செவ்வாய், மே 08, 2012

வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பித்தரும் போராட்டம்!!





 
 

இடிந்தகரை 06.05.2012 
இடிந்தகரையில் வெகு நீண்ட நாட்களாக அறவழிப்போராட்டம் நடத்திவரும் பொதுமக்களை தமிழக அரசும், நடுவண்அரசும் எள்ளளவும் கண்டுகொள்ளாத நிலையில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். தற்போது போராட்டக்குழுவில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமான சூழல் ஏற்பட்டதையடுத்து. தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தலைமையில் உதயகுமார் மற்றும் போராட்டக் குழுவினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து தங்களை வெறும் வாக்கு எந்திரமாகவே கருதும் மாநில அரசுக்கும், நடுவண் அரசுக்கும் நெருக்கடியைத் தரும் வகையில் இன்று இருபத்திஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடமே திருப்பித் தரும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத எந்த அரசும் நீடித்து நிலைத்து ஆண்டதாக வரலாறு இல்லை. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சப்பான் தனது கடைசி அணுஉலையையும் மூடிவிட்டது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து வகையிலும் முன்னேற்றம் கண்டுள்ள சப்பான் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பத்தை ஒருபோதும் சப்பானுடய அறிவியல் தொழில் நுட்பத்துடன் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்களே அணுமின் சக்தி தேவையில்லை மாற்றுவழியை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்று அறிவித்துள்ள நிலையில் எந்த விதத்தில் திருடலாம், கொள்ளையடிக்கலாம், ஊழல் செய்யலாம் என்பதற்காகவே ஆட்சிக்கு வருபவர்களாலும், அவர்களுக்கு அடிவருடியாக இருக்கும் இரக்கமற்ற அறிவியலாளர்களாலும் ஒருபோதும் நன்மை விளையாது. மக்களுக்கான ஆட்சியை நடத்தவும் முடியாது. எனவே இடிந்தகரை மக்களின் போராட்டம் அவர்களுக்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்திற்கானதும் என்பதை நாம் உணரவேண்டும். அறம் வெல்லட்டும்!!

-கருவைமுருகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக