திங்கள், செப்டம்பர் 12, 2011

கூடங்குளம் தென் தமிழகத்தின் அடிவயிற்றில் பதித்திருக்கும் அணுகுண்டு! அரிமாவளவன் கண்டனம்






கடலோரக் கிராமம் இடிந்தகரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடுவில் உரையாற்றிய தமிழர்களப் பொதுச்செயலாளர் அரிமாவளவன் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கடுமையாகக் கண்டித்து உரையாற்றினார்.
“இன்று காலை இந்தப் போராட்டத்திற்குப் பல்லாயிரம் மக்களோடு மக்களாக பங்கேற்க நான் வந்து கொண்டிருந்தபோது, இந்த மக்கள் எழுச்சியை எப்படியாவது முறியடிக்கவேண்டும் என்ற முனைப்போடு அரசும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் குறுக்கு வழிகளை நாடுகின்றனர் என அறிய வந்தேன். இராதபுரம் வட்டாட்சியர், “போராட்டம் நடத்தினால், கூடங்குளம் இடிந்தகரை ஊர்களுக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் வெட்டுவேன்” என்று அச்சுறுத்தியிருகிறார். சனநாயக மரபுகளுக்கு இவரைப் போன்ற சர்வாதிகார அதிகாரிகள் வெளிப்படையாக விட்டிருக்கிற சவால் இது. மக்களுடைய வரிப்பணத்திலே வாழ்கின்ற இவர்கள் மக்களுடைய அடிப்படை உரிமைகளை எடுத்துவிடுவேன் என்று ஆணவத்தோடு சொல்லியிருக்கிறார். இன்று மாலை 6 மணிக்குள் இராதாபுரம் வட்டாட்சியர் அவர்கள் இது குறித்த தன்னிலை விளக்கமோ, மன்னிப்போ கோராவிட்டால் அவருடைய பணி நீக்கத்திற்காக தமிழர்களம் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்.
கூடங்குளத்தில் வருவது அணுமின் நிலையமல்ல. 14 ஆயிரம் கோடிகளை விழுங்கிவிட்டு அங்கே நிற்பது நம்மைக் கொல்லத் துடிக்கும் அணுகுண்டு. சப்பான நகரங்களான் ஹிரோசிமா நாகசாகியில் வெடித்தது போன்று 300 மடங்கு சக்தி வாய்ந்த அணுஉலை அது. அது வெடித்தால் தென் தமிழகம் கருகிப்போய்விடும் என்பதுதான் உண்மை.
பாதுகாப்பானது என்று மன்மோகன் சிங் சொல்கிறார். நாட்டின் தலைநகராம் தில்லிக்குப் பல அடுக்குப் பாதுகாப்பு உண்டு. அதிலும் அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் பாராளுமன்றம் நிற்கிறது. தில்லி உயர் நீதி மன்றம் நிற்கிறது. ஆனால், தாக்கநினைத்தவர்கள் மிக எளிதாக வந்து பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே அதைத் தாக்கிச் சென்றார்கள். எங்கே போனது உங்கள் பாதுகாப்பு? அண்மையில் தில்லி உயர் நீதி மன்றத்தைத் தாக்கினார்கள். எங்கே போனது உங்கள் பாதுகாப்பு? பம்பாய் நகரம் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கிச் சிதைக்கப்பட்டபோது எங்கே போனது உங்கள் பாதுகாப்பு? நீங்கள் வாழ்கிற, நேசிக்கிற வடநாட்டையே உங்களால் பாதுகாக்க முடியவில்லையே! நீங்கள் வெறுத்து ஒதுக்குகிற தமிழகத்தையும் தமிழர்களையுமா நீங்கள் சிரத்தையோடு பாதுகாப்பீர்கள்?
எங்கள் தமிழ்ச் சொந்தங்கள் இதே கடற்கரைகளில் 550 பேர் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உங்களது கப்பற்படை ஏனென்று கேட்டதா? எங்கள் ஈழத்துச் சொந்தங்கள் ஒன்றரை லட்சம் பேரை அண்மையில் கொன்று குவிக்கத் துணை போனீர்களே! உங்களிடமா எங்கள் பாதுகாப்பைக் கொடுக்கச் சொல்கிறீர்கள்? அறுக்கத் துடிக்கிற கசாப்புக்கடைகாரன் ஆடுகளைப் பார்த்து சீவாருணியம் பேசிய கதையாக இருக்கிறது, சோனியா அரசின் தமிழர் பாதுகாப்பு ஏற்பாடுகள்! உங்களை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. பல ஆண்டுகளுக்குத் தேவையான யுரேனியத்தை கூடங்குளத்தில் நீங்கள் சேர்த்து வைத்திருப்பது அணுமின்னுக்காக அல்ல! அதன் கழிவுகளிலிருந்து அணுகுண்டுகள் தயாரிக்கத்தான் என்பது ஊரறிந்த உண்மை. எப்படி மகிந்த ராசபக்ச என்ற கொடுங்கோலன் எங்கள் தமிழனத்தைக் கருவறுக்க துடிக்கிறானோ அதுபோன்றே தென் தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்தொழிக்க கூடங்குளத்தையும் வடதமிழ்நாட்டைச் சுடுகாடாக்க கல்பாக்கத்தையும் வைத்திருக்கிறீர்கள். கல்பாக்கத்தில் இப்போதும் சாவுகள் நடக்கின்றன. ஆனால் அதை மக்களிடமிருந்து மறைக்கிறீர்கள்! தடுக்கிறீர்களா? தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் இன்னும் பிணங்கள் விழுகின்றன! தடுத்து எங்களைக் காத்துவிட்டீர்களா? ஆகவேதான் அடித்துச் சொல்கிற«£ம். “எங்களுக்கு இந்த இழவுத் தொழிற்சாலை வேண்டாம்” என்று.
பல்லாயிரம் கோடிகளை முடக்கிவிட்டோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் முடக்கி விட்டதற்காக நாங்கள் உயிர்ப்பலிகளைத் தரமுடியாது. சேதுசமுத்திரத் திட்டத்திலும்தான் முடக்கினீர்கள். அது என்னவாயிற்று? சட்டமன்றக் கட்டடத்தில் முடக்கினீர்கள் அது இன்று என்னவாயிற்று? அலைக்கற்றை ஊழலிலும், ஸ்விஸ் வங்கிகளிலும் இன்னும் பிற ஊழல்களில் முடங்கிக் கிடக்கிற பல லட்சம் கோடிகள் என்னவாயிற்று?
தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு வேண்டுகோள் வைக்கிறோம். நச்சு நிறைந்த பார்த்தீனியம் செடிகளை ஒழிப்பேன் என்று சூளுரைக்கிறீர்கள். தென் தமிழகத்தைக் சுடுகாடாக்க வந்திருக்கும் கூடங்குளம் அணுஉலையை தடுத்து நிறுத்துங்கள்.
அறப்போராட்டங்களுக்கு மதிப்பளித்து வெற்றி தாருங்கள்! தோற்றுப் போகும் மக்களின் அறப்போராட்டங்களே ஆயுதப்போராட்டங்களின் வித்தாகிப் போகிறது! அந்த விரும்பத்தகாத சூழல்களை அறவே அகற்றிட வேண்டுமானால், ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் இங்கே வைக்கிற இந்த கோரிக்கைக்கு செவி மடுங்கள், செயற்படுங்கள்” என்று தனது கண்டன உரையில் அரிமாவளவன் தெரிவித்தார்.

செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக