புதன், ஜனவரி 25, 2017

மனுசங்கடா நாங்க மனுசங்கடா !

மாணவர்களோடும் மக்களோடும் பல்வேறு களங்களில் நின்று போராடிய தமிழர்களத்தின் தம்பி தங்கையருக்கு என் வணக்கமும்! வாழ்த்துக்களும்!
தமிழர்களம் என்ற அடையாளத்தை உருக்கி இனம் என்கிற உலையில் ஒன்றித்ததை நினைத்து பெருமையடைகிறேன்!
என்னைவிடக் களம் உயர்ந்தது! களத்தைவிட இந்த நாடு உயர்ந்தது! என்பதை எப்போதும் மனதில் நிறுத்து!!
போராட்டம் அரசு நிர்வாகத்தின் (நீதிமன்றம், போலீசு, அரசியல் கட்சிகள், தரகர்கள்,) அடிவயிற்றைக் கலங்கிவிட்டது!
எனவே,
கீழவெண்மணியில், பரமக்குடியில், குறிஞ்சாக்குளத்தில், தாமிரபரணியில், முல்லைப்பெரியாற்றில், கூடங்குளத்தில், தங்கவயலில், பெங்களூரில், உஞ்சனையில், கொடியங்குளத்தில் போன்ற களங்களில் நடத்திய அதே கொலைவெறியாட்டத்தை மீண்டும் மெரீனாவில், சென்னையில், அலங்காநல்லூரில், தமுக்கத்தில் என்று நாடெங்கும் இந்தக் காட்டுமிராண்டிகள் அரங்கேற்றியிருக்கின்றனர்!
சேரிகள், குப்பங்கள், சிறுபான்மையர், நேர்மையாளர்கள், மாணவர்கள், அப்பாவிகளே எப்பொழும் இவர்களது இலக்கு! இப்போதும் அவர்களே இலக்காகியிருக்கின்றனர்!!
அக்கிரகாரங்களிலோ, அன்னியர் கோலோச்சும் வீதிகளிலோ, நகரங்களிலோ காவல்துறை வன்முறை நடந்ததாக வரலாறு கிடையாது
இந்தச் சேரிகளும், குப்பங்களும், சிறுபான்மையரும், நேர்மையாளர்களும், மாணவர்களும், அப்பாவிகளும் ஒன்று சேரவிடாமல் தடுப்பதே தரகர்கள் நடத்தும் சதியாட்டம்!
“கட்சிகளை உள்ளே விடமாட்டோம்” என்று மாணவர்கள் முடிவெடுத்தபோது கட்சிகளின் அடுத்தகட்டத் தரகரர்கள் உள்ளே நுழைந்தனர்!
வழக்கமாக மூக்கை நுழைக்கும் “திராவிடர்” வைகோ வரவில்லை. ஆனால் அவரது பகராளி உள்ளே இருந்தார்! திராவிட ஆக்டோபசின் அனைத்து பகராளிகளும் மிகவும் பக்கத்தில் வந்து குந்திக் கொண்டர்! இரண்டாம் நாளே முடிவுரையின் தொடக்கம் அவர்களால் எழுதப்பட்டது!
தேவகோட்டையில் அதாவது தனது சொந்த மண்ணில் எந்தச் சல்லிக்கட்டுக்காக தொடர்ந்து பல ஆண்டுகள் பேராடிய இமயம் சரவணனை உள்ளே வரவிடாமல் சிலர் தடுத்தனர்! அவர்களுக்கு யார் எவர் என்ற அடையாளம் தெரியவில்லை!
சூழ்ச்சி, மறைமுக இலக்கு, தரகு, உள்ளொன்று புறமொன்று, தான் தனது என்று தன்னைச் சுற்றி நடத்தும் போராட்டம் என்று கூடங்குளம் போன்ற மற்ற போராட்டங்களில் பார்த்த அதே பாத்திரங்கள் இந்தப் போராட்டத்திலும் களமாடின!
போலிகளை நம்புவதாலேயே போராட்டங்கள் சிதைக்கப்படுகின்றன என்று இப்போதாவது இந்த இனம் உணருமானால் நாளைய நல்லவைகளுக்கு அது நல்லது!
இதற்கிடையில், “சல்லிக்கட்டுக்காக போராடுகிற இந்த மாணவர்கள் ஏன் கடந்த காலங்களில் இதைவிடக் கொடுமையான சூழல்களில் போராடவில்லை” என்று ஒருவிதத்தில் ஞாயமான ஒரு கேள்வி குற்றச்சாட்டாக, குறையாக, குமுறலாக எழுந்தது!
உலகத்தில் பல நூறு ஞாயமான போராட்டங்கள் நடக்கின்றன! இதில் பங்கேற்றவன் அதில் ஏன் பங்கேற்கவில்லை? என்று கேள்வி எழுப்புவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல!
இரண்டாவது அதைவிட முக்கியமானது என்னவென்றால், நடந்த போராட்டம் வெறுமனவே சல்லிக்கட்டுக்காக மட்டுமே கிளர்ந்து எழுந்த கூட்டம் அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
எதிரிகளும் நம் நண்பர்களும் நம் தமிழர்களும் இதைப் புரிய வேண்டும்!
தொடர் தாக்குதலுக்கும், வன்முறைக்கும், அநீதிக்கும் இலக்கான தமிழினம் பொறுத்துப் பொறுத்து அடக்கி வைத்து அடக்கி வைத்து இறுதியில் ஏதோ ஒரு புள்ளியில் ஆர்ப்பரித்து எழுந்துவிட்டது! அவ்வளவுதான்!
காவிரியில் துரோகம், முல்லைப் பெரியாற்றில் துரோகம், கூடங்குளத்தில் துரோகம், ஈழத்தில் துரோகம், ஏதிலியர் முகாம்களில் துரோகம், கீழவெண்மணியில் துரோகம், உஞ்சனையில் துரோகம், குறிஞ்சாக்குளத்தில் துரோகம், கொடியங்குளத்தில் துரோகம், கடற்கரையில் துரோகம், சேரிகளில் துரோகம், விவசாயிகளுக்குத் துரோகம், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துரோகம், பெண்களுக்குத் துரோகம், இசுலாமியருக்குத் துரோகம், கல்வியில் துரோகம், நிர்வாகத்தில் துரோகம், நீதியில் துரோகம் இப்படி அரசுகள் நம் மக்களை மிக மிக இழிவாக நீண்டகாலம் நடத்தியதைப் பார்த்துப் பார்த்து இறுதியில் இப்படி எழுந்திருக்கிறது!
குரல் சல்லிக்கட்டுகானதே தவிர அதன் ஆற்றல் நீண்ட அடக்குமுறையிலிருந்து திமிரிப் பிறந்திருக்கிறது!
ஒவ்வொரு நல்ல கட்சியும் இயக்கமும் ஏதோ ஒரு மைய இலக்கை வைத்துப் போராடுகிறது!
ஈழத்திற்காக குரல் கொடுக்கிறவன் இங்குள்ள தமிழனுக்கு எதிரியல்ல!
அல்லது இங்குள்ள தமிழனுக்குக் குரல் கொடுக்கிறவன் ஈழத்திற்கு எதிரியல்ல!
அடக்கத் துடிக்கிற அத்தனை நாய்களும் செந்நாய்கள் போல ஒன்றாய் நிற்கின்றன!
அடங்க மறுக்கிற நம் மக்கள் மட்டுமே பிரித்தாளப்படுகிறோம்!
நம் வரலாற்றில் மற்றொரு களம் தற்காலிகமாக மௌனித்திருக்கிறது!
போர் தொடர்கிறது! போரில் வெற்றி பெறுவதே இறுதி இலக்கு!
சண்டைகளில் தோற்று போரில் வெல்வதே சிறந்தது!
பாசறைப் பணிகள் நடக்கட்டும்!
அரிமாவளவன்
பொதுச் செயலாளர்
தமிழர்களம்

செவ்வாய், ஜனவரி 17, 2017

முள்ளிவாய்காலா தமிழகம்?

18.01.17
கரூர்
              தமிழகம் இன்னொரு முள்ளிவாய்காலா? ஏறுதழுவலுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும், உழவர் நலனில் அக்கறை செலுத்தவும், உழவர்களுக்கு தேவையான நிவரானங்களைச் செய்யவும் கோரி தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராடி வருகின்றனர். அவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவோ, தமிழ் அமைப்புகளின் பின்புலமோ அல்லாமல் தாமாகவே முன்வந்து அறவழியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

       தமிழக திராவிட கட்சிகள் சில அவர்களின் போராட்டங்களை மடை மாற்றம் செய்யவும், தங்களுக்கு சாதகமாக திசை திருப்பவும் முயன்று தோற்றன.
   இப்போது மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் தயங்கவில்லை. இந்திய தேசியத்திற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் திரும்பியுள்ள மாணவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு அச்சுறுத்தல்களையும், இழிசெயல்களையும் செய்து வருகிறது மத்திய மாநில அரசுகள்..... 

       பன்னாட்டு வர்த்தக கைகூலிகளாக செயல்படும் மத்திய அரசும், அதன் அடியாளாய் செயல்படும் மாநில அரசும் எப்படியேனும் இப்போராட்டத்தை நசுக்கிட முயற்சித்து அலங்காநல்லூரை மற்றுமொரு முள்ளிவாய்க்காலாக மாற்றத் துடிக்கிறது.
      இந்தச் சூழலில் தமிழ் அமைப்புகள் ஒன்றாகத் திரண்டு மாணவர் போராட்டம் வெல்லவும், அவர்கள் காக்கப்படவும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். அதற்கு தமிழர் களம் எப்போதும் துணையிருக்கும் என்றும் அறிவிக்கிறது.

17.01.2017
கரூர்


ஏறுதழுவலுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் கரூர் பேருந்து நிலையத்தின் அருகில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் தன்னெழுச்சியாக கலந்துகொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
செய்தி - கருவை முருகு. தமிழர் களம்- கரூர்

















புதன், ஜனவரி 11, 2017

ஏறுதழுவலுக்கான எழுச்சிப் பேரணி

11.01.17
கரூர்
             ஏறுதழுவலுக்கு ஆதரவாக மாணவர்கள் ஒருங்கிணைத்த தன்னெழுச்சிப் பேரணி எவ்விதத் தடங்களும் இன்றி மிக நேர்த்தியாக நடைபெற்றது.

       நிகழ்வில் காளைகளும், சேவல்களும், நாட்டு நாய்களும், ரேக்லா வண்டியுடனும் உழவர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் எவ்வித வேறுபாடும் இன்றி கலந்து கொண்டனர். 
  வழிநெடுக மாணவர்களின் எழுச்சிக் குரல் வின்னைப்பிளந்தது! பொதுமக்களும் இந்த மாணவர்கள் நிகழ்த்திய பேரணியில் தாங்களாகவே வந்து கலந்து கொண்டனர். பெண்களும், குழந்தைகளும் பேரணி செல்கையில் தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர். 

                  இந்த தன்னெழுச்சிப் பேரணியில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது சுய அடையாளமின்றி பங்கெடுத்தனர். எவ்வித அசம்பாவிதமும் இன்றி மிக நேர்த்தியாக பேரணி கரூர் நகரைச் சுற்றி வந்து பேருந்து நிலையம் அருகில் முடிவுபெற்றது.
                     இந்த பேரணியை சமூக ஆர்வலர் முருகேசன், கனி ஓவியா, லோகேஸ்வரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
                    பீட்டாவை தடைசெய்ய வேண்டும் எனவும், தடையை மீறி ஏறுதழுவல், சேவல் சண்டை, ரேக்லா வண்டி ஓட்டம், குதிரை வண்டி ஓட்டம், ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். உழவர்களின் துயரங்கள் ஒருபக்கம் நம்மை வாடச் செய்தாலும், இதுபோன்ற மரபு சார்ந்த பண்பாட்டு விளையாட்டுக்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும். தமிழர்கள் சாதிகடந்து மதம் கடந்து ஒன்றிணைந்து வெற்றிபெற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்தது.