புதன், ஏப்ரல் 23, 2014

இடிந்தகரை மீனவர்களைத் தாக்கிய கடலோரக் காவல் படையினரைக் கைது செய்ய தமிழர்களம் கோரிக்கை

24.04.14
திருச்சி

நேற்று காலை இடிந்தகரை மற்றும் அதன் சுற்றுப்புற கடலோர கிராமங்களிலிருந்து மீன் பிடிக்க கடலுக்குள் மீனவர்கள் சென்றனர்.  அவர்களைச் சுற்றி வளைத்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் கொச்சையான சொற்களால் அவர்களை வசைபாடிவிட்டு திரு. தொம்மை மற்றும் திரு. ட்ரூமன் ஆகிய இரு மீனவர்களை படகுகளிலிருந்து இறக்கி வன்முறையாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் 42 வயது மதிக்கத் தக்க திரு. தொம்மை அவர்களை 50 முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி அடித்திருக்கின்றனர்.  திரு. ட்ரூமன் படகிலிருந்த மீன்களையும் நண்டுகளையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.
இது நாள் வரை இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் இப்போது இந்தியக் கடலோரக் காவல் படையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய கொடுஞ் செயலாகும்.   வேலியே பயிரை மேய்வது போல தமிழக மீனவர்களைக் காக்கும் பொறுப்பிலிருக்கிற காவல்படை இப்படிபட்ட ஓர் ஈனச் செயலைச் செய்திருக்கிறது.
அப்பாவி மீனவர்களைத் தாக்கிய கடலோரக் காவல்படையைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி விசாரித்து உரிய தண்டனை பெற்றுத தரவேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
இலங்கை இனவெறி அரசுக்கும் அதற்கு முட்டுக் கொடுக்கும் இந்திய அரசுக்கும் தமிழக மக்கள் எப்போதுமே எட்டிக்காயாக கசப்பது யாவரும் அறிந்ததே.  இப்படிப்பட்ட கொடிய மனநிலை கொண்ட அரசுகளிடமிருந்து தமிழக மக்களை காப்பது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.  இதில் எந்தத் தாமதமும் காட்டாது உடனடியாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் இன்று கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக