வியாழன், செப்டம்பர் 15, 2011

மறக்க முடியுமா ? மன்னிக்க முடியுமா ?



மறக்கவும் முடியாது , மன்னிக்கவும் முடியாது .
மறக்க முடியுமா மன்னிக்கமுடியுமா என்று காங்கிரசார் சுவரொட்டி பரப்புரை செய்து வருகின்றனர் . அவர்கள் கேட்டுள்ள கேள்வியை அவர்களை பார்த்து நாமும் கேட்பதற்கு ஒரு வாய்ப்பை தந்துள்ளனர் .
1947 குப் பின் காங்கிரசும் நேரு குடும்பமும் முந்திரா ஊழல் தொடங்கி அலைகற்றை ஊழல் வரை கொள்ளையடிததை நாம் மறக்க முடியுமா ? நேருவின் மகள் இந்திராவின் நெருக்கடி கால அட்டுழியத்தை மறக்க முடியுமா ? மன்னிக்கத்தான் முடியுமா ?

ராஜீவ் காந்தியின் போபர்ஸ் பீரங்கி ஊழலை எந்த பீரங்கியை வைத்து தகர்ப்பது?.

இந்திரா அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடத்திய அட்டூழியத்தை எப்படி மறப்பது ? மன்னிப்பது?
இந்திரா கொல்லப்பட்டபோது வடமாநிலங்களில் 8000 கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லபட்டார்களே அதை எப்படி மறப்பது ? மன்னிப்பது ?

காஸ்மீரில்பொது வாக்கெடுப்பு நடத்த தயார் என்று கூறி இந்தியாவோடு சேர்த்துக்கொண்டு இன்றுவரை வாக்கெடுப்பு நடத்தாமல் பல இலச்சம் கோடி ரூபாய்கள் செலவில் படையணிகளை கொண்டு இன்று வரை நரவேட்டையாடி வருவதை எப்படி மறப்பது ? மன்னிப்பது?

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கி அடிமை கூடாரத்தில் அடைத்து வைத்திருப்பதை எப்படி மறக்க முடியும் ? மன்னிக்க முடியும் ?

குறிப்பாக மொழி வழி தேசிய மாநில அமைப்பு என்ற பெயரில் தமிழர் நிலமான தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை மலையாளிகளுக்கும் , கோலார் தங்கவயல் , கொள்ளேகால் பகுதிகளை கன்னடர்களுக்கும் , திருப்பதி சித்தூர் பகுதிகளை தெலுங்கர்களுக்கும் பிடுங்கி கொடுத்துவிட்ட நேருவையும் , காங்கிரசையும் எப்படி மறப்பது ? மன்னிப்பது?

அதுமட்டுமல்லாமல் நதிநீர் பிரச்சனையில் நீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல் முல்லை பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுக்கு ஆதரவாகவும் , காவிரி பிரச்சனையில் கன்னடர்களுக்கு ஆதரவாகவும் , பாலாற்று பிரச்சனையில் தெலுங்கர்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் காங்கிரசை மறக்க முடியுமா ? மன்னிக்க முடியுமா?

மும்பையில் தமிழர்கள் ஓட ஓட விரட்டியடிக்கபட்டபோதும், காவிரி கலவரத்தில் தமிழர்கள் கன்னடர்களால் நர வேட்டையாடப்பட்டபோதும் வேடிக்கை பார்த்த காங்கிரசை எப்படி மறப்பது ? மன்னிப்பது?

அமைதி படை என்ற பெயரில் அட்டூழிய படையை அனுப்பி ஈழத் தமிழர்களை கொன்று குவித்து , தமிழ் பெண்களை சூறையாடிய ராசீவையும் , காங்கிரசையும் மறக்க முடியுமா ? மன்னிக்க முடியுமா ?

தமிழகத்தின் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த இந்திராவையும் , காங்கிரசையும் மறக்க முடியுமா? மன்னிக்க முடியுமா?

கூடங்குளத்தில் அணு உலையை கொண்டு வந்து தமிழினத்தை அழிக்க நினைக்கும் மன்மோகன் , சோனியா காங்கிரசை மன்னிக்க முடியுமா ?

முள்ளி வாய்க்காலில் ஒன்னரை இலச்சம் தமிழர்களை , அதுவும் ஒரே நாளில் நாற்பதாயிரம் தமிழர்களை கொன்று குவிக்க இலங்கைக்கு ஆயுதம் கொடுத்த இத்தாலி சோனியா காங்கிரசை மறக்க முடியுமா ? மன்னிக்க முடியுமா ?

எவ்வித ரத்த தொடர்பும் இல்லாத ஐரோப்பிய , அமெரிக்க வெள்ளை இனத்தவர் இலங்கையின் போர் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்ற போது அது குறித்து வாய் திறக்காமல் மேலும் மேலும் பொருளாதார உதவிகளை இலங்கைக்கு வாரி வழங்கும் காங்கிரசு கட்சியின் ஆட்சியை மறக்க முடியுமா ? இல்லை மன்னிக்கத்தான் முடியுமா?

இரா .சீவானந்தம் ,
வழக்கறிஞர் ,
தமிழர் களம் , கரூர் .

வெளியீடு : ஊடகபிரிவு , தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக