ஞாயிறு, நவம்பர் 13, 2011

தமிழர் எழுச்சிப் பெருவிழா ! -புதுவை 2011






12.11.2011. புதுவை .

தமிழர் களத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் நாளை தமிழர் எழுச்சிப் பெருவிழாவாக நிகழ்த்துவது வழக்கம் . இந்த ஆண்டு நவம்பர் முதல் நாள் அல்லாமல் பனிரெண்டாம் நாள் புதுவையில் முதன் முறையாக நிகழ்த்தப் பட்டதற்கு தொடர் மழையும் ஒரு காரணம் . மற்றொன்று தமிழர் களத்தின் வேர்கள் பதிந்து புதுவையில் சில மாதங்களே ஆன நிலையில் புதிய தலைமுறையினரால் நிகழ்த்தப் பட இருந்ததால் சில நாட்கள் தள்ளிப் போய்விட்டது . அதற்காக அங்கு பணியாற்றியவர்களின் உழைப்பு வீண்போகவில்லை. அதன் அதிர்வுகள் இனிதான் தொடரும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை. இனி களத்தில் ....
அந்த இனிய மாலை நேரத்தில் புதுவையின் நடுவில் புயலாய் ஆர்பரித்துக் கிளம்பிய தமிழர் பண்பாட்டுக் கலை குழுவினரின் அதிரடி ஆட்டத்தில் ஒரு கணம் திகைத்து நின்றது புதுவை .நிகழ்வை திருதமிழர் களத்தின் பன்னாட்டு செய்தி தொடர்பாளர் திரு சங்கர் தாமொஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார் .ஆய்வறிஞர் குணா , ந.மு.தமிழ்மணி . பேரா.சாம்சன், கரூர் அரசு, நீலமேகம் , புலவர் கி த பச்சையப்பன், புலவர் செம்பியன், பறம்பை அறிவன் , தமிழாலயன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வு திரு அழகர் (எ) பிரகாசு அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. அடுத்ததாக உரை நிகழ்த்திய திரு. தமிழ்மணி அவர்கள் பேசுகையில் இந்தநாள் தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக பிரிந்த நாள் மட்டுமல்ல . புதுவையும் தனி மாநிலமாக பிரிந்த நாள் என்றும், இந்திய விடுதலை போராட்டம் என்பது மக்களுடைய விடுதலைக்கான போராட்டம் அல்ல . இந்தியா என்ற கற்பனை நாட்டை வெளி நாட்டவர்கள் சுரண்டுவதை தடுத்து தாங்கள் சுரண்ட இங்கிருந்த பெரு முதலாளிகள் தான் விடுதலை போராட்டத்தை கையிலெடுத்தனர். இந்த நாட்டின் வளங்களை கொள்ளையிட்டனர் . இங்கிருந்த தேசிய இனங்களின் உரிமைகளை பறித்துவிட்டனர் . அதேபோல் மொழிவழி மாநில போராட்டங்களை ஒடுக்கியதும் இந்த இந்திய பேராய கட்சிதான் . இந்தியா என்றும் இந்தியர் என்றும் நம்மை நம்பவைத்து பலிகடாவாக்கியது இந்த இந்திய பேராய கட்சிதான் என்றும் இந்திய முதலாளிகளின் , வந்தேறிகளின் கபட நாடகத்தை அம்பலப் படுத்துவதே தனது குறிக்கோள் என்றும் துவக்க உரை நிகழ்த்தினார் .
அடுத்ததாக பேசிய புலவர் பாவிசைகோ கூடங்குளம் அணு உலை கட்டியதில் நடந்திருக்கும் ஊழல்களை தனது நகைசுவையான பேச்சில் அம்பலப் படுத்தினார். தமிழர்களின் சொத்துகளை கொள்ளையடித்த இந்த இழவெடுத்த இந்திய ஒருமைப்பாடு நமக்கு வேண்டாம் . தமிழர்களுக்கான பூக்காடாக தனி தமிழ்நாடு பிறக்கட்டும் என்றும் பேசினார் .
தமிழர் களத்தின் தெற்கு மண்டல பொறுப்பாளர் திரு மை பா சேசுராசு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் குறித்தும் , இந்திய அரசு தமிழர்களின் போராட்டத்தை எப்படி கொச்சை படுத்துகிறது என்றும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நடக்கிறது என்றும் விரிவாக எடுத்துரைத்தார் . தமிழக அரசும் தமிழர்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்கிறது என்றும். அணுகுண்டோடு வாழச் சொல்லும் இந்தியா எங்களுக்கு தேவையில்லை. தமிழர்களின் இறையான்மைதான் எங்களுக்கு தேவை . அடிவாங்கும் தமிழர்கள் திருப்பி அடிக்கும் காலம் வரும் என்று எழுச்சியுரை நிகழ்த்தினார். அணு உலைக்கு எதிரான எழுச்சி முழக்கத்துடன் அவரின் உரை முடிந்தது .
அடுத்ததாக தலைமை உரை நிகழ்த்திய தமிழர்களத்தின் பொதுசெயலாளர் திரு அரிமாவளவன் பேசுகையில் இந்திய தேசிய அடிமையாக வாழும் நாராயண சாமி போன்ற தமிழர்கள் வாழ்வதுதான் வேதனை என்றும், கூடங்குளம் அணு மின் உற்பத்திக்கான திட்டம் அல்ல மக்களின் வரிபணத்தை கொள்ளையடிப்பதற்கான திட்டம் என்றார். அப்துல் கலாம் தமிழினத்திற்கு நல்லவராக நடந்துகொள்ளவில்லை என்பதை விளக்கினார் . தேர்தலின் போது மட்டும் தமிழர்களாக தெரிந்தவர்கள் இன்று கூடங்குளத்தில் போராடும் போது மீனவர்களாகவும், கிறித்துவர்களாகவும் தெரிகின்றனர் .கமிசன் பணத்திற்காக ஹச் சி எல் நிறுவனம் தரமில்லாத கட்டிடத்தை கூடன்குளதிற்காக கட்டி கொடுத்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது என்றார் . பல லச்சம் தமிழர்களை கொன்றொழித்த இலங்கைக்கு மின்சாரம் வழங்கவும் , தமிழினத்தை சுரண்டிப் பிழைக்கும் அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கவும் இத்தாலி சோனியா அரசு இந்த திட்டத்தை தமிழர்கள் தலையில் திணிக்கப் பார்க்கிறது என்றும் , சங்க பரிவார அமைப்புகளின் எடுபிடியாக தினமலர் நாளேடு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றும் சுட்டிகாட்டினார் . அதே சமயம் உயர் கல்வி இன்று தமிழ் மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது அதற்காக தமிழர்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார். மேலும் தமிழர் களம் அமைப்பானது வெறும் புத்தகங்கள் படித்துவிட்டு மட்டும் துவங்கப்பட்டதல்ல . 1991 இல் கர்நாடகாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது தானும் நேரடியாக அந்த கொடுமையை அனுபவித்ததன் விளைவே தமிழர் களம் தோன்ற காரனமாயிருந்தது. இருப்பத்திஒரு ஆண்டுகளாக எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் தமிழின விடுதலையை நோக்கி களப் பணியாற்றும் ஒரு இயக்கம்தான் தமிழர் களம் என்றார் . எனவே இனி இதுதான் தருணம் இது தமிழர் களத்தின் காலம் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி களமாட வாருங்கள் தமிழராய் வாருங்கள் !என்று பேசிய அவர் இந்த நிகழ்வின் எழுச்சி தீர்மானங்களை வாசித்தார் . அவை
௧. பேரிடர் விளைவிக்கும் அணு உலைகளை தில்லி அரசு தமிழகத்தின் மீது திட்டமிட்டே திணித்த சதியை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை தமிழர் களம் முழுமையாக ஆதரிக்கிறது. கூடங்குளம் அணுஉலையை உடனே மூடவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுகொள்கிறது.
௨. திருவள்ளூர் மாவட்டம் தேர்வாகண்டிகையில் இயற்கை வளங்களை அழித்து, அடித்தட்டு மக்களின் வாழ்வாதரங்களை பாழாக்கி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் கொடுமையை தமிழர் களம் வன்மையாக கண்டிக்கிறது. மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட இடங்களை அவர்களிடமே திருப்பி தரவேண்டும் .
௩. மக்களின் வரிபணத்தில் நடத்தப்படும் நடுவண் அரசின் உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் மாற்று மொழியில் இருப்பதால் தமிழ் மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர் . இது இந்தி வெறியையும் , இன வெறியையும் காட்டுகிறது . எனவே பொதுவான நுழைவுத் தேர்வுகள் அந்தந்த மாநில மொழியிலேயே நடத்தபடவேண்டும் என தமிழர் களம் கோருகிறது.
௪.ராசீவ் காந்தி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் அப்பாவித் தமிழர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் இம்மாநாடு கோருகிறது.
௫.13500 மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்ததை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. உடனே பணி நீக்க ஆணையை திரும்ப பெற்று அப்பணி யாளர்களை மீண்டும் பணியிலமர்த்த வேண்டுகிறது.
௬.இந்திய திராவிட கூட்டுச் சதியால் தமிழர்களின் மரபு வழிச் சொத்தான கச்சத் தீவை சிங்களர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது வரம்பு மீறிய செயலாகும் . அப்பாவி தமிழ் மீனவர்கள் 550 கும் மேற்பட்டவர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டுள்ளனர் தமிழ் மீனவர்களின் மீதான தாக்குதல் தொடர் கதையாகி வருகிறது. இது உடனே தடுக்கப்பட வேண்டியதாகும் . அல்லது இந்திய கடற்படையானது தமிழர்களின் சோழக் கடற்கரையினை விட்டு விலக வேண்டும் . கட்சத்தீவை மீட்டு மீண்டும் அதை தமிழர்களிடம் ஒப்படைக்கவேண்டும் .
௭. தமிழர் நாடு வந்தேறிகளின் வேட்டை காடாக மாறிவருகிறது. இந்த சூழலில் புதுவையில் அமைந்திருக்கும் புரட்சிப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கல்லறை எவ்வித பராமரிப்பும் இன்றி குப்பை மேடாக மாறி கிடப்பது வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவதுபோல் உள்ளது. எனவே புதுவை அரசானது அவரின் கல்லறையை புதுப்பித்து பராமரிக்க வேண்டும் எனவும் இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது
இறுதியாக எழுச்சியுரை நிகழ்த்திய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் அவர்கள் பேசுகையில் விடுதலைக்கு முன்பிருந்தே இந்திய அரசியலாளர்கள் தமிழர்களை ஏமாற்றிதான் வந்துள்ளனர் என்றும் நீண்ட காலம் அடிமையாக வாழ்ந்த தமிழினம் மொழி வழியாக பிரிந்த நாள் மற்ற மாநிலங்களுக்கு கொண்டாட்டமான நாள் என்றால் தமிழர்களுக்கு அது ஒரு இழப்பை உணர்த்தும் நாளாகும் . தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்டது. மார்வாடி குஜராத்தி, மலையாளிகளால் சுரண்டப்பட்டு வரும் தமிழகத்தை மீட்க தமிழர்கள் சாதி கடந்து மதம் கடந்து ஒரே இனமாய் ஒன்றிணைய வேண்டும் . அப்போதுதான் தமிழர்களுக்கான நாடாக தமிழ்நாடு இருக்கும் என்று தனது கருத்தை ஆழமாக விதைத்தார்.
நிகழ்வில் சென்னையிலிருந்து வந்து மேடை நாடகம் நிகழ்த்திய கல்லூரி மாணவர்கள் திராவிடத்தால் நாம் வீழ்ந்ததை சுட்டிக் காட்டியதும . தமிழகத்தில் தமிழர்கள் ஏதிலியாக தவிக்கும் சூழல் நிகழ்வதை கண்முன் நிறுத்தினர்.
நிகழ்வில் அரிமாவளவன் எழுதிய நெருப்பு விதைகள் புத்தகம் வெளியிடப்பட்டது. நூலை ஆய்வறிஞர் திரு குணா அவர்கள் வெளியிட திரு .தமிழ்மணி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இறுதியாக தமிழர் களத்தின் புதுவை மாநில செய்தி தொடர்பாளர் திரு .சு.அன்பழகன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட தமிழர் எழுச்சிப் பெருவிழா வானது நிறைவு பெற்றது.

செய்தி : ஊடகப்பிரிவு . தமிழர் களம் , கரூர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக