வெள்ளி, நவம்பர் 04, 2011

கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து கரூரில் தமிழர்களம் போராட்டம்






30.10.2011 Sunday

பேரிடர் விளைவிக்கும் அணுஉலையை எதிர்த்து ஒருபுறம் பொதுமக்கள் திரண்டு போராடி வருகின்றனர். அணுஉலையை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது. சாதி மத அடிப்படையில் போராட்டத்தைத் திசைதிருப்ப சில ஊடகங்கள் முயன்று வருகின்ற வேளையில் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி அதைத் தமிழகமெங்கும் விரிவுபடுத்தும் நோக்கோடு தமிழர்களம் கரூர் நகரில் நேற்று போராட்டத்தில் குதித்தது. போராட்டத்திற்கு தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தலைமை தாங்கினார்.
“போபால் நகரில் விஷ வாயுக் கசிவினால் பல்லாயிரம் மக்கள் பலியாகினர். ஆனால், யூனியர் கார்பைட் என்ற அந்த நிறுவனத்தின் தலைவரான ஆண்டர்சன் என்ற அமெரிக்கனை தனி விமானத்தில் ஏற்றி தப்ப வைத்தது அன்றைய காங்கிரசு அரசு. காமன்வெல்த் போட்டிகள் தொடங்குமுன்னரே கட்டடங்கள் இடிந்து விழுந்து காங்கிரசுக் கல்மாடி இன்று கம்பி எண்ணுகிறார். மும்பை குண்டுவெடிப்போடு தொடர்புடைய அமெரிக்கனான ஹெட்லியை தப்பவிட்டது மட்டுமல்லாமல் பாதுகாப்புத்துறைச் செயலராக இருந்த எம்.கே.நாராயணன் அமெரிக்க அதிகாரிகளோடு பேரம்பேசியதை விக்கிலீக்ஸ் கசிய விட்டது நாடறிந்த உண்மை. இவர்கள்தான் தேசப் பற்றாளர்களாம். இவர்கள்தான் கூடங்குளத்திற்கு நற்சான்றிதழ் கொடுத்து நம் தலையில் அதைக் கட்டப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு மின்சாரம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் சொட்டுத் தண்ணீர் தராத கேரளாவிற்கும் இனவெறி இலங்கைக்கும் மின்சாரம் போகப்போகிறது. பயன்பாட்டை அறுவடை செய்யக் காத்திருக்கும் இவர்கள் அணுஉலையை அவர்கள் இடத்தில் நிறுவ எதிர்க்கிறார்கள். ஆக அவர்களுக்கெல்லாம் பயன்பாடு வேண்டும் பாதிப்பு வேண்டாம். ஆனால் தமிழர்கள் தலைமீது அத்தனைப் பாதிப்பும் வேண்டும் என்கிறார்கள். 14ஆயிரம் கோடியைக் கொட்டிவிட்டோம் என்கிறார்கள். சேது சமுத்திரத் திட்டத்திலே எத்தனையாயிரம் கோடிகளைக் கொட்டினீர்கள்? எதற்காக அந்தத் திட்டத்தில் மண்ணையள்ளிப் போட்டீர்கள்? ராமர் பாலம் இருந்தது என்ற புராணத்தை மேற்கோள் காட்டித்தானே நிறுத்தினீர்கள். அலைக்கற்றை ஊழலில் அடித்தீர்கள், சட்டசபைக் கட்டடத்தை இழுத்து மூடுகிறீர்கள். அப்போதெல்லாம் வராத கரிசனை பேரிடர் விளைவிக்கும் அணுஉலைக்கு மட்டும் எப்படி வருகிறது? அணுஉலை ஆபத்து இல்லை என்றால் தில்லியில் வைத்துக் கொள்ள வேண்யதுதானே. இந்தக் கொலை ஆலையில் கொட்டிய பணத்தை மாற்றுத் திட்டங்களில் செலவிடுங்கள் என்று திட்டங்களைக் கையில் வைத்துக் கொண்டு இவர்களிடம் வேண்டுகிறோம். மின் சேமிப்புத் திட்டத்தின் வழியாக கூடங்குளத்தில் கிடைக்கப்போகும் 2000 மெகாவாட்டைவிட அதிகம் பெறலாம் என்ற திட்டத்தை இவர்களிடம் கொடுக்கிறோம். இதே அணுஉலையை மாற்று மின் திட்டத்திற்காகப் பயன்படுத்தி அதே அளவு மின் உற்பத்தி செய்யலாம் என்றும் திட்டத்தை அளிக்கிறோம். ஆனால், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல அணுஉலைக்காக மத்திய அரசு ஒற்றைக்காலில் நிற்கிறது. காரணம் இது மின் திட்டமல்ல. அணுக்கழிவுகளுக்காக, அணு ஆயுதங்களுக்காக செயற்படுத்தப்படப்போகும் திட்டம் என்பது தெளிவாகிறது. அதனால்தான் ஆலையில் வேலை செய்கிறவர்களுக்கு 15 கி.மீ. தள்ளி செட்டி குளத்தில் இருப்பிடங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கிற பல்லாயிரம் தமிழ் மக்கள் சாக வேண்டும். வந்திருக்கிற அவர்கள் பாதிப்பு என்றால் தப்பி ஓடவேண்டும். எனவேதான், இந்தப் பேரிடர் திட்டம வேண்டாம் என்கிறோம். எல்லா மாநில அரசுகளும் எங்கள் மாநிலத்தில் அணுமின் நிலையம் வேண்டாம் என்கிறது. இழித்தவாயர்கள் தமிழர்கள் என்று எண்ணிக்கொண்டு மத்திய அரசு எங்கள் மீது இதைத் திணிக்க முற்படுகிறது. இழுத்து மூடும்வரை ஓயமாட்டோம்” என்று அரிமாவளவன் தன் உரையில் குறிப்பிட்டார். வழக்கறிஞர் சீவானந்தம், அரசமாணிக்கம், ரவிசந்திரன், முருகானந்தம் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக