வியாழன், செப்டம்பர் 22, 2011

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி கருவூரில் தமிழர் களம் கண்டன ஆர்ப்பாட்டம்



இந்திய அரசு கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதை எதிர்த்து நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாகவும் , இலங்கை பேரினவாத அரசுக்கு கடல் வழியாக மின்சாரம் வழங்க திட்டமிட்டு வருவதை கண்டித்தும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் 22.09.2011 வியாழன் மாலை கரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் களம் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் உலகத் தமிழர் பேரமைப்பு , தமிழ் தேசிய கட்சி, சமூக செயல்பாட்டு இயக்கம் உள்ளிட்ட அணு உலைக்கு எதிரான பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் தமிழர் களத்தின் சட்ட ஆலோசகர் திரு .இரா .சீவானந்தம் அவர்கள் தமது கண்டன உரையில் இந்திய அரசானது தனது ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட தமிழர்களை பலிகொடுக்க முனைந்துள்ளதாகவும் , இதற்கு தமிழக அரசு எவ்விதத்திலும் துணை நிற்க கூடாது என்றும், அணு உலை என்பது மின்சாரத் தேவைக்காக மட்டுமல்ல அது கொடிய அணு ஆயுதங்கள் தயாரிக்கின்ற கூடாராமகவும் செயல்பட இருப்பதை சுட்டிகாட்டினார் . மேலும் , கல்பாக்கத்தில் இன்றும் பிறக்கும் குழந்தைகள் குறை உள்ள குழந்தைகளாக இருக்கின்றன என்றும் , தோல் நோய் , புற்றுநோய் , உள்ளிட்ட கொடிய நோய்கள் உருவாக அணு உலை காரணமாக இருப்பதாகவும் விளக்கினார் . அணு உலையின் பாதுகாப்பு இயற்கையின் சீற்றங்களுக்கு எவ்விதத்திலும் ஈடு கொடுக்க முடியாது என்றும் அதற்கு எந்த அரசும் உத்திரவாதம் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார் . கூடங்குளம் அணு உலை தென் மாவட்ட மக்களின் பிரச்சனை மட்டுமல்ல அது ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினை என்றும் இதற்காக தமிழகம் முழுவதும் தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் தமிழர்களின் உரிமைகள் மாற்று இனத்தவர்களால் எவ்வாறெல்லாம் வன்கவர்பு செய்யப்படுகிறது என்றும் விளக்கி பேசினார் . சுப்ரமணியசாமி , சடகோபன் போன்றவர்கள் தமிழன துரோகிகளை தமிழர்கள் ஒடுக்க வேண்டும் எனவும் சோனியா காங்கிரஸ் அரசு தமிழர்களை கூண்டோடு அழிக்க திட்டமிட்டு செயல்படுவதையும் தனது கண்டன உரையில் பதிவு செய்தார் .
தமிழர் களத்தின் கலையரசி பேசுகையில் தமிழினத்திற்கு எதிரான கொடுமைகள் உலகில் எந்த மூலையில் நடந்தாலும் அதை நாம் ஒன்றிணைந்து தட்டி கேட்க வேண்டும் , ஆனால் தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று சேரமுடியாமல் திராவிட சிந்தனையும் , திராவிட அரசியல் வாதிகளும் செயல்படுகின்றனர் அதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும் . தமிழ்நாட்டை தமிழர்கள்தான் அதுவும் நல்ல தமிழர்கள்தான் ஆளவேண்டும் என சூளுரைத்தார் .
நிகழ்வில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை கண்டன முழக்கமிட்டனர் . நிகழ்வுக்கு வந்தவர்களை தமிழர் களத்தின் மாவட்ட பொறுப்பாளர் ரத்தினம் வரவேற்றார் , முடிவில் ரவிச்சந்திரன் நன்றியுரை வழங்கினார் .
செய்தி : ஊடகப்பிரிவு , தமிழர் களம் , கரூர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக