


- கருவை முருகு,
மாநில ஊடகபிரிவு செயலாளர் ,
தமிழர் களம் .
தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
கூடங்குளம் அணுஉலையை மூடிவிட வேண்டுமென்றும் அதனால் வரும் பேராபத்தும் பேரிழப்பும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது என்பதையும் நாம் பலமுறை எடுத்துச் சொல்லியாயிற்று. இதைப் பற்றி பல போராட்டங்களும் நடைபெற்று இன்றைய நாளில் இந்தப் போராட்டம் வலுப்பெற்று இருக்கிறது. அணு உலைகளினால் வரும் பேராபத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நடந்த சுனாமிக்குப் பிறகு உலகம் கண்டிருக்கிறது. அது மீண்டும் அதைப் பற்றிய விவாதத்தை அரங்கிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இது நாம் விழித்துக் கொள்ளும் நேரம்.
நன்மைகள்!
அணு உலை அமைப்பதினால் சில நன்மைகள் இருக்கின்றன என்றாலும் அது கொண்டு வரும் பேரழிவைக் காண்கிறபோது அது கொண்டு வரும் நன்மையே தேவையில்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு அணு உலையிலிருந்து அளவிட முடியாத ஆற்றல் வெளிவருவதனால் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும், அதனால் நவீன உலகில் எல்லாரும் மின்சக்தியைப் பெற்று மிகவும் சுகமான வாழ்க்கை வாழ முடியும். அது மட்டுமல்ல மிகவும் குறைவான கார்பன்டை ஆச்சைடை வெளியிடுவதால், உலகம் வெப்பமடைவது தாமதப்படுத்தப்படும் போன்ற சில நன்மைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
பேராபத்துகள்!
ஆனால் எல்லாவற்றைக் காட்டிலும் அணு உலை அமைப்பதனால் வரும் பேராபத்துகள் வருவது தவிர்க்க இயலாது. உடனே சிலர் சொல்லுவது - எதில் ஆபத்து இல்லை - பேருந்தில் விபத்து நடக்கிறது, விமானத்தில் விபத்து நடக்கிறது அதற்காக அதில் செல்லாமல் இருக்கிறோமா? நண்பர்களே, இது போன்ற விபத்துகள் அதில் பயணம் செய்பவர்களோடு போய்விடும். ஆனால் அணு உலை விபத்து என்பது அதையும் தாண்டி - தாண்டி.. உதாரணத்திற்கு, ரஷ்யா, செர்னோபிலில் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற அணு உலை விபத்தின் கோரம் இன்றும் இருக்கிறது - அதனால் கதிர்வீச்சுகள் நிறைந்த நீர், காற்று இன்றும் பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
பாதுகாப்பானதா?
சிலர் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள் சொல்லிவிட்டார்கள் -அல்லது பிரதமர் சொல்லிவிட்டார், அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள் - அணு உலை பாதுகாப்பானது என்று - அதுதான் கொட்டை எழுத்துகளில் மிக முக்கியமான செய்தியாக வருகிறது. பிரதமர் அது மட்டுமா சொன்னார், ஊழல் ஒன்றும் நடக்கவில்லை என்றும்தான் சொன்னார். அமைச்சர்கள் நாங்கள் எல்லாம் நாட்டுக்காக எங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றும்தான் சொல்லுகிறார்கள். அதெல்லாம் உண்மையாகி விடுமா?
அணு உலை கட்டமைப்பு என்பது மிகவும் சிரத்தையோடு, பாதுகாப்பு வளையங்களை அமைப்பதில் சரியான முறையைப் பின்பற்றி அமைக்க வேண்டும். அப்படிப் பின்பற்றி அமைக்கப்பட்ட அணு உலைகள் கூட விபத்து ஏற்படும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். அது செர்னோபிலாக இருக்கட்டும் அல்லது புகுஷிமா, தாய்ச்சி ஆக இருக்கட்டும். எந்த அணு உலையும் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று யாரும் சான்றிதழ் கொடுக்க இயலாது. ஜப்பான்காரனாலேயே அந்த அளவுக்கு பாதுகாப்பான ஒன்றை அமைக்க முடியவில்லை. அதென்ன ஜப்பான்காரனாலேயே - அதனால்தானே நாம் அவர்களது பொருட்களையே போட்டி போட்டு வாங்குகிறோம்.
எனவே அதில் இம்மியளவு குறைந்தாலும் - அணு உலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். கல்மாடி கட்டிய ஒரு பாலம் விளையாட்டு தொடங்குவதற்கு முன்னரே இடிந்து விழுந்தது நமக்குத் தெரியும். அது மட்டுமல்ல மிகப் பெரிய திட்டங்களை செய்யும் யாராக இருந்தாலும் சில பெர்சென்ட்டுகள் கமிஷன் தொடங்கி அப்புறம், பயன்படுத்தும் கம்பியில் சில மில்லி மீட்டர் குறைத்துப் போட்டால் சில கோடிகள் நமக்கு மீளும் என்று திட்டமிடுபவர்களும், இரண்டுக்கு ஒன்று என்று கலவை இருக்க வேண்டுமென்றால் அதை மூணுக்கு ஒண்ணாகப் போட்டால், இன்னும் சில கோடிகள் மிஞ்சும் என்றும் கணக்குப் போடும் நமது ஆட்களை நம்பி நாம் இந்த அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினால் நம்மை விட மிகச் சிறந்த அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது.
கழிவுகளாலும் ஆபத்தா?
அதுமட்டுமல்ல - பேராபத்து அணுஉலை அமைப்பதில் மட்டுமல்ல - அணு சக்தி உருவாக்கத்தில் வெளிவரும் கழிவுகளைப் பாதுகாப்பது என்பதுதான் மிகப் பெரிய விடயாமாக இருக்கிறது. அணு உலை வெடிப்பதோ அல்லது அது வெளிவிடும் கதிர் வீச்சுகளால் ஆபத்து என்பதைப் போல இந்தக் கழிவுகளாலும் ஆபத்து என்பது உண்மை. இந்தக் கழிவுகளை ஏறக்குறைய 10,000 ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமாம். இது நம்ம ஊரில் நடக்கிற விஷயமா. கழிவுகளை எங்கே கொட்டிப் பாதுகாக்கப் போகிறார்கள்?
தமிழின அழிப்பு!
அதுமட்டுமல்லாமல் இந்த அணு மின்நிலயம் என்பது கூடங்குளத்திற்கான திட்டமும் அல்ல - ஏற்கனவே சில மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்பு தமிழ்நாட்டில் குடிபுகுந்த திட்டம். இங்கே உள்ளவர்கள் உயிர் மட்டும் கிள்ளுக்கீரையா என்ன? ஏற்கனவே கல்பாக்கத்தில் கடந்த சுனாமியின்போது வெளிவராத செய்திகள் இன்னும் உண்டு. ஆக மொத்தம் வட தமிழகம் இப்போது தென் தமிழகம் என்று ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் அதனால் தமிழினத்தையும் அழிப்பதற்கான சதி என்றுதான் இதையும் அணுக வேண்டியிருக்கிறது. அணுகுண்டுகள் மூலமாக ஜப்பானில் ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கு மேல் மக்கள் மாண்டு போனார்கள். அதைவிட அதிக இழப்பை அணு உலைகள் கொண்டு வரக்கூடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டால், இதன் பேராபத்தும் பேரழிவும் நம் மண்டைக்கு எட்டும். அதை விடுத்து அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பிக் கெட்டு அழிய முடியாது.
அப்புறம் எப்படித்தான் நாம் வளர்வது?
இதைப் பற்றிய அழிவைச் சொல்லுவதனால் நாம் வளர்ச்சி அடைவதைத் தடுக்கிறோம் என்றோ அல்லது மின்சக்தி உற்பத்திக்குத் தடையாக இருக்கிறோம் என்றோ அர்த்தம் அல்ல. வருடம் முழுவதும் சூரியன் ஆட்சி செய்கிற இந்த மண்ணில் அதிலிருந்து மின் உற்பத்தி தயாரிப்பது என்பதை மிகவும் சிரத்தையோடு செய்து விட்டாலே போதும் என்பதே நமது வாதம். இயங்குகின்ற அணு உலைகளை இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மூடி விடுவோம் என்று ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்ற ஒரு பொது வாக்கெடுப்பில் அணு உலைகள் அமைக்கக் கூடாது என்று தொண்ணூறு சதவிகித மக்கள் வாக்களித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள். சூரிய ஒளி மிகவும் குறைவான நாட்களே குறைந்த சில மணி நேரங்களே தனது வீச்சைக் காட்டக் கூடிய நாடுகளே மாற்று வழிக்கான முயற்சியில் இறங்கியிருக்கும்போது நாம் அதற்கான முயற்சியில் இறங்குவதே சரி.
தேவையற்ற இழப்பை அழிவைச் சந்திக்கும் முன்பு நாம் விழித்துக் கொள்ளுவதே இப்போதையத் தேவை. இப்போது நடைபெறும் போராட்டத்தில் எல்லாரும் இணைவதும், அதனால் மாற்று முயற்சிகளுக்காக அனைவரும் குரலெழுப்புவதும் அவசியமாகிறது. நாமும் நமது சந்ததியினரும் அணுக்கதிர் வீச்சுகளால் பாதிக்கப்படாத காற்றைச் சுவாசிக்கவும், நீரைப் பருகவும் உரிமையுண்டு. அந்த உரிமையைத் தடுப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. மக்களுக்காக மக்களால் என்பது உண்மையானால் - மக்கள் பிரதிநிதிகள் கட்டாயம் செவிசாய்த்துத்தான் ஆக வேண்டும்.
- அப்பு [ unmaione@gmail.com]
நன்றி : கீற்று.காம்
கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.
iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.
iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.
அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?
உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.
பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.
அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.
2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.
1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.
நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.
நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.
கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிப்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.
இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா?
ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா?
சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!
செய்தி : ஊடகப்பிரிவு , தமிழர் களம் .
நன்றி : கீற்று .காம்
ஒரே தீர்வுதான் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்குங்கள்! முன்னெடுங்கள்! முனைப்போடு செயலாற்றுங்கள்! இந்தத் தமிழினத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்று நெஞ்சில் நெருப்பாற்றலோடு எழுதிக் கொள்ளுங்கள்! இவ்வாறு பரமக்குடி பொதுக்கூட்டத்தில் தமிழர் களத்தின் அரிமாவளவன் எழுச்சி உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இலங்கையின் கொடுங்கோலன் ராசபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பரமக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர்களத்தின் அரிமாவளவன் எழுச்சி உரையாற்றினார். கூட்டத்தில் பாவலர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் அரிமாவளவன் பேசியதாவது:-
இலங்கையின் முற்றதிகாரி ராசபக்சே ஓர் இழிவான இனப்படுகொலைக் குற்றவாளி என்று இன்று உலகிற்கே தெரியும்! ஆனால், அந்த இனப்படுகொலைக்கு முற்றாகத் துணைபோன இந்தியாவையும் இந்திய அதிகாரிகளையும் மூடி மறைத்து வைத்திருக்கிறார்கள். இந்தியாதான் என்னைத் தவறாக வழிகாட்டியது என்று ராசபக்சே இன்று புலம்பித் தவிக்கிறான்! இந்தியா இதை மறுக்கவில்லை!
ஈழத்தமிழர்களின் 62 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் முற்பகுதி அறவழிப் போராட்டமாக அமைந்தது. ஆனாலும் சிங்களப் பேரினவாத அரசு அப்போராட்டங்களை கொலைவெறியோடும் குருதிப் பசியோடும்தான் அடக்கி ஒடுக்கியது. இன்றைக்கு ஊடகங்கள் விழித்துக் கொண்டிருக்கிற காலம்! முள்ளிவாய்க்கால் உலகின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், 62 ஆண்டுகாலப் போராட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
காந்தி தேசமென்றும், அகிம்சையின் களம் என்றும் பாரதத் திருநாடு என்றும் பீற்றிக் கொள்கிற இந்தியா கண்ணெதிரே வெட்ட வெளிச்சத்தில் நடந்த இந்த பச்சைப் படுகொலைகளை, இன அழிப்பைக் கண்டும் காணாததுபோலத்தான் இருந்தது. காரணம் “நாங்கள் இந்தியர்கள் நீங்கள் தமிழர்கள்” என்று டில்லி வல்லாட்சி எப்போதுமே கருதி வந்தது. பாலத்தீன விடுதலைக்கும் வங்காளத்தின் விடுதலைக்கும் காவடி தூக்கிய இந்தியா ஈழத்தின் மீது எரி நெருப்பைக் கொட்டியது! காரணம் அவர்கள் இந்தியர்கள், நீங்கள் தமிழர்கள்!
ராஜீவ் காந்தி இலங்கையில் அமைதி ஏற்படுத்தப் போகிறேன் என்று அனுப்பிய அமைதிப் படை பத்தாயிரம் தமிழர்களைக் கொன்றுவிட்டுத்தான் திரும்பியது. பார்ப்பன ஏடான இந்தியன் எக்ஸ்பிரஸ் அன்றைக்கு ஒரு செய்தியை வெளியிட்டது. 44 தமிழ்ப் பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்முறையால் அவர்களைச் சிதைத்து இறுதியில் தெருவில் கிடத்தி தகரிளை ஏற்றிக் கொன்றார்கள் என்று!
அமைதிப் படை இப்படியெல்லாம் செய்த அட்டூழியத்தினால் பத்தாயிரம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாடியவுடன் பதறியடித்து எழுந்த தமிழன் வாஞ்சையோடு பாரத நாட்டின் மூவண்ணக் கொடிக்கு பற்றோடு வணக்கம் செலுத்துகிறான். வெகுளி இவன்! இன்னும் இந்தியாதான் தாய்நாடு என்று நம்பிக் கொண்டு இருக்கிறான்! டில்லிக்காரனோ, “நீ தமிழனடா! நான் இந்தியனடா” என்று இறுமாப்போடு எட்டி உதைக்கிறான்! “எசமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வைத்து”ப் பழகிய அப்பாவித் தமிழன் ஆயிற்றே! என்ன செய்வது?
இறுதியில் முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ்ச் சொந்தங்கள் பட்டினிப் பசியோடு, நண்டுகளும் சிண்டுகளுமாய் பச்சைக் குழந்தைகள் பாலுக்கு அழுது கொண்டு நிற்க, பெண்டு பிள்ளைகள் உயிர்ப்பிச்சை கேட்டு பரிதவித்து நின்ற அந்த நேரத்தில் கொடுங்கோலன் ராசபக்சே இந்த காந்தி தேசத்தைக் கேட்டுவிட்டுத்தான் ரசாயனக் குண்டுகளைப் போட்டு அந்த இடத்தை ஐந்து நிமிடங்களில் சாம்பல் மேடாக்கினான்! பிணக்குவியலாய் முள்ளிவாய்க்காலின் கரை மாறியது!
அன்றொருநாள் யாழ்ப்பாணத்திற்குள் சிக்கித் தவித்த நாற்பதாயிரம் சிங்களப் படை வீரர்களுக்கு விடுதலைப் புலிகள் உயிர்ப்பிச்சை கொடுத்தார்கள்! ஆனால் நரக நாதாரிகளின் கூட்டில் மலர்ந்த இந்திய சிங்களப் பேய்கள் அந்த 40 ஆயிரம் தமிழர்களை நொடியில் தின்று தீர்த்தது. காரணம் அவர்கள் இந்தியர்கள் நாமோ தமிழர்கள்.
சேனல் 4ன் வழியாக கண்ட காட்சிகளில் உலகே உறைந்து போயிருக்கிற வேளையில் அந்தக் கொலைகாரப் படைகளுக்கு தாய்த் தமிழ் மண்ணில் ஊட்டியில் இன்றைக்கும் பயிற்சி கொடுக்கிறான் இந்தியன்! காரணம் சிங்களவன் இன்னும் கொல்லத்துடித்துக் கொண்டிருக்கிறான். அச் சிங்களனுக்கு எப்படி பாலியல் வன்முறைகள் செய்வது, எப்படிக் கொத்துக் குண்டுகள் வீசுவது, எப்படி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்று இன்னும் பயிற்சி கொடுக்கிறான். காரணம், அவன் இந்தியன்! நீ கீழ் நிலையில் கிடக்கிற, ஒடுக்கப்படவேண்டியவன், நசுக்கப்பட வேண்டியவன், நசுக்கி ஒழிக்கப்பட வேண்டியவன் என்று அவன் கருதுகிற தமிழ் இனத்தைச் சேர்ந்தவன் நீ!
உன் கடற்கரையில் 545 மீனவர்களைப் பிணமாக்கிய சிங்களனுக்கு இந்தியா உதவியது! இன்றும் உதவிக் கொண்டிருக்கிறது. காரணம் அவன் இந்தியன், நீ தமிழன்! நீ அழிக்கப்பட வேண்டும், உன் இனம், உன் மொழி, உன் சுவடுகள், உன் வரலாறு, உன் கலைகள், உன் பண்பாடு, உன் பெண்கள், உன் பிள்ளைகள், உன் எதிர்காலம் எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று நினைக்கிற இந்தியன்! நீதான் வெள்ளந்தியாக, வெகுளியாக, பால்மனம் படைந்தவனாக நிற்கிறாய்! இன்னும் நம்பிக் கொண்டு நிற்கிறாய்! பட்டாக்கத்தியை உயர்த்தி நிற்கிற கசாப்புக் கடைக்காரனைப் பார்த்து புன்னகை பூக்கிற ஆட்டுக்குட்டியாய் நிற்கிறாய்! நீ, தமிழன்! அவன் இந்தியன்!
இங்கிலாந்தில் கிடக்கிற ஒரு வெள்ளையன் மாந்த உணர்வினால் தூண்டப்பெற்று சேனல் நான்கு என்கிற தொலைக்காட்சியில் உன் இனம் அழிக்கப்பட்டதை போட்டுக் காட்டினான்! இந்த உலகம் குலுங்கி அழுதது! ஆனால், தமிழினத் தலைவனாகப் பட்டம் சூட்டிக் கொண்டு பதவியில் இருந்த கருணாநிதியிடம் 20க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் இருந்தன, இன்னும் இருக்கின்றன! அவையெல்லாம் நித்தியரஞ்சிதாவையும் அவர்களது படுக்கைகளையும் வலம் வந்து வலம் வந்து காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன! காரணம் அவர்கள் திராவிடர்கள்! நீயோ தமிழன்! தாழ்ந்து கிடக்கிற தமிழன்!
40 நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தத் திருட்டுத் திராவிடக் கட்சிக் கூட்டணிக்கு அன்று நீ கொடுத்திருந்தாய். அவர்கள் தயவில் இந்தாலிய டிராக்கூலாவின் டில்லி அரசாட்சி இருந்தது! உன் சொந்தங்களை அவர்கள் அங்கே கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் ஆயுதங்களும் ஆட்களும் அங்கே படுகொலைகளை நடத்திக் கொண்டிருந்தபோது கருணாநிதியின் கண் அசைவிற்குத்தான் 40 பேரும் காத்திருந்தார்கள். ஆனால், கருணாநிதி கடற்கரையில் படுத்து நாடகமாடினார்! திகாரில் வாடும் கனிமொழிக்காக கதறியழும் இந்தக் கயவர், நயவஞ்சகர், ஏன் இசைப்பிரியா சிதைக்கப்பட்ட போது அவளைப் போன்ற பல்லாயிரம் பெண்களும் பிள்ளைகளும் இளைஞர்களும் சதைக் குவியலாய் கிடந்தபோது நாடகமாடினார்! காரணம் அவர் திராவிடர்! நீ தமிழன்! வரலாறு அறியாத தமிழன்! அவனுக்கு 1800 ஆண்டு காலப் பகை! உன்னை அழித்தொழித்து அத்தனையையும் அள்ளிக் கொள்ள எத்தனிக்கும் பகைவன்!
உலகப் பரப்பில் 12 கோடித் தமிழர்கள் நாம்! தாய்த் தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் நாம்! ஆனால் இலங்கை என்கிற சுண்டைக் காய் நாட்டில் ஒன்றறைக் கோடி சிங்களர்கள்! அவர்கள் இன்றைக்கு 12 கோடி தமிழர்களை வென்றிருக்கிறார்கள். இந்த உண்மை கசக்கிறது! எட்டிக்காயின் கேவலமாய்க் கசக்கிறது! 12 கோடி தமிழர்கள், வரலாற்றில் மிகச் சிறந்த ஓர் இனம்! வீரம் செறிந்த இனம் இன்று ஒன்றைரைக் கோடி சிங்கள இன வெறியர்களால் தோற்கடிக்கப்பட்டுக் கிடக்கிது. ஒரே காரணம்! நமக்கு நாடில்லை! அவனிடம் ஒரு நாடு இருக்கிறது!
நாம் நாடற்ற குடிகளாய் இருக்கும் வரை கையேந்தி கையேந்தி கையறு நிலையில் நிற்போம்! எவன் ஒருவன் உன்னை அழித்தொழிக்க நினைக்கிறானோ, அவனிடமே நீ கையேந்தி நிற்கிறாய்! உன் பிள்ளைகளை கொன்றொழிக்க ஆயுதம் கொடுத்தவனிடம் கையேந்தி நிற்கிறாய்! நீ மாயையில் நிற்கிறாய்! இந்தியன் என்ற மாயையில், சேற்றுக் குழியில் சிக்கி நிற்கின்றாய்!
ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்க பெருத்த ஆர்வம் காட்டிய கருணாநிதியும், இந்தியாவின் சில மலையாள அதிகாரிகளும் இந்த இனப் படுகொலைக்கு முகாமையான காரண கர்த்தாக்கள்! இவர்கள் இன்று சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். சிவசங்கர் மேனனும், நாராயணனும், நிரூபமாவும், கருணாநியின் கோபாலபுரச் சந்திப்புகளுக்குப் பிறகே கொழும்பு சென்று கூடிக் குலாவினர்! இவர்களும் இனப்படுகொலைக் குற்றவாளிகளே! ஆனால், எப்படி இதற்கெல்லாம் தீர்வு காணப்போகிறாம்!
ஒரே தீர்வுதான்! “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்குங்கள், முன்னெடுங்கள், முனைப்போடு செயலாற்றுங்கள்! இந்தத் தமிழ்இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்று நெஞ்சில் நெருப்பாற்றலோடு எழுதிக் கொள்ளுங்கள்! தமிழருக்கு என்று ஒரு நாடு தோன்றினால் மட்டுமே ஈழம் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழருக்குத் தீர்வு உண்டு, விடுதலை உண்டு என்று நம்புங்கள்! உன் நண்பன் யார், எதிரி யார் என்று தெளிவாக வகுத்துக் கொள்ளுங்கள்!
நீ திராவிடனுமில்லை! இந்தியனுமில்லை! நீ தமிழன் என்று உன்னை உதைத்துச் சொல்லுகிற திராவிடனுக்கும் இந்தியனுக்கும் முன்பாக துணிந்து நிமிர்ந்து எழுந்து சொல்லுங்கள்! “தமிழ்நாடு தமிழருக்கே” என்று ஓங்கிச் சொல்லுங்கள், உரத்த குரலில் சொல்லுங்கள்! தமிழருக்கு என்றொரு நாடு அமைவது தமிழினத்தின் பிறப்புரிமை என்று சொல்லுங்கள்! அப்படி நீங்கள் சொல்கிற பொற்காலம் அண்மித்துவிட்டால் உலகத் தமிழர்கள் விடுதலைக் காற்றை விரைவில் சுவாசிப்பர்! என்பது மட்டும் உறுதி. இவ்வாறு அரிமாவளவன் எழுச்சியுரையாற்றினார்.