செவ்வாய், அக்டோபர் 18, 2011

நெல்லைக் கண்காணிப்பாளருக்கு தமிழர்களம் கடும் கண்டனம்.



மாற்றுத் திறனாளிகளை தாக்கி இனவெறிச் சொற்களால் இழிவுபடுத்திய நெல்லைக் கண்காணிப்பாளருக்கு தமிழர்களம் கடும் கண்டனம்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு கட்டமாக மாற்றுத் திறனாளிகள் பலர் திரண்டு கூடங்குளம் அருகில் ஓர் உண்ணாநோன்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இரவு நேரத்தில் அங்கே ஒரு காவலர் படையுடன் வந்த நெல்லை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் விஜேயந்திரப் பிதரி அங்கிருந்தவர்களைத் தாக்கி “தமிழ்த் தேவ... மக்களே, ஒடுங்கடா” என்று மிக அசிங்கமாகத் திட்டி அங்கிருந்த பந்தலையும் பிற பொருட்களையும் அவருடன் வந்த காவல்துறையினர் பிரித்து வீசியிருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகள் என்றும்கூடப் பாராமல் தாக்கப்பட்ட அந்த நிகழ்வில் பலர் காயமுற்றனர். தாக்குதல் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள் திரண்டுவந்து அவர்களை மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டபோது அங்கேயும் வந்த காவல்துறையினர் அவர்களை அங்கே சேர்ப்பதைத் தடுத்துள்ளனர்.
வீரப்பனைத் தேடுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி மலைவாழ் மக்கள் மீது நடந்த கற்பழிப்புகள், இனவெறித் தாக்குதல்கள், சித்திரவதைகள், கொலைகள் என்று பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக சதாசிவம் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர் சங்கர் பிதரி என்ற காவல்துறை அதிகாரி. அவர் 12 வயதுச் சிறுமி ஒருவரையும் பாலியல் வன்முறை செய்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த சங்கர் பிதரியின் மகன்தான் இந்த விஜேயந்திரப் பிதரி.
தமிழ்நாட்டுக்குள் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்துகொண்டு இனவெறியோடு மண்ணின் மக்கள் மீது தாக்குதல் செய்திருப்பதும், அதுவும் மாற்றுத் திறனாளிகளின் அறப்போராட்டத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்கியிருப்பதும் தமிழ் மக்கள் நடுவில் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட இனவெறியர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இடமாற்றம் போன்ற போலி நடவடிக்கைகள் செய்து இதுபோன்ற இனவெறியர்களை ஊக்கப்படுத்தாது தமிழக அரசு உரிய தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு புறம் சிங்கள இனவெறியர்கள், மறுபுறம் மலையாளிகள் எப்போதும் கன்னடர்கள் என்று பார்க்கும்போது “நாற்புறமும் பகைவர் கூட்டம் நடுத்தெருவில் நம் தமிழ்த்தாய்” என்ற பாவேந்தரின் சொற்கள்தான் நம்மைக் குத்துகிறது. தமிழக அரசு இவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழரின் தன்மானத்தையும் தனிஉரிமைகளையும் காக்க நாங்கள் களமிறங்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன் என்று தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக