திங்கள், செப்டம்பர் 06, 2010

அறிஞர் குணா அவர்களின் உரை




கூட்டத்தின் தலைவர் அவர்களே!
கூடியிருக்கும் அறிஞர் பெருமக்களே!
அரசியல் பெருந்தகைகளே!
அறிவார்ந்த சான்றோர்களே!
இனிய தமிழ் நெஞ்சங்களே!


வணக்கம். வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற என்னுடைய நூலின் இரண்டாம் பதிப்பை இந்த அவையின் முன்னால் வைக்கின்றேன். இந்த நூலின் முதற்பதிப்புக்கு வெளீயீட்டு விழா எதுவும் எடுக்கப்பட வில்லை. திருச்சியில் இந் நூலைப் பற்றிய சிறிய அறிமுகக் கூட்டம் மட்டுமே நடைபெற்றது. இதன் முதற்பதிப்பின் மீதான மதிப்புரையோ திறனாய்வோ வரவில்லை. ஓரிரு சிற்றிதழ்கள் மட்டும் ஆறுதலாய், சிறிய அறிமுகத்தை மட்டுமே செய்தன. அதே நிலை என்றில்லாமல், மதிப்புரைகளும் திறனாய்வுகளும் இந்த முறை வரும் என்ற எதிர்பார்ப்புடன் இந் நூலின் இரண்டாம் பதிப்பை உங்கள்முன் வைக்கின்றேன்.

நூலின் உள்ளீட்டைப் பற்றிய சுருக்கமான குறிப்பு இது: தமிழரின் அணுவியம், கிரேக்க அணுவியத்தைவிட மிகவும் முந்தையது. மணிமேகலை, நீலகேசி முதலான நூல்களில் காணப்படும் தமிழரின் அணுக் கோட்பாடு, கிரேக்க அணுக்கோட்பாட்டைவிடச் செறிவானது; செம்மையானது; மேம்பட்டது. இந்த நூலின் முதல் படலம் அதை விளக்குகின்றது.

கணியத்திலும் வானியலிலும் முன்னோடிகளாயிருந்தவர்கள் வள்ளுவக் கணியர்கள். அவர்கள் கதைகளாய்ப் புனைந்து வைத்த வானியல் உருவகங்களே மறைந்த தமிழ் நான்மறையின் உள்ளீடு. இந்த மெய்ம்மையை விரித்துரைக்கின்றது நூலின் இரண்டாம் படலம்.

உலகளாவியது -- பொதுவானது -- குறிப்பானது அல்லது சிறப்பானது என்பன அறிதலின் -- கருத்தாக்கத்தின் -- வெவ்வேறு வரம்புகளாகும். இதைக் கருத்தில்கொண்டே சிறப்பியம் (வைசேடிகம்) என்ற தனி மெய்யியல் பார்வை தமிழில் தோன்றியது.

மற்கலி என்பாரின் அணுக்கோட்பாட்டைத் தழுவிக் கணி ஆதன் (கணாதன்) என்பார் வடித்த தனி மெய்யியல் பள்ளியே சிறப்பியமாகும். அம் மற்கலி, ஒன்பதாம் கதிர் என்னும் நூலை இயற்றினார். அந் நூலின் திருட்டு வடிவமே கணி ஆதன் சங்கதத்தில் (சமற்கிருதத்தில்) இயற்றிய வைசேடிக சூத்திரம் என்ற நூல். இந் நூலின் மூன்றாம் படலம் அதைப் புலப்படுத்துகின்றது.

இறுதியாக, தீர்ப்பு என்ற பகுதி இந் நூலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே நூலாயிருந்த தமிழ் நான்மறையை -- மூலமறையை -- நான்காக்கிப் பௌழிகம், தைத்திரியம், சாமம், தலவகாரம் என்று பாகதமொழியில் முதலில் மொழிபெயர்த்தனர். பின்னர்ப் பாகதத்திலிருந்து இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் பெயர்களில் கி. பி. 4ஆம் நூற்றாண்டில் அவற்றைச் சங்கதமாக்கினர். இதைச் செய்தவர்கள் ‘ஆரியர்’ என்ற பெயரில் வந்த வடுகப் பிராமணர்களே ஆவர். அவ்வாறு செய்தபின், மூலநூலான தமிழ் நான்மறையை இல்லாது ஒழித்தனர். இதனை எடுத்துரைக்கின்றது தீர்ப்பு என்னும் படலம். இதுதான் நூலின் சுருக்கம்.

இனி நாட்டு நடப்புக்கு வருவோம்!

சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை அமைப்பதற்காக, டாட்டாவுக்கும் அம்பானிகளுக்கும் பன்னாட்டு முதலாளியப் பெருமுதலைகளுக்கும் தமிழகத்தையே பங்கு போட்டுத் தந்துவிட்டால், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுமாம்! அச் சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை எதிர்ப்பவர்களெல்லாம் தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களாம்! தமிழரின் காணிகளை -- மண்ணை -- வந்தவனுக்கெல்லாம் தாரை வார்த்துவிட்டால், வேலை வாய்ப்புகள் மலைபோல் குவியுமாம்! இதுதான் வளர்ச்சி -- Development -- என்பதாம். உலகமயமாக்கம் என்னும் பெயரில் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளையும் அவற்றின் பொருளியல்களையும் இயற்கை வளங்களையும் இறைமையையும் உலகப் பணநிதியம் (IMF), உலக வங்கி ஆகியவற்றின் காலடியில் வைக்கச் செய்யும் சூழ்ச்சிக்குரிய உத்திகளில் ஒன்றுதான் வளர்ச்சி (Development) என்னும் திருமந்திரம். தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட வந்தேறிகளுக்கு அதனுடைய உண்மையான பொருள் தெரியுமோ என்னவோ தெரியவில்லை. ஆயினும், ‘வளர்ச்சி’ (Development) என்னும் மந்திரத்தை இவர்களும்கூடக் கிளிப்பிள்ளை போல் ஒப்புவிக்கின்றனர். இந்த வளர்ச்சியைப்பற்றி என்ன சொன்னாலும் நமக்கு ஏறாது. IMF ஆட்களாயிருந்தால்தான் அதன் உண்மையான பொருள் விளங்கும். மாண்புமிகு மன்மோகன் சிங், மாண்டேக் சிங் போன்ற மூளைகளுக்கு -- சிந்தனை தாங்கிகளுக்கு -- மட்டுமே அதன் சூழ்ச்சுமம் தெரியும். காணியை உழுவது, விதைப்பது, நீர் பாய்ச்சுவது, களையெடுப்பது, அறுப்பது என்னும் வேளாண் அறிவை மட்டுமே தெரிந்துவைத்துள்ள பட்டிக்காட்டான் மருத்துவர் ஐயாவுக்கு Development என்றால் என்ன புரியும் என்கின்றன திராவிடங்கள்? அந்த வித்தையின் அரிச்சுவடிகூட விளங்காத இந்த ஆள், சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை எதிர்க்கின்றார்! அடாத செயல்! மண்ணை விற்று --மன்னிக்கவும், கண்ணை விற்று -- சித்திரத்தை வாங்க வேண்டுமா என்று கேட்பது பட்டிக்காட்டுத்தனமில்லையா? வந்தேறிகள் இப்படியெல்லாம் கேட்டு நம்மை மடக்குகின்றனர்.

1780க்கும் 1820க்கும் இடையில் இங்கிலாந்தில் மாபெரும் தொழிற் புரட்சி நடந்தது. நிலக்கிழமை வாழ்வியல் ஒழிந்து முதலாளியம் என்ற விளைப்புமுறை அங்கு கொலுவேறியது. முதலாளிய தொழிலாக்கம், உழவை விஞ்சி வளர்ந்தது; மலைபோல் குவிந்த தொழிற்பண்டங்களைக் கடல்கடந்து கொண்டு சென்று விற்றனர். ஆங்கிலேயர்கள் கடல்கடந்து போய்க் கைப்பற்றிய மூன்று கண்டங்களிலும் நாடுகளிலும் கிடைத்த இடுபொருள்களை அள்ளிக்கொண்டு வந்தமையால் இங்கிலாந்தில் பஞ்சாலைகள், இரும்பாலைகள் போன்ற பெருந்தொழில்கள் பெருகின. இவற்றால் இங்கிலாந்தின் வணிக வகுப்பு ஏற்றம் கண்டது. தொழிற் புரட்சியால் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு புதிய புதிய வேளாண் கருவிகளை அந் நாடு ஆக்கியது. அப்படி இருந்தும், உணவுப் பயிர்களை விளைவிப்பதைவிட பருத்தி முதலான வணிகப்பயிர்களின் பெருக்கத்திற்கே அது வழிகோலியது. இதனால், வணிகமும் பெருந் தொழிலும் வேளாண்மையை மூன்றாம் நிலைக்குத் தள்ளின. வணிக மும் தொழிலும் வேளாண்மையை விஞ்சி நின்றதால் தோன்றிய எதிர் விளைவுகளை இங்கிலாந்து அன்று உணரவில்லை. ஏனெனில், அதன் குடியேற்ற நாடுகள் அதற்குச் சோறு போட்டன. ஆனால், இங்குள்ள நிலையோ வேறு.

“வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா தொல்காப்பியத்தில் உண்டு. இந் நூற்பா ஓர் இடைச் செருகல் என்பது உண்மைதான். உழவுத்தொழில் நன்கு வளர்ந்து நிலக்கிழமை வாழ்வியலாக இலங்கிய காலமே தொல்காப்பியத்தின் காலமாகும். இடைச்செருகல்கள் எனக் கூறத் தக்கனவற்றையெல்லாம் தொல்காப்பியத்திலிருந்து நீக்கிவிட்டுப் பார்த்தாலும், அத் தொல்காப்பியம் கி. மு. 1500 ஆண்டளவில் இயற்றபட்ட நூல் என்பது என்னுடைய கருத்தாகும். அதாவது, 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி நன்கு குதிர்ந்திருந்த நிலக்கிழமை வாழ்க்கையைத் தொல்காப்பியத்தின் ஊடே காண முடிகின்றது.

அடிமை, குடிமை என்ற சொல்லாட்சிகள் தொல்காப்பியத்தில் உண்டு.
“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”
என்றுரைத்துத் தமிழரின் வேளாண் நாகரிகத்தைப் பற்றியும் அது சுட்டு கின்றது. நகர்ப்புற வாழ்க்கையை அடியொற்றிய முதல் நாகரிகத்தைக் கண்டவன் தமிழன். ஆண்டை-அடிமை என்னும் வகுப்புகள் உருவாகாமல் நகரங்களும் நாகரிகங்களும் தோன்றியிருக்க முடியாது. பண் டங்களும் பண்டமாற்றங்களும் இல்லாத வேளாண் வாழ்வியல் இருந்திருக்கவியலாது. பண்டங்களை விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையில் வணிகன் என்னும் இடைத்தரகன் இல்லாத மருத வாழ்வியலை எண்ணிப் பார்க்க முடியாது. கோட்டை அரணை முற்றுவது உழிஞைப் போராம். அந்த அரண் எதிரியிடம் விழாமல் தற்காப்பது தும்பைப் போராம். தொல்காப்பியத்திலேயே இந்தப் போரியல் இலக்கணங்கள் கூறப்படுகின்றன. தொல்காப்பியர் காலத்தில் நிலக்கிழமை இருந்ததையே இவை காட்டுகின்றன.

தமிழரின் நாகரிகம் தோன்றியபோதே, உழவுக்கும் வணிகத் திற்கும் இடையிலான முரண்பாடும் தோன்றியிருக்க வேண்டும். அம் முரண்பாடு சில வேளைகளில் பகையானதும்கூட உண்டு. உழவுக்கும் வணிகத்திற்கும், உழவுக்கும் தொழிலுக்கும் இடையிலான முரண்பாடுகள் பண்டுதொட்டு பல்வேறு அகடு முகடுகளைத் தொட்டு நிற்பதைத் தமிழரின் வரலாறு நெடுகிலும் காணலாம். வணிகம் எப்போதெல்லாம் உழவை அடக்கியொடுக்கப் பார்த்ததோ, அப்போதெல்லாம் அரசு தலையிட்டு முடிவில் உழவுக்குச் சார்பாக நின்று வணிகத்தின் சிறகுகளைக் கத்தரித்தது. இதுவே பண்டைத் தமிழரின் பொருளியல் வரலாறு. “ஏர்ப்பின்னது உலகம்” என்றும், “உழுவான் உலகத்தார்க்கு ஆணி” என்றும் வகுத்துக்கொண்டதே தமிழரின் பொருளியல் உளத்தியல்; அதுவே ஒரு மரபாகவும் இருந்துவந்துள்ளது. ஐரோப்பிய வாய்பாடுகள் இங்குப் பொருந்தா.

தமிழகத்தின்மீது படையெடுத்து வந்தவர்களெல்லாம் தஞ்சை மண்ணைப் பிடிப்பதிலேயே குறியாயிருந்தனர். விசயநகரப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- மராத்தியப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- வளம் கொழிக்கும் நெற்களஞ்சியமாயிருந்தது அன்றைய தஞ்சையின் காவிரிக் கழிமுகப்பகுதி மட்டும்தானென வரலாற்றாசிரியர்கள் பாடம் படிக்கின்றனர். தமிழகத்தின்மீது படையெடுத்து வந்த கன்னட வடுகரும் தெலுங்கு வடுகரும் மராத்திய வடுகரும் அக்காலத் தமிழகத்தை அள்ள அள்ளக் குறையாத ஒரு கருவூலம் என்றே கருதினர். விசயநகர ஆட்சியாளனான இராமராயனுக்கும் முசுலிம் அரசுகளுக்கும் இடையில் 1564ஆம் ஆண் டில் மூண்ட தளிக்காட்டுப் போரில், அந்த இராமராயன் தோற்றான். விசயநகரத்தின் தலைநகர் சூறையாடப்பட்டது. அப்போது, தெலுங்கு வடுகர்கள் பிழைப்புத் தேடி ஓடிவந்த நாடு எது தெரியுமா? தமிழரின் நாடுதான்! அன்று மட்டுமே 10 இலக்கம் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் வந்தேறினராம்!

“சோணாடு சோறுடைத்து” என்பர். அச் சோழநாட்டின் இன்றைய நிலை என்ன? ஒரு பாலைநிலமாக அது திரிந்து வருகின்றது! காரணம்? காவிரிமீது தமிழருக்கு வழிவழியாயிருந்த உரிமையைக் கன்னடன் பறித்துக்கொண்டான். அதுவும், தில்லி ஆண்டையின் பக்கத்துணையோடு! மொழிவழி மாநிலங்கள் என்ற சாக்கில் தமிழகத்தைக் கூறாடியபோது, வற்றாத பெரியாறு ஓடுகின்ற இடுக்கி மாவட்டத்தைத் திராவிடங்களும் இந்தியங்களும் மலையாளிக்குத் தாரை வார்த்தன. அதனால், வெள்ளைக்காரன் கட்டிய முல்லை-பெரியாறு அணையை ஏற்றிக் கட்டிக்கொள்ள மலையாளி விடமாட்டேன் என்கிறான். உச்ச நீதிமன்றத்துத் தீர்ப்பையும் மதிக்க மாட்டேன் என்கிறான். மேற்காகப் பாய்ந்து கடலில் வீணாகக் கலக்கின்ற ஆற்றுநீரையும் தமிழன் கிழக்கே திருப்பிக்கொள்ள விடமாட்டானாம். பாலாற்றைக் கன்னடன் மடக்கியது போதாதென்று தெலுங்கனும் தன்பாட்டுக்கு அணை கட்டி இருப்பதையும் பறிக்கத் துணிந்துவிட்டான். தொன்றுதொட்டுத் தமிழருக்கிருந்த ஆற்றுரிமை பறிபோவதைப்பற்றித் தமிழகத்தை ஆளவந்தவனுக்கும் அக்கறையில்லை. இதற்குக் காரணம் அவர்களது கோழைத்தனமா அல்லது திராவிட வடுகப் பற்றா என்பது உங்களுக்கே தெரியும். அண்டை அயல் மாநிலங்களுடன் தமிழகத்திற்கு உள்ள பூசல்களிலெல்லாம் தில்லிக்காரன் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக வாய்செத்துக் கிடப்பதையும் அறிவீர்கள்.

இந்தச் சூழலில்தான், சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை அமைத்துக்கொள்ள தமிழகத்தின் கன்னிநிலங்களெல்லாம் வந்தேறிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. பொட்டல் நிலமாயிருந்தால் என்ன? திருவாரூரின் வளங்கொழிக்கும் கழனிகளாயிருந்தால் என்ன? அங்கெல்லாம் இனிச் சிறப்புப் பொருளியல் மண்டிலங்கள்தான் பூக்கப் போகின்றனவாம்! வளர்ச்சி -- Development -- என்னும் செப்படிவித்தையைக் காட்டித் தமிழனின் அடிமடியிலேயே கைவைக்கும் வேலை இது! தமிழரை மண்ணில்லாத மக்களாக்க முனைந்துள்ள வந்தேறிகளின் சூழ்ச்சி இது! தமிழகத்தின் தற்சார்பு வேளாண் பொருளி யலைத் திட்டமிட்டுக் குலைக்கின்ற -- அழிக்கின்ற -- கொடுமை இது!

தமிழா, உனக்குக் காவிரி நீர் எதற்கு? பாலாற்று நீர் எதற்கு? முல்லை-பெரியாறு நீர் எதற்கு? பொன்னையாற்று நீர் எதற்கு? உனக்கென டாஸ்மாக் தண்ணீர் இருக்கையில் என்று அரசே சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும் கொடுமை என்ன தற்செயலாகவா நடக்கின்றது? இல்லை! தமிழரின் இளைய தலைமுறையினரில் இன்னொரு தலை முறையை அழிக்கத் துடிக்கும் முயற்சி இது! தமிழரின் பண்பாட்டுச் சீரழிவுக்கு வழிவகுக்கின்ற திட்டமிட்ட சூழ்ச்சி இது! தமிழர் இன ஒழிப்பின் ஒரு காட்சி இது! தமிழ்நாட்டில் தமிழே இல்லை! தமிழ்வழிக் கல்வியும் இல்லை! ஈழத்தைப் பாருங்கள்! அங்கே சிங்களவன் தமிழரின் குடியிருப்புகளை வேண்டுமென்றே குறிவைத்துக் குண்டுமழை பொழிகின்றான். பல்குழல் ஏவுகணைகள் என்றும் மோட்டார் குண்டுகள் என்றும் வான் குண்டுமாரி என்றும் ஓயாது வீசி மக்களை அலைக்கழிக்கின்றான். இருந்தும், அங்குப் பள்ளிகள் இயங்குகின்றன. தாய்மொழிக் கல்வி -- தமிழ்வழிக் கல்வி -- என்ற நுந்தாவிளக்கின் சுடர் அணைந்து விடாமல் இரு கை குவித்துக் கண்ணெனக் காக்கின்றான் அங்கு எம் தலைவன்.

ஆனால், இங்கோ, ஆங்கிலவழிக் கல்விக்கூடங்களைப் புற்றீசல் போல் வளரவிட்டு பெருவணிகமாக்கித் தமிழ்வழிக் கல்வியைத் திட்டமிட்டு ஒழித்து வருகின்றனர் திராவிட வந்தேறிகள்! தமிழில் பேசுவதே தாழ்வு என்னும் தாழ்வு மனப்பான்மையைத் தமிழரின் நெஞ்சங்களில் ஊன்றி வருகின்றனர் வடுக ஆளவந்தார்கள்! அன்றைய நாயக்கராட்சியும் தமிழ்வழிக் கல்வியை முற்றாகப் புறக்கணித்தது. இன்றைய நாயக்க ராட்சியிலும் அதே கதை.

தற்செயலான நடப்பா இது? இல்லை, இல்லை! தமிழ் ஒழிந்தால் தான் தமிழன் ஒழிவான் என்னும் தீய எண்ணத்துடன் திட்டமிட்டே அரங்கேற்றப்படும் சூழ்ச்சி இது!

கடலை ஆண்ட குடி, எம் பரதவர்குடி. மெசொப்பொத்தாமியாவின் உபைதிய நாகரிகத்திற்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் ஈழமிய நாகரித்திற்கும், எகிப்தின் நாகரிகத்திற்கும் மெக்சிக்கோவின் மயன் நாகரிகத்திற்கும் வித்திட்டவர்கள் தமிழ்ப் பரதவர்கள்தாம். தமிழரின் நாகரிகத்தை உலகெலாம் கொண்டு சென்று பரப்பிய பண்பாட்டுத் தூதுவர்கள் எம் பரதவர்கள். ஒருகாலத்தில் பாண்டியப் பேரரசையே எதிர்த்து நின்ற பெருங்குடி எம் பரதவர்குடி. அந்தப் பரதவர்கள் வடுகரின் ஆட்சிக்காலத்தில் நீலக்கடல் மீதான உரிமையை இழந்து வெற்று மீனவர்களாகிக் கெட்டுக் குறுகினர். இந்த மீனவர்களின் கடல் சார்ந்த வாழ்வுரிமை இன்று ஒரேயடியாகப் பறிக்கப்படுகின்றது. சிங்களவன் வந்து அவர்களின் மீன்பிடி உரிமைக்கே வேட்டு வைக்கின்றான். அவர் களைச் சுட்டுச்சுட்டுத் தள்ளுகின்றான். ஈழத்தமிழரின் இனவொழிப்புக்கு மட்டுமன்றி எம்முடைய மீனவத் தமிழனின் வாழ்வுரிமைப் பறிப்புக்கும்கூட இந்தியன் அந்தச் சிங்களனுக்கும் துணை போகின்றான்.

இவற்றையெல்லாம் பார்க்கையில்,
“நாற்புறத்தும் பகைவர் கூட்டம்
நடுவினில் எம் தமிழ்த்தாய்”
என்ற பாவேந்தனின் குமுறல்தானே நெஞ்சில் நிழலாடுகின்றது?

குமரிமுனைக்கும் தெற்கே இருப்பது இலங்கைத்தீவு. கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எச்சம் அது. அங்குள்ள தமிழனைப் பாருங்கள்! தமிழனின் அறிவும் அறமும் மறமும் அங்கு வீடுகட்டிக் களமாடுகின்றது. உலகமே அதைக் கண்டு வியக்கின்றது.

ஆனால், இங்குள்ள தமிழனோ பேய்த்தூக்கத்தில் சமைந்து கிடக்கின்றான்! இவனும் ஒரு பூதம்தான்! தன் ஆற்றலையும் பெருமை யையும் ஓர்மையையும் மீளப் பெறாதவண்ணம் ஆளவந்தார்கள் அவனுக்குப் பல்வகைப் போதைகளை ஊட்டி உறங்க வைத்துள்ளனர். கை கால்கள் விலங்கிடப்பட்டு அவன் மலையாய்ச் சாய்ந்து கிடக்கின்றான். நம்மவரில் படித்ததுகளுக்குப் போதை தரும் கஞ்சம்புல் கொத்து ஒன்றை வடுகன் தந்தான். அதைக் கொண்டுபோய் அவர்கள் உறங்கி கிடக்கும் தமிழன் என்ற அந்தப் பூதத்தின் மூக்கருகில் நீட்டி, ‘திராவிடத் தமிழா எழு! திராவிடத் தமிழா எழுந்திரு!’ என்று சொல்லி அவனை எழுப்பப் பார்த்தனர். அவனோ, எழுவதாய் இல்லை. நாமும் அவன் அருகில் போனோம். ‘தமிழன் திராவிடன் அல்லன்; இந்தியனும் அல்லன்; இந்துவும் அல்லன்; தமிழன் தமிழன்தான்; நாம் தமிழர், நாம் தமிழர், நாம் தமிழர் என்போம்!’ என்று அவன் காதில் ஒரு மந்திரத்தை ஓதினோம். மெல்லப் புரண்டு படுத்தான் அத் தமிழன்! புரிந்துவிட்டது! இத் தமிழன் விழித்துக்கொள்வான் என்பது தெரிந்துவிட்டது!

நீண்ட நெடிய உறக்கத்திலிருந்து அத் தமிழன் விழித்தெழுந்தால், உலகம் நடுநடுங்கும்! விண் அதிரும்! காற்று முரசறையும்! இருட்கிழித்துத் தளையறுத்துத் தமிழன் வானளாவி நிற்பான்!

அந்த நாள் நெருங்கிவிட்டது!
அதனால், கையை உயர்த்திக் கூறுவேன்;
எம் இனம் எழும்!
எந்தமிழினம் உயிர்த்தெழும்! சிலிர்த்தெழும்!
எழும்! எழும்! எழும்!


நன்றி. வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக