
தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
செவ்வாய், ஜூலை 20, 2010
நாகர்கோவில் மீனவர்கள் போராட்டம் - அரிமா
தொடர்ந்து கொட்டிய மழையின் நடுவில் குடைகளைக்கூட பிடிக்க மறுத்து மீனவர்கள் போராடினார்கள்.
இதில் தமிழர்களம் அமைப்பின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில்,
கடந்த காலங்களில் மீனவர்களை ஒடுக்குவதிலும் அவர்களின் போராட்டங்களை நசுக்குவதிலுமே மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டுகின்றனவேயொழிய அவர்களைப் பாதுகாப்பதிலும் உயர்த்துவதிலும் இழப்பீடுகள் அளிப்பதிலும் எள்ளளவும் கரிசனை கொள்வது கிடையாது.
1974 -ல் தி.மு.க. ஆட்சியின்போது பெருந்துறை மீனவர்களை ஒருவார காலமாக அடித்து உதைத்து ரத்தம் சிந்தச் சிந்த மீனவப் பெண்களை நிர்வாணமாகச் சுடுமணலில் நெடுநேரம் உட்கார வைத்த கொடுமை இந்த மண்ணில்தான் நடந்தது.
எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் மெரினா கடற்கரையை அழகுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கடற்கரைக் குப்பங்கள் வன்முறை வழியில் அகற்றப்பட்டன. மீனவர்கள் சிந்திய குருதியில் கடற்கரை நனைந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். மீனவ நண்பனாக திரைப்படத்தில் நடித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜாங்கிட் தலைமையில் 26 வாகனங்களில் இரும்புத் தடிகளோடு தமிழகக் காவல்துறையினரை பெருமணல் கிராம மக்கள் மீது ஏவிவிட்டு பெண்டு பிள்ளைகளையும் போராடிய அத்தனைப் பேரையும் ஏன், ஒரு நொண்டிச் சிறுவனையும்கூட விட்டு வைக்காமல் அடித்துத் தள்ளி குருதி சிந்த வைத்தது செயலலிதா அரசு.
இந்தத் திராவிடங்களின் ஆட்சியில்தான், ராமேசுவரம் நாகப்பட்டிணம் உள்ளிட்ட கிழக்குக் கடலில் இதுவரை 534 தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறிக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் கொலைகாரச் சிங்கள அரசுக்குத்தான் இன்றுவரை முட்டுக் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் 50 லட்சம் மீனவர்கள் இருந்தும் அரசின் இந்த எடுத்தெறிந்த போக்கு நமக்குக் கடும் சினத்தையே உண்டு பண்ணுகிறது .
அகிம்சைப் போராட்டங்களையெல்லாம் காந்தி தேசம் இதுநாள்வரை காலிலிட்டுத்தான் மிதித்திருக்கிறது. அமைதி வழிப் போராட்டங்கள், மனுக்கொடுத்தல், உண்ணாநோன்பு போன்ற போராட்ட வடிவங்களை அரசு இன்று எட்டிக்கூட பார்ப்பதில்லை. அப் போராட்ட மொழி அரசுக்குப் புரிவதுமில்லை. ஆட்சியாளர்களின் செவிகளுக்கு எட்டுவதுமில்லை. இப்படிப் புறக்கணிப்பதன் மூலம் அரசே வன்முறை வழிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. இருப்பினும் நாம் பொறுமையோடு சனநாயக வழிமுறைகளையே முன்னெடுப்போம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பொறுக்கி திராவிடக் கட்சிகளையும் இந்திய தேசியக் கட்சிகளையும் முற்றாகப் புறக்கணித்து மீனவத் தமிழர்களாய் நாம் எழுந்து நம் வலுவை மெய்ப்பிப்போம்.
அரசுக்குக் கோடி கோடியாய் அன்னியச் செலாவணி வருவாய் ஏற்படுத்தித் தரும் உழைக்கும் மக்களான தமிழக மீனவர்களின் போராட்டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் செவி மடுக்காத தமிழக அரசை சனநாயக வழியில் தூக்கி எறிந்துவிட்டு புதிய சமுதாயம் படைப்போம் என்றார்.
பின்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அனைத்துக் கோரிக்களையும் அரசின் பார்வைக்குக் கொண்டு செல்வதாக வாக்களித்தார்.
திங்கள், ஜூலை 19, 2010
துரோகி கருணா.... - அரிமா
சனி, ஜூலை 17, 2010
எரிமலை முகட்டில் இறையாண்மை - அரிமா
இலக்கு நோக்கி தமிழர்களத்தின் ஓரு பார்வை!!
“மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்” என்று கருணாநிதி பற்றி ம.கோ.இரா வாயசைத்து பாடி ஆண்டுகள் பல ஆகிவிட்டன!
தன் குடும்பத்திற்காக, குடும்பப் பிறங்கடைகளுக்காக மட்டுமே கருணாநிதி தன் பதவி, அதிகாரம் ஆகியனவற்றைப் பயன்படுத்துகிறார் என்பதும், எந்த மக்கள் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாவலனாக அவரைத் தேர்ந்தெடுத்தார்களோ அவர்களுக்குக் கருணாநிதி தொடர்ந்து கடுக்காய் கொடுத்து வருகிறார் என்பதும் இப்போது உலகே அறிந்து வைத்திருக்கிற ஒரு உண்மை
அண்மையில் மீண்டும் தமிழக மீனவர் ஒருவரை அடித்துக் கொன்றும் உடனிருந்த மற்றவர்களை கடுமையாகத் துன்புறுத்திய கொடுமையும் தமிழர்களின் நெஞ்சங்களில் பதைபதைப்பையும் கடுஞ் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அண்டை நாட்டுப் படைகள் நமது அப்பாவி மக்களை கிஞ்சிச்தும் அச்சமில்லாமல் சுடுவதும், கொல்வதும், வதைப்பதுமாக இருப்பது பல ஆண்டுகளாக நமது கிழக்குக் கடற்கரையோரம் நடந்தேறி வருகின்ற கொடுஞ் செயலாகும்!
ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் உருப்படியான செயற்பாடுகளில் இறங்கி சிங்களக் காடையரின் அத்துமீறல்களுக்கு முற்றாக முடிவுகட்டாமல் மீண்டும் செயலலிதாவுடன் ஒரு லாவணி பாடத் தொடங்கியிருக்கிறார், கருணாநிதி!
“செயலலிதா ஆட்சியிலிருக்கும்போது அவர் என்ன படையெடுத்துப் போனாரா?” என்ற மட்டமான ஒரு வினாவோடு கருணாநிதி அறிக்கையை வெளியிட்ட அதே வேளையில் மீண்டும் சிங்களக் காடையர் இராமேசுவரம் மீனவர்கள் 50 பேரைப் பிடித்து அடித்து உதைத்து அனுப்பியிருக்கிறார்கள். மாநில அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி நடுவணரசுக்கு வழக்கம்போல கடிதம் அனுப்புகிறார். இறந்தவர் குடும்பத்திற்கு நிதி ஒதுக்குகிறார். பின்னர் செயலலிதாவை மையப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறார். கருணாநிதியின் வீரதீரமெல்லாம் அத்தோடு முடிந்தது!
இனி, அடுத்த சாவுக்குச் சங்கு ஊதும்போது மீண்டும் தாள், நிதி, லாவணி என்று கிளம்புவார்!
நடுவணரசோ வழக்கம்போல எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது!
இதற்கிடையில் சட்ட அமைச்சர் பொறுப்பிலிருக்கும் திரு. துரைமுருகனின் மற்றொரு அறிக்கை தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து நம்மை நிறையவே சிந்திக்க வைக்கிறது. “அயல்நாடுகளில் நடப்பவைகளை வைத்துக் கொண்டு இங்கு மத்திய மாநில அரசுகளை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இறையாண்மைக்கு எதிராகப் பேசினால் புதிய சட்டமும் கூடவே பாயும்” என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.
ஈழம் என்பது அயல்நாடு!
ஈழத் தமிழர் என்பார் அயல்நாட்டவர்!
கருணாநிதியை, சோனியாவைத் திட்டாதே!
திட்டினால், புதுச்சட்டம் பாயும்!
இதுதான், விளக்க உரை!
துரைமுருகன் சுட்டிக் காட்டும் இந்திய இறையாண்மை குறித்த நமது ஐயங்களுக்கு அவர் சற்றே விளக்கம் கூறியாக வேண்டும்.
இந்தியாவின் வட எல்லையிலோ, வடகிழக்கு எல்லையிலோ பின்பற்றப்படும் இந்திய இறையாண்மைக்கும் தென் எல்லையில் பின்பற்றப்படும் இறையாண்மைக்கும் வேறுபாடுகள் இல்லையா? வட எல்லையில் அண்டை நாடுகளான பாக்கிஸ்தானும், சீனாவும், வங்காள தேசமும் வட இந்தியர்களைக் தொட்டால், சீண்டினால், அடித்தால், சுட்டால், கொன்றால் சீறுகின்ற இந்தியப் படைகள் 500க்கும் மேற்பட்ட தென் எல்லைத் தமிழர்களை சிங்களப் படைகள் கொன்று குவித்த பிறகும் இந்தியப் படைகள் அமைதி காப்பது ஏன்? பதிலடி கொடுக்காதது ஏன்?
உச்ச நீதிமன்ற நெறிகளுக்குப் புறம்பாகவும் உலக வழக்குகளுக்கு எதிராகவும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகளைக் கட்டி வைத்துக் கொண்டு கடைமடைப்பகுதியிலிருக்கும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுப்பது இந்திய இறையாண்மையை காயப்படுத்துவது இல்லையா?
துரை முருகன் கொண்டு வருகிற புதிய சட்டத்தில் இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் இவர்கள் சிக்குவார்களா? சிக்கமாட்டார்களா?
தமிழகத்திற்குக் துளி தண்ணீரும் தரக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு கேரள அரசு புதிய அணையையே கட்டத் துணிகிறது!
இந்திய இறையாண்மையையே அவர்கள் கொச்சைப் படுத்திவிட்டார்களே!
பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டி தண்ணீரைத் தடுக்கிறது!
ஒக்கனேக்கல் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடகம் முட்டுக்கட்டை போடுகிறது!
கண்ணகி கோட்டம் போக கேரளம் தமிழர்களைத் தடுக்கிறது!
இந்திய இறையாண்மையோ இவை குறித்துப் பல்லிளிக்கிறது!
பிறகு படுத்துக் கொள்கிறது!
இம்மாதிரியான சூழல்களில் மாநில அரசின் கடமைகளும் பொறுப்பும் என்ன? அதுவும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அரசின் கடமை என்ன?
தனது மீனவரணியை ஏவி விட்டு சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது அதிகாரத்திலிருக்கும் ஒரு கட்சியின் கையாலாகாத் தனத்தைத்தானே காட்டுகிறது!
கையாலாகாத்தனத்தைவிட களவாணித்தனமும் கயமைமத்தனமும்தான் மிஞ்சுவதுபோலத் தெரிகிறது!
தன் மக்களில் ஒருவர் அன்னியப் படைகளால் கொல்லப்பட்டவுடன் மத்திய அரசை உலுக்கி தென் எல்லையில் படைகளைக் குவித்து இலங்கையை எச்சரித்திருக்க வேண்டாமா? இக் கொடுமைச் செய்த இலங்கைக் கடற்படையை நோக்கிச் சுட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்க வேண்டாமா? மக்களைக் காக்க துப்பாக்கி ஏந்தாத படை எந்த ம..ரைக் காக்க இனி துப்பாக்கி தூக்கும்? ஒரு நாய்கூட எட்டிப் பார்த்ததாகத் தெரியவில்லையே!
இதற்கிடையில் நாம் தமிழர் இயக்கத்தின் திரு. சீமான் அவர்கள் உணர்ச்சிமயமாயப் பேச, அதாவது இனி ஒரு தமிழன் தாக்கப்பட்டால் தமிழகத்தில் இருக்கும் சிங்களன் உயிரோடு திரும்ப முடியாது என்று பேசியதற்காக தமிழகக் காவல்துறை வழக்கு போட்டு அவரைக் கைது செய்யத் தேடுகிறது என்ற செய்தி இப்போது வருகிறது. ஆக, அடித்துக் கொன்றுவிட்டவனை விட்டுவிட்ட அரசு, அதை எதிர்த்து குரல் கொடுத்ததற்காகவே சீமானைத் தேடிச் சிறையில் போடத் துடிக்கிறது!
ஆனால் அதற்கிடையில் சிங்களனோ இந்தியாவையும் தமிழக அரசையும் தூசியினும் இழிவாக எண்ணி மீண்டும் 50 பேரை அடித்துவிட்டுப் போய்விட்டான்!
இவர்கள் நாணிக் குனிவதா? இல்லை நாக்கைப் பிடுங்கிச் சாவதா? கொதிப்பிலும் கொந்தளிப்பிலும் குமுறுகிற தமிழர் உள்ளங்கள் ஒரு புறம்!
ஆனால், ஞாயச் சிந்தனையோடு பார்த்தால், நேரிய எவரும் இந்திய இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கவே செய்வர்! துரைமுருகன்கூட!
1947ல் தமிழகம் இந்தியாவோடு இணைந்ததில் தமிழருக்குப் பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா? இல்லையே!
தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு எதிராக பல நிலைப்பாடுகளை எடுத்து அசட்டுத் துணிச்சலுடன் செயலாற்றினாலும் நடுவணரசு இதுநாள்வரை அவைகளைக் கண்டு கொள்ளவேயில்லை!
காரணம் அந்த மூன்று மாநிலங்களிலும் மத்தியில் ஆட்சிக்கு வரும் காங்கிரசு மற்றும் பாரதீய சனதாக் கட்சி போன்றவைகளுக்குக் கணிசமான வாக்கு வங்கியிருக்கிறது!
வாக்கு வங்கிக்காக அவர்கள் இறையாண்மைக்கு வேட்டு வைக்கிறார்கள்!
“செயலலிதா போர் தொடுத்தாரா?” என்று எரிச்சலோடு வினா எழுப்பியிருக்கிற கருணாநிதி இன்று தமிழகத்தின் முதல்வர். நடுவணரசில் சண்டைபோட்டு அமைச்சர் பதவிகளை பிடுங்கி வைத்திருக்கிற “தலையாயத் தலைவர்”. படை அனுப்ப வேண்டியது நடுவணரசுதான்!
நடுவணரசுக்கு எழுதிய கடிதத்திலாவது, இந்திய அரசு படையை அனுப்பவேண்டும் என்று கடமைக்குக்கூட எழுதவில்லையே!
இதுவே, கடைசி முறையாக இருக்கவேண்டும் என்று 500 கடிதத்திலும் கடைசி, கடைசி என்றுதானே எழுதினார் இவர்!
மகனுக்காகவும் பேராண்டிகளுக்காகவும் மகளுக்காகவும் நடுவணரசை அசைக்கிற கருணாநிதி மக்களுக்காக எதையுமே அசைக்கப்போவதில்லை!
தமிழர்களின் அழிவைத் தடுக்க இயலாமல் தடுமாறுகிற இவர் தமிழுக்கு விழா எடுத்து கிலுகிலுப்பைப் காட்டுகிறார்!
மக்களின் மனக் குமுறல்களை மன்னர்கள் பலநேரம் விளங்குவதேயில்லை!
அவர்கள் ஒரு மாய உலகில் உலா வருகிற மன்மதக் குஞ்சுகள்!
மஞ்சள் துண்டு காப்புகளும் மங்காத ஒளி வெள்ள மத்தாப்புகளும் அவர்களைப் போலி பாதுகாப்புக்குள்ளும் பகட்டுக்குள்ளும் பறக்க வைக்கிறது!
குறளிகளை நம்பி குழி வெட்டுகிறவனுக்கு குறளியே ஒரு நாள் குறி வைத்துவிடும்!
எரிமலை முகட்டில் குந்திக் கொண்டு சுருட்டுக்குச் சுள்ளி தேடுகிற மந்த மாந்தர்கள் இவர்கள்!
தமிழ்த் தேசிய நெருப்பு தமிழிளம் காளையரின் உள்ளங்களிலும் தமிழிளங் கன்னியரின் நெஞ்சங்களிலும் குமுறத் தொடங்கிவிட்டது!
கடலிலும் கரையிலும் நடப்பது, நடுவணரசின் நாசப் போக்கு, நயவஞ்சக ஆட்சியாளர்களின் நச்சுப் பேச்சு ஆகிய அனைத்துமே எரிதளலில் எண்ணை வார்க்கும் செயல்களே!
தேசத்திற்கு ஒரு நாடு இன்றி இனி தேசியம் காப்பாற்றப்படாது என்பதே இப்போது நடப்பது சுட்டும் அறிவு, ஆணை!
வெள்ளி, ஜூலை 16, 2010
சிறை என்ன செய்யுமடா? - அரிமாவளவன்
சக்தி தமிழ் பள்ளிக்கூடம் - மாறுபட்ட கல்வி
பள்ளியின் சிறப்புகள் : கல்வி சுமை கிடையாது, தனி பயிற்சி வகுப்புகள் தேவையில்லை, வீட்டு பாடம் கிடையாது, எளிய கற்றல் முறை, ஆக்கவியல் சிந்தனை , வாழ்வியல் நெறிகள், தமிழர் பண்பாட்டுடன் திருக்குறள் நெறி முறைகள், ஆகியன கற்பிக்கபடுகின்றன. ஏழை மாணவர்களுக்கு இலவய கல்வியும், நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு குறைந்த சேவை கட்டணமும் வாங்கி, நல்ல தரமான , அன்பான ஆசிரிய ஆசிரியைகளை கொண்டு அமைதியான சூழலில் பள்ளி சிறப்பாக செயல்படுகின்றது.
நாம் செய்ய வேண்டியது என்ன : நமது இனம் , மொழி, பண்பாடு இவற்றை காக்கவும், நமது பிள்ளைகள் நல்ல சிந்தனையலர்களவும் , சிறந்த மனிதர்களாகவும் வுருவாக தமிழ் வழிக் கல்வி தருவோம். மேலும் நாம் பல்வேறு காரியங்களுக்கு நன்கொடைகள், வுதவிகள் செய்தபோதும், நமது தலையாய கடமையாக கருதி இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட தாரளமாக பொருளுதவியும், நிதியுதவியும் செய்து தமிழர்களும் தமிழ் வுனர்வாலர்களும் இந்த பள்ளிக்கு நன்மை செய்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுகொள்கிறோம். தற்போது மன நலம் குன்றியோருக்கு சிறப்பு பள்ளியும் இலவய சேவையாக நடைபெறுகிறது. அவர்களின் நலனுக்காகவும் பள்ளிக்காகவும் தாராளமாக வுதவுங்கள். நன்றி. மேலும் பள்ளியை பற்றி அறிய www.sakthitamilpalli.co.in வலை தளத்தில் காணலாம். நிதி வுதவி செய்ய விரும்புகிறவர்கள் சக்தி தமிழ் பள்ளிக்கூடம், வங்கி கணக்கு : 480781664 இந்தியன் வங்கியில் செலுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு : 9843955627 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
மண்ணுரிமை மாநாடு
- தமிழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்க.
இவண். தமிழர் களம் , கரூர் மாவட்டம்.