திங்கள், பிப்ரவரி 06, 2017

நிம்மதி இழக்கும் நாடு!

06.02.17

சினம் கொள்ளாத இனம் பிணத்துக்குச் சமம்!
அரியலூருக்கு அருகிலுள்ள சிறுகடம்பூரில் இளம்பெண் நந்தினியைக் கூட்டாகப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொலை செய்தது தொடர்பாக நேற்று முழுவதும் பிள்ளையின் குடும்பத்தாரையும் காவல்நிலையத்தையும் மாவட்ட ஆட்சியரையும் வழக்கறிஞர் சசிகுமார் அவர்களையும் தமிழர்களம் சார்பாக வழக்கறிஞர் திரு. இராசன், மேற்கு மண்டலப் பொறுப்பாளர் திரு. அரசு, அரியலூர் தமிழர்கள உறுப்பினர் சரவணன், திருச்சி தமிழர்களம் சார்பாக உறையூர் கிருபா, பெரம்பலூர் வழக்கறிஞர் கென்னடி ஆகியோர் சந்தித்து செய்திகளைச் சேகரித்து உணர்வுகளை உள்வாங்கி வந்திருக்கின்றனர்!
காவல்துறையின் அசட்டைத்தனம், உண்மைகளையும் குறைகளையும் சொல்லவந்தவர்களை வழக்கம்போல உதாசீனப்படுத்தியது ஆகியன நடக்காதிந்தால் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்!
ஒரு பெண்ணை அதுவும் காதலிப்பதாகக் கூறி கடைசியில் கொடூரமாக சிதைத்தது இழிவினும் இழிவு! அதைவிடக் கொடுமை அவளைக் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததும் பின்னர் அவளைக் கொலைசெய்ததும்! இவைகளையெல்லாம் விலங்குகள்கூடச் செய்ய மாட்டா! இவர்களை இனிச் சமூகத்தில் உலவ விடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது! இவர்களைச் சட்டத்தின் இடுக்குகள் வழியாகத் தப்பவிடுவது என்பது இவர்கள் போன்ற குற்றவாளிகளை ஊக்கப்படுத்துவதேயாகும்! சமூகத்தில் இது போன்ற கொடுமைகள் மறைய வேண்டுமானால் இந்த ஈனர்களுக்குக் கொடுந்தண்டனை கொடுத்தேயாகவேண்டும்!
இவர்கள் ஒரு மதவெறிப் போர்வையை போர்த்திக் கொண்டிருப்பதனால், இக்கொடியவர்களைத் தப்புவிக்க இக் கும்பலின் மாவட்டச்செயலாளர் ஒருவன் குற்றவாளிகள் சார்பாக தரகு வேலை பார்ப்பது என்பது இதில் மட்டுமல்ல இது போன்ற பல குற்றங்களில் அவன் அப்படியே நடந்திருக்கிறான்! இவனைத் தப்புவிக்கவிட்டால் நாடு நிம்மதி இழக்கும்!
என்ன செய்வது?
பிள்ளையின் குடும்பத்திற்கு எந்த இழப்பீடு கொடுத்தாலும் அது உயிருக்க இணையாகாது என்றபோதும், குற்றத்தில் ஈடுபட்டவர்களின் முழுச் சொத்தையும் பறிமுதல் செய்து உரிய இழப்பீட்டை அரசு செய்ய வேண்டும்!
கேவலமாக நடந்து கொண்ட அத்தனைக் காவல்துறையினரும் தண்டிக்கப்பட வேண்டும்!
நீதிபதியின் மகள், காவல்துறையினரின் பிள்ளைகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தமிழிசை சவுந்திரராசனின் பேத்திகள் உள்ளிட்ட எந்தப் பெண்ணுக்கும் இக்கொடுமை இனி நடக்கக்கூடாது என்றால் இக் குற்றவாளிகளுக்குக் கொடுந்தண்டனை வழங்கியே ஆக வேண்டும்! இதில் சாதி, மதம் ஏன் இனம்கூட பார்க்காதீர்கள்! மனிதம் சிதைக்கப்பட்டிருக்கிறது! மனிதம் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது! மனித ரத்தம் மலிவாகச் சிந்தியிருக்கிறது! அவ்வளவுதான்!
பரபரப்பு அடங்கியதும் சட்டத்தின் ஓட்டைகளின் இந்தக் கொடியவர்கள் தப்பிக்கவே முனைவார்கள்! அதை தமிழர்களம் உள்ளிட்ட இந்தச் சமூகம் விழிப்பான ஒரு காவலன்போல நின்று காத்திட வேண்டும்!
மேலே குறிப்பிட்டவைகளை முன்னிறுத்திப் போராட சில பொறுப்புகளைப் உரியவர்களிடம் பணித்திருக்கிறேன்! விரைவில் செய்தி தருகிறேன்!
ஆய்வறிக்கையின் விவரங்களை மக்கள் நடுவில் கொண்டு செல்ல அணியமாகிறோம்!
அரிமாவளவன்
பொதுச்செயலாளர்
தமிழர்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக