வியாழன், செப்டம்பர் 01, 2011

தமிழர் உணர்வுகள் டெல்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் டெல்லியும் தமிழகத்தைக் கட்டுப்படுத்தாது- அரிமா.

மதுரை: ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகள் டெல்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் டெல்லியும் இனி தமிழகத்தை கட்டுப்படுத்தாது என்று தமிழர்களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழர்களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டாட்சி முறை தான். இந்தியாவிற்குள் இருக்கிற தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமித்த குரலைத்தான் தமிழக சட்டமன்றம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு பற்றிய தீர்மானத்தில் வெளிப்படுத்தியது.

ஆனால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சித் “அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று சொல்வதன் மூலம், மக்களின் குரல் எங்களைக் கட்டுப்படுத்தாது நாங்கள் எங்கள் விருப்பம் போல் செயல்படுவோம் என்கிறார்.

தமிழக மக்கள் என்றைக்கும் நீதிக்குப் புறம்பாக செயற்படுகிறவர்கள் அல்ல. நாங்கள் தவறான நபர்களுக்காக கையேந்தி யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. எந்த வகையிலும் வன்முறையை நாடுகிறவர்களும் அல்ல. 21 ஆண்டுகள் சிறையில் தவித்த 3 அப்பாவித் தமிழர்கள் இந்தக் கொலையோடு தொடர்பு இல்லாதவர்கள் என்று நீதிமன்றமே கூறும் காலம் வரும்.

இருப்பினும் இந்த மூவரையும் தூக்கிலிட்டே தீர வேண்டும் என்று காங்கிரசுக் கட்சியும் அதன் எடுபிடிகளும் மூர்க்கத்தனத்தோடு மோதும் போது கூட தமிழினம் இன்னும் அறப்போராட்டங்களையே நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த வேளையில் ஒட்டு மொத்தத் தமிழகத்தின் குரலை எதிரொலிப்பதாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மிக எளிதாகவும் இழிவாகவும் கருதிக் கொண்டு “அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று டெல்லி அரசு சொல்லுமானால் அது இந்தியா என்கிற கோட்பாட்டை, ஒற்றுமையை ஒருமைப்பாட்டைச் சிதைப்பதாகும்.

ஏழு கோடித் தமிழர்களின் உணர்வும் கொந்தளிப்பும் கோரிக்கையும் உங்களைக் கட்டுப்படுத்தாது என்றால் இனி உங்களது அதிகாரமும், ஆளுமையும், அரசும் எங்களையும் கட்டுப்படுத்தாது. நீங்கள் எப்படி ஒரு இறையாண்மையுடன் வாழ்கிறீர்களோ அது போன்றே தமிழ்த் தேசிய இனமும் தன் இறையாண்மையுடன் இனி வாழத் துடிக்கும்.

இவ்வாறு அரிமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்

ஊடகப் பிரிவு, கரூர்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக