல்ல இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளை தவிக்கவிட்ட வகையில் நாமும்  குற்றவாளிகள்தான் இனியும் தமிழர்கள் விழித்தெழாவிட்டால் தமிழகமும் இன்னொரு முள்ளிவாய்க்காலாக மாறும். எனவே மாணவர்களும் இளைஞர்களும், பெண்களும் களமாட வேண்டும்! அப்போதுதான் விடுதலை அடையமுடியும் ஈழமும் மலரும் என்றார். 

     புதுவை தமிழர்களத்தின் வழக்கறிஞர் அணியின் புரட்சிகுமார்......
               அறிவர் குணாவின் புத்தகங்கள் மிகப்பெரிய ஆய்வுக்கடலாகும். அவற்றை அனைவரும் படித்ர் தமிழின நலனுக்காக போராடவேண்டும் எனவும் அதற்காக அண்ணன் அரிமா அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக வழிநடத்தவேண்டும் எனவும் பேசினார். 

    சொல்லாய்வு அறிஞர் அருளி அவர்கள்.......
           அறிவர் குணா ஒரு தவமுனிவர், அவர் எளிமை மிக்கவர், ஒற்றை முயற்சியால் ஆழமாக அகலமாக ஆய்வுகளை மேற்கொண்டவர். 45 ஆண்டுகளாக அறிவுத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு இனமீட்புப் போரைநிகழ்த்திவருபவர். அறிவாளிகள் என்போரும், கல்வியாளர்கள் என்போரும் அறிவர் குணாவின் புத்தகங்களை படிக்காமல் விட்டது பெருந்துன்பம் எனவும், 2000 ஆண்டுகளாக தன்மானம் இழந்து கிடக்கிறான் தமிழன் என்பதை வள்ளுவர் வழியில் குணா நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார். அவரின் புத்தகங்கள் பெரவலாக அனைவருக்கும் சென்றடையவேண்டும். தமிழ் மானம் என்பது ஒரு கருத்தியல் ஆகும். அத்தகைய கருத்தியலை நமக்கு ஊட்டி விழிப்படையச் செய்வது குணாவின் ஆய்வு நோக்கமாகும்.என்று தெளிவு படுத்தினார்.

அறிஞர் குணாவின் ஏற்புரை........
               45 ஆண்டுகளாக எழுதுகிறேன் ....ஆனால் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் என் பெயர் கிடையாது. இதுவும் எனக்குப் பெருமைதான் ஏனெனில் எனது கொள்ளை நிலைப்பாடு எனது தனித்தன்மையை இழக்கச்செய்யவில்லை. முற்போக்குகளும், பிற்போக்குகளும் எனக்கு கல்லறை கட்டி அதில் எனது புத்தகங்களையும் சேர்த்தே புதைத்தனர். தமிழ்தேசியம் பேசுபவர்கள்  நான் தனித்தமிழில் எழுதுவதில் அடம்பிடிப்பதாக சொல்லுவார்கள். ஆனால் அவர்களும் கூட எனக்கு வாய்க்கரிசிதான் போட்டார்கள். பல 100 ஆண்டுகளாக புதைந்து கிடந்த அறிவுப்புதையல் வெளிக்கொணர நான் ஒரு காரணமாயிருந்தேன். எனை புதைத்த இடத்திலிருந்து மீட்டெடுத்தவர் தமிழர்களத்தின் அரிமாவளவன் ஆவார் அதனால்தான் உயிரோடிருக்கிறேன். ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்கள் மறைக்கப்பட்டது வேதனையானதாகும். பல்லில்லாத புத்தமதமும், அருகம், சைனம், போன்றன யாவும் ஆசிவகர்கள் என்ற தமிழ் அறிவர்களிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டனர். பின்பு ஆசிவகத்தை அழித்தனர். அயோத்திதாசர் மிகப்பெரும் அறிவாளி ஆனால் அவர் ஏன் புத்தமதத்தை தழுவினார் என்பதை ஏற்க முடியவில்லை. அவரின் கருத்துக்களை கடன்வாங்கிய ராமசாமி நாயக்கர் அவரை இருட்டடிப்பு செய்தார். இதேபோல பல தமிழர்கள் வீசியெறியப்பட்ட விதைகளாயினர். ஆனால் அந்த விதைகள் முளைக்கும் என்று திராவிடம் அப்போது அறிந்திருக்கவில்லை. தலித் என்று மற்றொருபுறம் தமிழரை இருட்டடிப்பு செய்கிறது திராவிடம். ஆரியம் திராவிடம் எனடற உருப்படிகள் தமிழியத்தை அடிப்படையாக கொண்ட வரலாற்றியலை இருட்டடிப்பு செய்து விட்டது.  எனவே நாம் வரலாற்றை நேர்செய்ய வேண்டிய கட்டாய காலத்தில் இருக்கிறோம்! அணுவியம், வைசேடிகம் ( சிறப்பியம்), ஆசிவகம் என்ற மூன்று மெய்யியல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழர்களுக்கு புத்தகங்களாக வழங்கப்பட்டுள்ளது. நியாயம் என்ற அளவையியல் கருத்துமரபை ஆய்வு செய்ய மாணவர்கள் முன்வர வேண்டும். தமிழர்களின் தொன்மையான ஆய்வு மரபை மீட்க வேண்டும்!! என்று தனது ஏற்புரையை நிறைவு செய்தார்.


செய்தி - கருவைமுருகு


                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக