சனி, மே 05, 2012

மீண்டும் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம்




திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மீண்டும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் தொடங்கியது.
அணுஉலையை மூட வேண்டும், போராட்டக் குழுவினர் மீதான பொய் வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும், நிலவியல்-நீரியல் மற்றும் கடலியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த...ி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோர் ஏற்கெனவே காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்களது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், பல்வேறு கிராம மக்கள் சார்பில் சில மாதங்களாக தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் தெரிவித்தபடி அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதைக் கண்டித்து மே 1-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, சில நாள்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இது தொடர்பாக இடிந்தகரையில் பொதுமக்களுடன், போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதில், அரசு கேட்டுக் கொண்டிருக்கும் காலஅவகாச தினமான வியாழக்கிழமை வரை ஆண்கள் மட்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்த எஸ்.பி.உதயகுமார் கூறியதாவது:
எங்களது போராட்டம் இந்தப் பகுதி மக்களின் போராட்டம். மக்களின் கருத்துப்படிதான் நாங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம். இப்போதைக்கு உண்ணாவிரதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கிறார்கள். அரசு தெரிவிக்கும் பதிலை எங்கள் மக்கள் ஏற்றுக் கொண்டால் போராட்டம் கைவிடப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு புறக்கணித்தால் வெள்ளிக்கிழமை முதல் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதம் மேற்கொள்வர்.
அணுஉலையை மூட வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அந்தக் கையெழுத்துப் பட்டியலை முதல்வரிடமும், பிரதமரிடமும் அளிப்போம். ஜனநாயக நாட்டில் மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக