செவ்வாய், ஏப்ரல் 02, 2013

தமிழர்களை காவுவாங்கத் துடிக்கும் ஸ்டெர்லைட் ஆலை - அரிமா கண்டன அறிக்கை!


மாற்றமுடியாத மாய உலகத்துத் தீர்ப்புகளா?
போபால் போல பல்லாயிரம் பேர் மடிந்தால்தான் ஸ்டெர்லைட்டை மூடுவார்களா?
அரிமாவளவன் கேள்வி!
 
உயிர்க் கொல்லி ஆலையாக ஸ்டெர்லைட் ஆலை வடிவெடுத்து தூத்துக்குடி நகரில் பல ஆண்டுகளாக நிற்கிறது.  கடந்த காலங்களில் ஸ்டெர்லைட்டிலிருந்து வெளிவரும் நச்சுவளியினால் பலர் உயிரிழந்திருக்கின்றனர்.  சுற்றுச் சூழல் கெட்டு நாசமாகியிருக்கிறது.  ஆலையைச் சுற்றியிருக்கிற விளைநிலங்களும் குளங்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.  இதற்கெதிராக பல ஆண்டுகளாக மக்கள் போராடிப் போராடிக் களைத்துப் போயிருக்கிற வேளையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த நச்சுவளிக் கசிவினால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றனர், மரங்களும் செடிகளும் கருகியிருக்கின்றன.  மற்றொரு போபால் விபத்து நெருங்கியிருக்கிறது.  நல்லவேளை அந்நகரத்து மக்கள் தப்பித்திருக்கின்றார்கள்.
இதையறிந்த மாவட்ட நிர்வாகமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக ஆலையை மூடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.  இதற்கிடையில் பழைய வழக்குக்கான தீர்ப்பு இன்று உச்சநீதி மன்றத்தில் அறிவிக்கப்பட்டது.  வடநாட்டவர்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகைக்கு முன்னதாகவே தீர்ப்பை எழுதிவிட்டோம் என்கிறார் நீதியரசர்.  அப்படியானால் அண்மையில் நடந்த நச்சுவளிக்கசிவையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கருத்தில் கொள்ள மறுக்கிறார்.  அப்படி என்ன திருத்த முடியாத தீர்ப்பு அது?
தூக்குத் தண்டனைத் தீர்ப்பை செவ்வாய்க் கிழமை ஒருவர் எழுதிவிட்டதால் புதன் கிழமை கிடைத்த ஆதாரம் தண்டனை விதிக்கப்பட்டவன் குற்றவாளி இல்லை என்று உறுதிபடச் சொன்னால் நீதிபதி தீர்ப்பை மாற்றாமல் தண்டித்த நபரைக் கழுவிலேற்றிவிடுவாரா?
போபால் போன்ற ஒரு நச்சுவளிக் கசிவினால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்த பின்னர்தான் இந்த நாட்டில் இதுபோன்ற ஆலைகள் மூடப்படும் என்றால் நீதிமன்றங்களும் அரசாங்கமும் ஆட்சியாளர்களும் இந்த நாட்டுக்குத் தேவை இல்லையே!  வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன் வைத்தூரு போலக் கெடும் என்பதுபோல கடந்த 23ஆம் தேதி நடந்த நச்சுவளிக் கசிவு என்பதை பெரும் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும்.  இல்லையென்றால் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடிக்கும் என்று தமிழர்களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக