வெள்ளி, அக்டோபர் 21, 2011

தமிழ்நாடா இல்லை வந்தேறிகளின் வேட்டைக்காடா?


தமிழர்களம் மாவட்டச் செயலாளர் திரு. அமலரசு கைது நடவடிக்கையைக் கண்டித்து அரிமாவளவன் கண்டனம்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழர்களின் ஒரு வாழ்வுரிமைப் போராட்டமாக மாறி நிற்கிறது. இவ்வேளையில் இப்போராட்டத்தின் ஒரு கட்டமாக 25க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கூடங்குளம் அருகில் அமைதிவழியில் அறப்போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். நள்ளிரவு மட்டில் அந்த இடத்திற்கு வந்த திருநெல்வேலி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் விஜயேந்திரப் பிதரி என்பவர் அவர்களைத் தாக்கிக் காயப்படுத்தி பந்தலைப் பிரிந்து வீசியிருக்கிறார். அப்படி அவர் தாக்கும்போது இனவெறிச் சொற்களைக் கையாண்டிருக்கிறார். “தமிழ்த் தேவ...மக்களே, ஓடுங்கடா!” என்று விரட்டியிருக்கிறார். இதை நேரடித்தாக்குதலுக்கு உள்ளான மணிகண்டன் என்ற இளைஞர் தனது பேட்டியில் குறிப்பிட்டு ஊடகங்களில் வந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு காட்டுமிராண்டித் தனமான நிகழ்வைக் கண்டித்து தமிழர்களம் தமிழகமெங்கும் சுவரொட்டி ஒட்டியது.
தூத்துக்குடி நகருக்குள் சுவரொட்டி ஒட்டியபோது காவல்துறையினர் ஒட்டிக் கொண்டிருந்த மற்றுமொரு மாற்றுத் திறனாளி முருகன் என்பவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் தமிழர் களத்தின் மாவட்டச் செயலாளர் திரு. அமலரசுவையும் கைது செய்ய முற்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விஜயேந்திரப் பிதரி கர்நாடகத்தைச் சேர்ந்தவர். தமிழகக் கர்நாடக அரசுகளால் நியமிக்கபட்ட சதாசிவம் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் பிதரியின் மகன். தமிழக கர்நாடக எல்லையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த பல்வேறு மாந்த உரிமை மீறல்கள், கொடுமைகள், கற்பழிப்புகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைச் சுமந்து நிற்பவர் சங்கர் பிதரி. 12 வயது சிறுமி ஒருவரைக் கற்பழித்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. இனவெறியோடு தமிழர்களை நோக்கும் சங்கர் பிதரியின் மகன் இன்று தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டத்தின் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருக்கும்போதுகூட அதே இனவெறியோடு செயல்பட்டது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் விடப்பட்ட சவால் என்பது ஒரு புறம் இருந்தாலும் சனநாயக வரம்புகளுக்கு உட்பட்டு எதிர்ப்பைத் தெரிவித்த தமிழர்களத்தின் மாவட்டச் செயலாளர் மீது மிரட்டல் அடிப்படையில் வழக்குகள் தொடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாறி நிற்கிறது என்ற உண்மையை மெய்ப்பிக்கிறது.
அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதன் வாயிலாக உண்மைகளை ஒழித்துவிடலாம் என்று கனவு காணும் எடுபிடிகளுக்கு தமிழர்களம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. ஆதிக்க வெறி ஒழிப்போம்! அடக்குமுறைகளுக்கு அஞ்சோம்! விடுதலை வேள்வியில் வீரக் களமாடுவோம்! என்று தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக