வெள்ளி, மே 19, 2017

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கரூர்.
19.05.2017

                          2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொடுலையின் துயரத்தையும், தமிழர்கள் நாம் செய்யத் தவறியவைகளையும், இனி செய்ய வேண்டியவைகளையும் நினைவுகூறும் வகையில் தமிழர்களத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. 

தமிழர் களத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் திரு. தமிழ்முதல்வன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.  மேற்கு மண்டலப் பொறுப்பாளர் திரு. அரசு தலைமைதாங்கினார். 
                  எதிரிகளின் மீதான வன்மத்தைச் சுமந்துகொண்டிருக்கும் நாம் நமது இழந்த உரிமைகளை மீட்டேயாக வேண்டும் எனவும், இப்போது நாம் செய்ய வேண்டிய கடமைகளை காலம் தாழ்த்தாது செய்திட வேண்டும் எனவும், தனது உரையில் தெரிவித்ததுடன், மேலும் ஈழப் போரில் வீரச்சாவடைந்த வீரர்களுக்கும், அப்பாவித் தமிழர்களுக்கும்  தீப ஒளியேற்றி தமது மௌன அஞ்சலியை செலுத்தினார்கள்.
வியாழன், மே 11, 2017

கண்ணகி கோட்டம் முழு நிலவு விழா - 2017

10.05.2017
கம்பம் - கூடலூர்

                    சிலப்பதிகாரத்தின் காப்பியத்தலைவி கற்புக்கரசி கண்ணகித் தெய்வத்தின் சித்திரை முழு நிலவு பெருவிழா இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

                   வழக்கம்போல கேரள அரசின் கெடுபிடிகளுக்கிடையில் மக்களின் பயணம் மிகுந்த சிரமமாக இருந்தது. அதே வேளையில் பளியன் குடியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து வந்து கண்ணகி கோட்டத்தின் பெருவிழாவில் கலந்துகொண்டனர். 

                     கண்ணகி கோட்டத்தின் வடக்கு வாயிலின் வழியாக கோயிலுக்குள் நுழைவதற்கு கேரள  காவலர்கள் தடுத்தனர். ஆனால் நமது தமிழர்களத்தின் உறவுகள் அவர்களிடம் சண்டையிட்டு வடக்கு வாயில்வழியாகவே சென்று கண்ணகியை வழிபட்டனர். 

                      ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது கேரள அரசிடம் கைகட்டி நின்று  அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் தமிழக அரசு தன் மௌனத்தை உடனே கலைத்துவிட்டு கம்பம் - கூடலூர் பகுதியினைச் சேர்ந்த பளியன் குடி கிராமத்திலிருந்து வெறும் மூன்று மைல் தொலைவிற்கு பாதையமைத்து விட்டால் தமிழகத்திலிருந்து அனைத்து நாட்களும் கண்ணகி கோட்டத்திற்கு சென்றுவரலாம். கேரளா மாநிலத்தின் எல்லையிலிருந்து 16 மைல்கள் அவர்களின் கரட்டுந்தில் மிக மோசமான, ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது தவிர்க்கப்படுவதுடன் நமது சொத்தான கண்ணகி கோட்டத்தின் உரிமையும் பாதுகாக்கப்படும். 

                       இந்த ஆண்டு கரூர் மாவட்ட கண்ணகி கோட்ட திருப்பணிக்குழு சார்பாக திரு.தமிழ்ச்சேரன் அவர்கள், போக்குவரத்து அமைச்சர் விசயபாஸ்கர் அவர்களிடம் விழாக்கால சிறப்புப் பேருந்து விட மனு அளித்தார். ஆனால் அடுத்த ஆண்டு கண்டிப்பாக அனைத்து  தமிழகத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் பேருந்து இயக்க ஆலோசிப்பதாக கூறினார். 
                                                                                                            அரசு                         
                                                                                     தமிழர் களம்   ஊடகப்பிரிவு
                                                                                                         கருவூர்
                                                                                                       திங்கள், பிப்ரவரி 06, 2017

நிம்மதி இழக்கும் நாடு!

06.02.17

சினம் கொள்ளாத இனம் பிணத்துக்குச் சமம்!
அரியலூருக்கு அருகிலுள்ள சிறுகடம்பூரில் இளம்பெண் நந்தினியைக் கூட்டாகப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொலை செய்தது தொடர்பாக நேற்று முழுவதும் பிள்ளையின் குடும்பத்தாரையும் காவல்நிலையத்தையும் மாவட்ட ஆட்சியரையும் வழக்கறிஞர் சசிகுமார் அவர்களையும் தமிழர்களம் சார்பாக வழக்கறிஞர் திரு. இராசன், மேற்கு மண்டலப் பொறுப்பாளர் திரு. அரசு, அரியலூர் தமிழர்கள உறுப்பினர் சரவணன், திருச்சி தமிழர்களம் சார்பாக உறையூர் கிருபா, பெரம்பலூர் வழக்கறிஞர் கென்னடி ஆகியோர் சந்தித்து செய்திகளைச் சேகரித்து உணர்வுகளை உள்வாங்கி வந்திருக்கின்றனர்!
காவல்துறையின் அசட்டைத்தனம், உண்மைகளையும் குறைகளையும் சொல்லவந்தவர்களை வழக்கம்போல உதாசீனப்படுத்தியது ஆகியன நடக்காதிந்தால் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்!
ஒரு பெண்ணை அதுவும் காதலிப்பதாகக் கூறி கடைசியில் கொடூரமாக சிதைத்தது இழிவினும் இழிவு! அதைவிடக் கொடுமை அவளைக் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததும் பின்னர் அவளைக் கொலைசெய்ததும்! இவைகளையெல்லாம் விலங்குகள்கூடச் செய்ய மாட்டா! இவர்களை இனிச் சமூகத்தில் உலவ விடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது! இவர்களைச் சட்டத்தின் இடுக்குகள் வழியாகத் தப்பவிடுவது என்பது இவர்கள் போன்ற குற்றவாளிகளை ஊக்கப்படுத்துவதேயாகும்! சமூகத்தில் இது போன்ற கொடுமைகள் மறைய வேண்டுமானால் இந்த ஈனர்களுக்குக் கொடுந்தண்டனை கொடுத்தேயாகவேண்டும்!
இவர்கள் ஒரு மதவெறிப் போர்வையை போர்த்திக் கொண்டிருப்பதனால், இக்கொடியவர்களைத் தப்புவிக்க இக் கும்பலின் மாவட்டச்செயலாளர் ஒருவன் குற்றவாளிகள் சார்பாக தரகு வேலை பார்ப்பது என்பது இதில் மட்டுமல்ல இது போன்ற பல குற்றங்களில் அவன் அப்படியே நடந்திருக்கிறான்! இவனைத் தப்புவிக்கவிட்டால் நாடு நிம்மதி இழக்கும்!
என்ன செய்வது?
பிள்ளையின் குடும்பத்திற்கு எந்த இழப்பீடு கொடுத்தாலும் அது உயிருக்க இணையாகாது என்றபோதும், குற்றத்தில் ஈடுபட்டவர்களின் முழுச் சொத்தையும் பறிமுதல் செய்து உரிய இழப்பீட்டை அரசு செய்ய வேண்டும்!
கேவலமாக நடந்து கொண்ட அத்தனைக் காவல்துறையினரும் தண்டிக்கப்பட வேண்டும்!
நீதிபதியின் மகள், காவல்துறையினரின் பிள்ளைகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தமிழிசை சவுந்திரராசனின் பேத்திகள் உள்ளிட்ட எந்தப் பெண்ணுக்கும் இக்கொடுமை இனி நடக்கக்கூடாது என்றால் இக் குற்றவாளிகளுக்குக் கொடுந்தண்டனை வழங்கியே ஆக வேண்டும்! இதில் சாதி, மதம் ஏன் இனம்கூட பார்க்காதீர்கள்! மனிதம் சிதைக்கப்பட்டிருக்கிறது! மனிதம் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது! மனித ரத்தம் மலிவாகச் சிந்தியிருக்கிறது! அவ்வளவுதான்!
பரபரப்பு அடங்கியதும் சட்டத்தின் ஓட்டைகளின் இந்தக் கொடியவர்கள் தப்பிக்கவே முனைவார்கள்! அதை தமிழர்களம் உள்ளிட்ட இந்தச் சமூகம் விழிப்பான ஒரு காவலன்போல நின்று காத்திட வேண்டும்!
மேலே குறிப்பிட்டவைகளை முன்னிறுத்திப் போராட சில பொறுப்புகளைப் உரியவர்களிடம் பணித்திருக்கிறேன்! விரைவில் செய்தி தருகிறேன்!
ஆய்வறிக்கையின் விவரங்களை மக்கள் நடுவில் கொண்டு செல்ல அணியமாகிறோம்!
அரிமாவளவன்
பொதுச்செயலாளர்
தமிழர்களம்

புதன், ஜனவரி 25, 2017

மனுசங்கடா நாங்க மனுசங்கடா !

மாணவர்களோடும் மக்களோடும் பல்வேறு களங்களில் நின்று போராடிய தமிழர்களத்தின் தம்பி தங்கையருக்கு என் வணக்கமும்! வாழ்த்துக்களும்!
தமிழர்களம் என்ற அடையாளத்தை உருக்கி இனம் என்கிற உலையில் ஒன்றித்ததை நினைத்து பெருமையடைகிறேன்!
என்னைவிடக் களம் உயர்ந்தது! களத்தைவிட இந்த நாடு உயர்ந்தது! என்பதை எப்போதும் மனதில் நிறுத்து!!
போராட்டம் அரசு நிர்வாகத்தின் (நீதிமன்றம், போலீசு, அரசியல் கட்சிகள், தரகர்கள்,) அடிவயிற்றைக் கலங்கிவிட்டது!
எனவே,
கீழவெண்மணியில், பரமக்குடியில், குறிஞ்சாக்குளத்தில், தாமிரபரணியில், முல்லைப்பெரியாற்றில், கூடங்குளத்தில், தங்கவயலில், பெங்களூரில், உஞ்சனையில், கொடியங்குளத்தில் போன்ற களங்களில் நடத்திய அதே கொலைவெறியாட்டத்தை மீண்டும் மெரீனாவில், சென்னையில், அலங்காநல்லூரில், தமுக்கத்தில் என்று நாடெங்கும் இந்தக் காட்டுமிராண்டிகள் அரங்கேற்றியிருக்கின்றனர்!
சேரிகள், குப்பங்கள், சிறுபான்மையர், நேர்மையாளர்கள், மாணவர்கள், அப்பாவிகளே எப்பொழும் இவர்களது இலக்கு! இப்போதும் அவர்களே இலக்காகியிருக்கின்றனர்!!
அக்கிரகாரங்களிலோ, அன்னியர் கோலோச்சும் வீதிகளிலோ, நகரங்களிலோ காவல்துறை வன்முறை நடந்ததாக வரலாறு கிடையாது
இந்தச் சேரிகளும், குப்பங்களும், சிறுபான்மையரும், நேர்மையாளர்களும், மாணவர்களும், அப்பாவிகளும் ஒன்று சேரவிடாமல் தடுப்பதே தரகர்கள் நடத்தும் சதியாட்டம்!
“கட்சிகளை உள்ளே விடமாட்டோம்” என்று மாணவர்கள் முடிவெடுத்தபோது கட்சிகளின் அடுத்தகட்டத் தரகரர்கள் உள்ளே நுழைந்தனர்!
வழக்கமாக மூக்கை நுழைக்கும் “திராவிடர்” வைகோ வரவில்லை. ஆனால் அவரது பகராளி உள்ளே இருந்தார்! திராவிட ஆக்டோபசின் அனைத்து பகராளிகளும் மிகவும் பக்கத்தில் வந்து குந்திக் கொண்டர்! இரண்டாம் நாளே முடிவுரையின் தொடக்கம் அவர்களால் எழுதப்பட்டது!
தேவகோட்டையில் அதாவது தனது சொந்த மண்ணில் எந்தச் சல்லிக்கட்டுக்காக தொடர்ந்து பல ஆண்டுகள் பேராடிய இமயம் சரவணனை உள்ளே வரவிடாமல் சிலர் தடுத்தனர்! அவர்களுக்கு யார் எவர் என்ற அடையாளம் தெரியவில்லை!
சூழ்ச்சி, மறைமுக இலக்கு, தரகு, உள்ளொன்று புறமொன்று, தான் தனது என்று தன்னைச் சுற்றி நடத்தும் போராட்டம் என்று கூடங்குளம் போன்ற மற்ற போராட்டங்களில் பார்த்த அதே பாத்திரங்கள் இந்தப் போராட்டத்திலும் களமாடின!
போலிகளை நம்புவதாலேயே போராட்டங்கள் சிதைக்கப்படுகின்றன என்று இப்போதாவது இந்த இனம் உணருமானால் நாளைய நல்லவைகளுக்கு அது நல்லது!
இதற்கிடையில், “சல்லிக்கட்டுக்காக போராடுகிற இந்த மாணவர்கள் ஏன் கடந்த காலங்களில் இதைவிடக் கொடுமையான சூழல்களில் போராடவில்லை” என்று ஒருவிதத்தில் ஞாயமான ஒரு கேள்வி குற்றச்சாட்டாக, குறையாக, குமுறலாக எழுந்தது!
உலகத்தில் பல நூறு ஞாயமான போராட்டங்கள் நடக்கின்றன! இதில் பங்கேற்றவன் அதில் ஏன் பங்கேற்கவில்லை? என்று கேள்வி எழுப்புவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல!
இரண்டாவது அதைவிட முக்கியமானது என்னவென்றால், நடந்த போராட்டம் வெறுமனவே சல்லிக்கட்டுக்காக மட்டுமே கிளர்ந்து எழுந்த கூட்டம் அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
எதிரிகளும் நம் நண்பர்களும் நம் தமிழர்களும் இதைப் புரிய வேண்டும்!
தொடர் தாக்குதலுக்கும், வன்முறைக்கும், அநீதிக்கும் இலக்கான தமிழினம் பொறுத்துப் பொறுத்து அடக்கி வைத்து அடக்கி வைத்து இறுதியில் ஏதோ ஒரு புள்ளியில் ஆர்ப்பரித்து எழுந்துவிட்டது! அவ்வளவுதான்!
காவிரியில் துரோகம், முல்லைப் பெரியாற்றில் துரோகம், கூடங்குளத்தில் துரோகம், ஈழத்தில் துரோகம், ஏதிலியர் முகாம்களில் துரோகம், கீழவெண்மணியில் துரோகம், உஞ்சனையில் துரோகம், குறிஞ்சாக்குளத்தில் துரோகம், கொடியங்குளத்தில் துரோகம், கடற்கரையில் துரோகம், சேரிகளில் துரோகம், விவசாயிகளுக்குத் துரோகம், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துரோகம், பெண்களுக்குத் துரோகம், இசுலாமியருக்குத் துரோகம், கல்வியில் துரோகம், நிர்வாகத்தில் துரோகம், நீதியில் துரோகம் இப்படி அரசுகள் நம் மக்களை மிக மிக இழிவாக நீண்டகாலம் நடத்தியதைப் பார்த்துப் பார்த்து இறுதியில் இப்படி எழுந்திருக்கிறது!
குரல் சல்லிக்கட்டுகானதே தவிர அதன் ஆற்றல் நீண்ட அடக்குமுறையிலிருந்து திமிரிப் பிறந்திருக்கிறது!
ஒவ்வொரு நல்ல கட்சியும் இயக்கமும் ஏதோ ஒரு மைய இலக்கை வைத்துப் போராடுகிறது!
ஈழத்திற்காக குரல் கொடுக்கிறவன் இங்குள்ள தமிழனுக்கு எதிரியல்ல!
அல்லது இங்குள்ள தமிழனுக்குக் குரல் கொடுக்கிறவன் ஈழத்திற்கு எதிரியல்ல!
அடக்கத் துடிக்கிற அத்தனை நாய்களும் செந்நாய்கள் போல ஒன்றாய் நிற்கின்றன!
அடங்க மறுக்கிற நம் மக்கள் மட்டுமே பிரித்தாளப்படுகிறோம்!
நம் வரலாற்றில் மற்றொரு களம் தற்காலிகமாக மௌனித்திருக்கிறது!
போர் தொடர்கிறது! போரில் வெற்றி பெறுவதே இறுதி இலக்கு!
சண்டைகளில் தோற்று போரில் வெல்வதே சிறந்தது!
பாசறைப் பணிகள் நடக்கட்டும்!
அரிமாவளவன்
பொதுச் செயலாளர்
தமிழர்களம்

செவ்வாய், ஜனவரி 17, 2017

முள்ளிவாய்காலா தமிழகம்?

18.01.17
கரூர்
              தமிழகம் இன்னொரு முள்ளிவாய்காலா? ஏறுதழுவலுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும், உழவர் நலனில் அக்கறை செலுத்தவும், உழவர்களுக்கு தேவையான நிவரானங்களைச் செய்யவும் கோரி தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராடி வருகின்றனர். அவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவோ, தமிழ் அமைப்புகளின் பின்புலமோ அல்லாமல் தாமாகவே முன்வந்து அறவழியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

       தமிழக திராவிட கட்சிகள் சில அவர்களின் போராட்டங்களை மடை மாற்றம் செய்யவும், தங்களுக்கு சாதகமாக திசை திருப்பவும் முயன்று தோற்றன.
   இப்போது மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் தயங்கவில்லை. இந்திய தேசியத்திற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் திரும்பியுள்ள மாணவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு அச்சுறுத்தல்களையும், இழிசெயல்களையும் செய்து வருகிறது மத்திய மாநில அரசுகள்..... 

       பன்னாட்டு வர்த்தக கைகூலிகளாக செயல்படும் மத்திய அரசும், அதன் அடியாளாய் செயல்படும் மாநில அரசும் எப்படியேனும் இப்போராட்டத்தை நசுக்கிட முயற்சித்து அலங்காநல்லூரை மற்றுமொரு முள்ளிவாய்க்காலாக மாற்றத் துடிக்கிறது.
      இந்தச் சூழலில் தமிழ் அமைப்புகள் ஒன்றாகத் திரண்டு மாணவர் போராட்டம் வெல்லவும், அவர்கள் காக்கப்படவும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். அதற்கு தமிழர் களம் எப்போதும் துணையிருக்கும் என்றும் அறிவிக்கிறது.

17.01.2017
கரூர்


ஏறுதழுவலுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் கரூர் பேருந்து நிலையத்தின் அருகில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் தன்னெழுச்சியாக கலந்துகொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
செய்தி - கருவை முருகு. தமிழர் களம்- கரூர்