[ செவ்வாய்க்கிழமை, 14 செப்ரெம்பர் 2010, 08:31.54 AM GMT +05:30 ] | ||||
![]() | ||||
குறிப்பாக கடந்த 2009 மே 18ம் திகதிக்குப் பின்னர் உளரீதியாக உற்சாகம் இழந்து சோர்விலும், ஏமாற்றத்திலும், இயலாமையிலும், ஆதங்கத்திலும் துவண்டுபோயிருந்த நான் புத்துயிர்பெற்று, புது மனிதனாக என்னை உருவாக்கிக்கொண்ட ஒரு விடயமாக இஸ்ரேல் தேசத்தையும், அங்கு நான் பெற்ற அனுபவங்களையும் கூறலாம். சுமார் 1900 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் அடிமைகளாக வாழ்ந்து, உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டு, மற்றவர்களால் வெறுக்கப்பட்டு, நண்பர்களால் ஏமாற்றப்பட்டு, பலம் பொருந்திய நாடுகளினாலெல்லாம் அழிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் எப்படி மீண்டும் தங்களைக் கட்டியெழுப்பிக்கொண்டு, தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்கின்ற சரித்திரங்கள் உண்மையிலேயே ஒவ்வொரு ஈழத் தமிழனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய உண்மைகள். ஒரு தேசத்தினது அல்லது இனத்தினது விடுதலை என்பது சில வருடப் போராட்டத்தையோ அல்லது சில சம்பவங்களையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தேசத்தின் விடுதலை என்பது பல தசாப்தங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட பயணம். இஸ்ரேலியர்களுடைய அந்த விடுதலையின் பயணம் பல நூற்றாண்டுகளைக் கொண்டது. எம்மைப் போல் நூற்றுக்கணக்கான முள்ளிவாய்க்கால்களைக் கண்டுதான் அவர்களுக்கான விடிவு தற்பொழுது அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது. இன்று உலகின் போக்கையும், உலக ஒழுங்கையும் மாற்றிவிடக்கூடியதான வல்லமையை இஸ்ரேல் என்கின்ற சிறிய நாடு பெற்றிருக்கின்றதென்றால், அதன் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேலியர்களுக்கு இருந்த நம்பிக்கை, வைராக்கியம், கடின உழைப்பு, இழப்புக்களைத் தாங்கிக்கொள்ளும் பலம், எதிரிகளைக் கண்டு அஞ்சாத வீரம், ஒற்றுமை - என்று பல விடயங்களை கூறிக்கொண்டே போகலாம். இஸ்ரேல் என்கின்ற தேசம் எப்படி உருவானது? பாபிலோனியர்களாலும், எகிப்தியராலும், ரோமர்களாலும், பிரித்தானியராலும், பேர்சியர்களாலும், கிரேக்கர்களாலும் இன்னும் பல இனக் குழுமங்களினாலும்; அடிமைகளாக்கப்பட்டு பலநூறு ஆண்டுகள் நாடற்றவர்களாக, அகதிகளாக, வேண்டப்படாதவர்களாக வாழ்ந்துவந்த யூதர்களால் எவ்வாறு தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? அகதிகளாக அவர்கள் சிதறி வாழ்ந்த தேசங்களில், அடிமைகளாக அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து வந்த தேசங்களில் எப்படி அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது? இந்த விடயங்களைத்தான் இந்த கட்டுரைத் தொடரில் நாம் விரிவாக ஆராயப் போகின்றோம். இஸ்ரேல் தேசத்திடம் இருந்து ஈழ தேசம் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள், படிப்பினைகள் என்று ஏராளம் இருக்கின்றன. அவற்றைத்தான் இந்த தொடரில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம். அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று என்னைப் போலவே துவண்டுபோயுள்ள பல ஈழத்தமிழ் உள்ளங்களுக்கு, இஸ்ரேல் தேசத்தின் உருவாக்கம் தொடர்பான அறிவு என்பது நிச்சயம் ஒரு பெரிய புத்துணர்ச்சியை அளிக்கும் என்றே நான் நினைக்கின்றேன். நாங்கள் வீழவில்லை என்பதையும், நாங்கள் வீழமாட்டோம் என்பதையும், நாங்கள் தோற்கவில்லை என்பதையும், எழுந்துநிற்க எங்களாலும் முடியும் என்பதையும் இஸ்ரேலின் மண்ணில் நான் நின்ற ஒவ்வொரு கணமும் உளமாற உணர்ந்தேன். எனது மனதில் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்த எனது அனுபவங்களைத்தான் இந்த தொடரின் ஊடாக உங்களுடனும் நான் பகிர்ந்துகொள்ள முனைகின்றேன். இஸ்ரேலிய மக்களுடைய சரித்திரத்தை ஆராய்கின்ற பொழுது அவர்களை வஞ்சிக்காத தேசங்களே உலகில் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர்கள் உலகின் பல நாடுகளினாலும் வஞ்சிக்கப்பட்டார்கள். ஓட ஓட விரட்டப்பட்டார்கள். இன்று ஐரோப்பா எங்களை கைவிட்டுவிட்டதாக நாங்கள் கவலை அடைகின்றோம். இதே ஐரோப்பா இஸ்ரேலியர்களை முன்னர் எப்படி நடாத்தியது தெரியுமா? கி.பி. 1200ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்த யூதர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேறும்படி அந்த அரசாட்சி உத்தரவிட்டது. கி.பி. 1306ம் ஆண்டு பிரான்ஸில் வாழ்ந்து வந்த யூதர்களை அந்த அரசு நாடு கடத்தியிருந்தது. கி.பி. 1355ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் டோலியோ நகரில் வாழ்ந்துவந்த 12,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் கி.பி. 1346ம் ஆண்டு முதல் 1360; ஆண்டு வரையிலான காலப்பகுகளில் கங்கேரியில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள். 1390ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் வசித்துவந்த யூதர்கள் கட்டாயமாக கத்தோலிக்க மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மதம் மாற மறுத்த 180,000 யூதர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். 1495ம் ஆண்டு லிதுவேனியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள். 1502ம் ஆண்டு லிதுவேனியாவின் ரோட்ஸ் என்ற நகரில் வாழ்ந்துவந்த பல யூதர்கள் மதம் மாற்றப்பட்டார்கள், அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள் அல்லது அங்கிருந்து துரத்தப்பட்டார்கள். 1541ம் ஆண்டு நேப்பிள்ஸில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள். 1648ம் ஆண்டு முதல் 1656 ம் ஆண்டுவரை போலந்து நாட்டில் இருந்த யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 1717 முதல் 1747 வரையிலான காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தும் யூதர்கள் அதன் ஆட்சியால் வெளியேற்றப்பட்டார்கள். 1940களில் ஜேர்மனி, ஒஸ்ரியா, ஒல்லாந்து, கங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் வாழ்ந்த சுமார் 60 இலட்சம் யூதர்கள் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுபோன்ற பல கொடுமைகள், இனப்படுகொலைகள், அழிவுகள், இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை என்பனவற்றைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி விடுதலை பெற முடிந்தது? எப்படி அவர்களால் தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்தது? அடுத்த வாரம் முதல் இந்த விடயங்களை நாம் விரிவாகப் பார்ப்போம். நிராஜ் டேவிட் | ||||
|

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
வியாழன், செப்டம்பர் 16, 2010
இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் : (பாகம்-1) - நிராஜ் டேவிட்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக