வெள்ளி, நவம்பர் 04, 2011

இந்திரன் வழிபாடு - குணா

இந்திரன் ஒரு வானியல் உருவகமாகும். ஞாயிறு பெயரும் பாதையே ஞாயிற்றுமண்டிலம். வான்கோளின் நடுவரையிலிருந்து எப்சிலான் (e) என்ற கோணத்திலிருக்கும் நீள்வட்டப் பாதையே அஞ் ஞாயிற்றுமண்டிலம். இந்த ஞாயிற்றுமண்டிலத்தின் உச்ச நிலையே இந்திரனின் குடியிருப்பு என்று தொல்தமிழ் வானியலார் கற்பித்தனர். வடக்குநோக்கிப் பெயர்கிற ஞாயிற்றின் வடசெலவு (உத்தராயனம்) முடிந்து அதன் தெற்குநோக்கிய பெயர்ச்சியாகிய தென்செலவு (தட்சிணாயனம்) தொடங்கும் புள்ளிநிலையை இக் கால வானியல் வேனில்முடங்கல் (Summer Sols-tice) என்று குறிப்பிடுகின்றது.


ஞாயிற்றின் பெயர்ச்சியிலான உச்சநிலை என்பதால், அப் புள்ளிநிலையைக் குறிக்கும் இந்திரனை வானுறையும் தேவர்களுக் கெலாம் தலைவனாக்கினர். இதையொட்டித் தொல்தமிழ் வானியலார் ஆக்கிய வானியல் புனைகதைகளே இந்திரனைப் பற்றிய தொன்மக்கதைகளாக வழிவழியாக வந்தன.


வடகோளரையில் வேனில்முடங்கலுக்குள் ஞாயிறு புகுவது சூன் 20/21ஆம் நாளாகும். இது முதுவேனில் பருவத்தில் நிகழும். இடியுடனும் மின்னலுடனும் பெய்யும் கோடைமழை இக் காலத்தது. இதனால்தான், இடியும் மழையும் இந்திரனோடு தொடர்புடையனவாயின. இதனையொட்டியும் தொன்மங்கள் புனையப்பட்டன.


செத்தோரையெல்லாம் விண்ணில் திகழும் உடுக்களாக்கி மடிந்தும் மடியாமல் அவர்கள் அங்கு வாழ்கின்றனரென்ற தமிழரின் தொல்முன்னோர்களின் கற்பனையே ஒரு நம்பிக்கையானது. இதனால்தான், செத்தபின் வானுலகம் புகுவதென்னும் நம்பிக்கை புரையோடியுள்ளது.

செத்தோரெல்லாம் உடுக்களாகிவிடுவரென்றால், அவ் வுடுக்களே தேவர்களாயிருத்தல் வேண்டுமன்றோ? எண்ணரியனவான உடுக்கள் எல்லாவற்றையுமா தேவர்களாக்க முடியும்? முடியாதே! அதனால்தான், நினைவில் வைத்துப் போற்றத்தக்க ஒரு சிலர் மட்டுமே தெய்வங்களாக்கப்பட்டனர்.

ஞாயிற்றுமண்டிலத்தின்மீது 27 உடுத்தொகுதிகள் (Constellations) உண்டு. ஆரல் (கார்த்திகை) தொடங்கி அடுப்புக்கொண்டை (பரணி) வரை என்றமையும் அந்த இருபத்தேழு உடுத்தொகுதிகள் அனைத்தையுமா தேவர்களாக்கினர்? இல்லையே!


இந்திரனின் தலைமையில் வானுறையும் தேவர்கள் 33 பேர் என்பதுதான் கணக்கு. இந்திரன் ஞாயிற்றுமண்டிலத்தின் மீதான ஒரு ஞாயிற்றுநிலை மட்டுமேயென்றபோதும், அவன் தலைமையிலான தேவர்கள் எல்லாருமே வானில் உலவும் உடுக்களாகவோ ஞாயிற்றுநிலைகளாகவோ இல்லை. பின்னர், யார்தான் அம் முப்பத்து மூன்று தேவர்கள்?


எழுத்துகளே தேவர்களாயின!


உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு, ஆய்தவெழுத்து ஒன்று, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் இரண்டு என்று தமிழிலுள்ள முப்பத்து மூன்று எழுத்துகளே முப்பத்து மூன்று தேவர்களாகக் கற்பிக்கப்பட்டனவென்பதை இன்றைய ஆய்வுகள் தெள்ளத்தெளிவாகப் புலப்படுத்துகின்றன.


இந்திரனுக்கும் தமிழின் எழுத்திலக்கணத்திற்கும் இடையில் கண்ணும் இமையும் போன்ற உறவுள்ளமை இதனால் புலப்படும். இதை வைத்தே, ஐந்திரம் என்னும் தமிழ் இலக்கணநூலை யாத்தவன் இந்திரனே என்று சொல்லப்பட்டது. ஐந்திரம் என்ற அந்த இலக்கணநூல் நமக்கேன் கிடைக்கவில்லை? இந்திரன் வழிபாட்டையும் இந்திரனை இறைவனாகக் கொண்ட சமயத்தையும் கூண்டோடு ஒழித்தபோது, அவன் இயற்றியதாகக் கூறப்பட்ட ஐந்திரம் என்ற தமிழிலக்கண நூலும்கூடச் சுவடும் தெரியாதவாறு அழித்தொழிக்கப்பட்டிருக்க வேண்டுமன்றோ?


கன்னட மொழியில் முதன்முதலில் தோன்றிய நூல் கி. பி. 9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கவிராச மார்கம் என்ற இலக்கண நூலாகும். அதற்குமுன் கன்னட மொழியில் இலக்கியமென யாதும் இருந்ததில்லை. கவிராச மார்கம் என்னும் அம் முதல்நூல் உள்ளபடியே பல்லவன் முதலாம் நரசிம்மவர்மனின் அரசவையில் சங்கதப் புலவனாயிருந்த தண்டி என்பான் சங்கத மொழியில் ஆக்கிய காவ்ய தர்சா என்ற நூலின் மொழிபெயர்ப்பாகும். அதாவது, கன்னட மொழியில் முதன்முதலில் தோன்றிய நூல் ஒரு மொழி பெயர்ப்பு நூலேயாகும்.


சங்கதம் என்னும் எசுப்பராந்தோ அல்லது செயற்கைமொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. அந்த மொழியிலான முதல்நூலும்கூட ஒரு மொழிபெயர்ப்பு நூலாக இருந்தது போலும். அந் நூல், தமிழிலான ஐந்திரம் என்னும் இலக்கணநூலின் மொழிபெயர்ப்பாகவே இருந்திருக்க வேண்டும். இதனால்தான், சங்கத மொழிக்கான முன்னோடி இலக்கண மரபு ஐந்திர இலக்கண மரபேயென ஏ. சி. பர்னெல் கூறுவார். தமிழ் ஐந்திரத்தைச் சங்கத மொழி யில் மொழிபெயர்த்துக்கொண்டபின், அதன் தமிழ் மூலத்தையே அழித்திருக்க வேண்டும். அடுத்து அந்தச் சங்கத மொழிபெயர்ப்பை யும்கூட அழித்துவிட்டனர் போலும்.


மறைந்த தமிழ் நான்மறையின் திருட்டு வடிவம்தான் சங்கத மொழியிலான இருக்கு முதலான நான்கு வேதங்கள் என்பது என் நிலைப்பாடு. அந்த இருக்குவேதத்தில் இந்திரன் தலைமையில் 33 தேவர்கள் வானில் உறைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்திரன் உள்ளிட்ட 31 தேவர்களின் பெயர்கள் மட்டுமே அதில் காட்டப்படுகின்றது. பாகத மொழியிலோ சங்கத மொழியிலோ குற்றியலிகரமும் குற்றியலுகரமும் இல்லாததால், இருக்குவேதத்தில் வரும் தேவர்களின் எண்ணிக்கை 33 ஆயினும், அதில் 31 தேவர் களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. பன்னிரு உயி ரெழுத்துகளைப் பன்னிரு கதிரவர்(ஆதித்தர்)களெனக் கூறுகின்ற இருக்குவேதம், அதே கதிரவனைக் குறிக்கின்ற மித்திரன், சவித்தா, சூரியன் என்பவற்றையும்கூட முப்பத்தொரு தேவர்களில் அடக்குவது கூறியது கூறல் என்ற பிழையாகும். தமிழிலான முப்பத்து மூன்று எழுத்துகளே முப்பத்து மூன்று தேவர்களாவர் என்கின்ற உண்மையை அறியாமையாலோ அதை வேண்டுமென்றே மறைப்பதற்காகவோ பிராமணர்கள் இக் குழறுபடியைச் செய்து வைத்துள்ளனர்.


சுவடும் தெரியாது போனதேன்?


சமயம் என்னும் கருத்துருவைத் தழுவிய விளக்கங்களும் வழி பாடுகளும் சடங்குகளும் தோன்றுவதற்கு மீமிக முன்னால் குருட்டு நம்பிக்கைகளும் அந் நம்பிக்கைளைச் சார்ந்த சடங்குகளும் வழிபாடுகளுமே தொல்மாந்தரிடம் பரவலாயிருந்தன. இந் நம்பிக்கைகளின் வழிவந்த சமயக் கோட்பாடுகள் மக்களின் அரசியல்-பொருளியல்-குமுகியல் கட்டுமானங்களையும் வாழ்வியல் நெறிகளையும் முற்றாக ஆட்கொண்டு அவற்றை ஆட்டிப்படைக்கவும் செய்துவந்ததே நடப்புண்மை. நம்பிக்கை என்ற உளத்தியல் கூறு, வாழ்வியல் என்ற புறமெய்ம்மையைத் தன் பிடிப்புக்குள் இறுக்கி வைத்துக்கொண்டு அப் புறமெய்ம்மையின் மீதே ஆளுமை செய்கின்ற போங்கை வரலாற்றின் வழிநெடுகிலும் காண்கின்றோம்.

உருத்திரன் வழிபாடு சிவனியச் சமயமாவதற்கும், மாயோன் வழிபாடு மாலியச் சமயமாவதற்கும் மிக முன்னரே தோன்றி மிகப் பரவலாயிருந்த வழிபாடே இந்திரன் வழிபாடு. இந்த இந்திரன் வழிபாடு பன்னூறு ஆண்டுகளாக அரசர்களுக்குரிய அரசு வழிபாடாகவும் இருந்தது. இந்திரனுக்கு ஊர்தோறும் கோயில்கள் இருந்தன. கோயில்கள் இருந்ததால், பூசாரிகளும் இந்திர விழாக்களும் இருந்திருக்கத்தானே வேண்டும்?


இந்திரன் வழிபாட்டிற்கு இணையாகப் பின்னர் வளர்ந்ததே ஐயனார் வழிபாடு. ஆசீவகத்தின் முனைவர்களான மற்கலி, பூரணர், கணி நந்தாசான் ஆகியோரின் உருவகம்தான் ஐயனார் வழிபாடு. கி. பி. 3ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி. பி. 7ஆம் நூற்றாண்டில் முகட்டினைத் தொட்ட சிவனிய, மாலிய இறைப்பற்றி (பத்தி) இயக் கத்தின் எழுச்சியால் ஒருகால் மிகப் பரவலாகவும் அரசர் போற்றிய வழிபாடாகவுமிருந்த இந்திர வழிபாடு, அதன் சுவடுகளும்கூடத் தெரியாவண்ணம் முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்பட்டது. இந்தி ரனுக்கு இணையாக வளர்ந்தோங்கிய ஐயனாரையாவது ஊருக்கு அப்பால் ஏரி குளங்களுக்கு அருகில் ‘புறம்பணையான்’ என்றாவது வைத்தனர். ஆனால், இந்திரனை மட்டும் சுவடு தெரியாது அழித்தொழித்ததோடு நில்லாது, அந்த இந்திரனைப் பழிக்கவும் தூற்றவும் செய்த கதைகளும் தொன்மங்களாகப் புனைந்துரைக்கப்பட்டன.


முளைக்காத வித்து


இந்திரனின்மேல் இவ்வளவு பெரிய கடுப்பு ஏன் வந்ததென் பதைத் தமிழ் அறிவர்கள் கண்டறிய முற்படவேயில்லை. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆய்வுநெறிகளும் விளக்கங்களும் தமிழ்த் தெய்வமான இந்திரனுக்கு ஏன் இந்தக் கதி என்பதைத் தெரிந்து கொள்ள முனையவில்லை. அக்கால் ஆழ வேரோடி யிருந்த ஆரிய-திராவிடக் கருத்தியலே இதற்கான முதற்கரணம். ஆரிய-திராவிடக் கருத்தியல், இந்திரனை ஆரியக் கடவுளாகவே கருதியது. வந்தேறித் திராவிடர்கள் கற்பித்த ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு போட்ட கோட்டைக் கடக்கத் தமிழர்களில் ஆய்வா ளர்கள் எவரும் துணிந்தாரில்லை. இந்திரன் என்ற தமிழ்த் தெய்வத்தை அவர்கள் ஆரியருக்கே நீரட்டித் தந்துவிட்டனர். ஆரியக் கருத்தியலாருடன் சேர்ந்து ‘திராவிடர்’களும் இந்திரனை ஆரியனாகவே பார்ப்பதென்பது அவர்களின் வந்தேறி நலன்களுக்கு ஏற்புடையதாயிருந்தது. இதனால், வடுகம் எடுத்த இருவேறு தோற்றங்(அவதாரங்)களே ஆரியமும் திராவிடமும் என்றாயின.


முந்தைய சென்னை மாகாணத்திலிருந்த பழைய வடுக ஆள வந்தார்க்கு அந்த ஆரிய-திராவிடக் கருத்தியல் ‘திராவிடம்’ என்ற பற்றுக்கோட்டைக் காட்டியது; அவர்கள் அதைக் குரங்குப்பிடி யாய் பற்றிக்கொண்டனர்.


பண்டைய உரோமப் பேரரசை ஓயாமல் அலைக்கழித்துப் பின்பு அந்த உரோமையே கைப்பற்றித் தாங்களே உரோமானியமய மான செருமானிய அநாகரிகரைப்போல், அநாகரிகர்களாயிருந்த வடுகர்களும்கூடப் பண்டைத் தமிழரசுகளை அவ்வாறே அலைக் கழித்துப் பின்னர் அந்தத் தமிழரசுகளையே வீழ்த்தித் தமிழ்மயமாயினர் என்பதும் வரலாறு.


இவ்வாறு தமிழரசுகளை வீழ்த்திய வடுக அநாகரிகர்கள், வானியல் உருவகங்களின் வழிவந்த பண்டைத் தமிழரின் பெருந் தெய்வ வழிபாட்டு வடிவங்களாகிய இந்திரன், மாயோன் (மால்), சேயோன் (கார்த்திகேயன் வடிவில் முருகன்), உருத்திரன் (சிவன்) ஆகிய தெய்வங்களைத் தமதாக்கிக்கொண்டனர். கீழைக்கங்கைக் கரையிலிருந்த நன்னர்(நந்தர்)களின் அரசை வீழ்த்தியதோடு நில் லாத இவ் வடுகர்கள், தென்னிந்தியாவில் முடங்கிய சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளையும் வீழ்த்தி ஆளவந்தார்களாகிக் குந்திக் குதிர்ந்து வந்தேறி ஆட்சியியல் கட்டுமானத்தைக் கண்டபின் - குறிப்பாகப் பல்லவ வடுகரின் காலத்தில்- வடக்கிலிருந்து வந்த அருகத்தையும் புத்தத்தையும் சேர்த்து இந்திரன் வழிபாட்டையும் ஒழிக்கத் துணைபோயினர்.


திருநாவுக்கரசர் “ஆனைஇனத்தின் துகைப்புண்ட அமணரா யிரமும் மாய்த்தற்பின்” - அதாவது, யானையைச் சமயக்குறியீடாகக் கொண்ட ஆயிரம் ஆசிவகரைப் பழையாறையில் கொன்று கொலைவெறியாட்டை நடத்திய பின்னரும் - திருஞானசம்பந்தரின் தூண்டுதலால் பாண்டியநாட்டில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவி லேற்றிய பின்னரும் - அக்கால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மீப்பெரும் சமய வன்முறை வெறியாட்டிலிருந்து தப்பிப் பிழைத்த அருகரின் ஊர்கள் சில தமிழகத்தில் இருக்கத்தான் செய்தன; அருகர் கோயில் களும் எஞ்சிக் கிடக்கத்தான் செய்தன. ஆனால், இந்திரனுக்கான கோயில்கள் எல்லாமே சிவன் கோயில்களாகவும் பெருமாள் கோயில்களாகவும் செய்யப்பட்டன. இந்திரனுகென்று ஒரு கோயிலையும் விட்டுவைத்தாரில்லை. ஆசீவகம் என்னும் அறிவுச் சமயம் இருந்த இடம்கூடத் தெரியாதவாறு முற்றாக அழித்தொழிக்கப்பட்டது.


இவ்வாறு நேர்ந்ததற்கான கரணங்களைத் தேட வேண்டும்.


வடுக வந்தேறியத்தின்கீழ் இந்திரன் வழிபாடு ஒழிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வைக் கோடிட்டுக் காட்டுவதால், அந்த இந்திரன் வழிபாட்டை உயிர்ப்பிக்கவோ புதுப்பிக்கவோ வேண்டுமெனக் கூறுவதாகாது.


தமிழரினத்தின் வீழ்ச்சிக்குக் கரணமாயிருந்த வடுகப் படையெடுப்புகளுக்குப்பின் புதிதாக முளைத்த அல்லது புகுத்தப்பெற்ற சமய நம்பிக்கைகளும்கூடத் தமிழர்களின் வீழ்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் வழிகோலியதை இக்ககாலத்துத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்னும் எண்ணத்தில்தான் இந்திரன் வழிபாட்டைப்பற்றிக் கருத்துரைக்க முனைந்தோம்.


இந்திரனை வரன்முறையற்ற பெண்வெறியனாகவும் காமு கனாகவும் தொன்மங்கள் காட்டுகின்றன. இந்திரன் வழிபாடு அருவருக்கத்தக்க காமக்களியாட்டங்களுடனும் சடங்குகளுடனும் தொடர்புடையதாயிருந்திருக்க வேண்டும் என்பதை அவற்றின் ஊடாக நன்கு குறிப்பறிய முடிகின்றது. இக் காமக்களியாட்டங்கள் வரம்பு மீறிச் சென்றதால், கடுந்துறவுவழி நின்ற ஆசிவகமும் அருகமும் புத்தமும் அந்த இந்திர வழிபாட்டை எதிர்த்துக் களம் கண்டிருக்க வேண்டும். இச் சூழலை வடுகப் பிராமணியம் பயன்படுத்திக் கொண்டது. இது இந்திர வழிபாட்டுக்கு எதிரானதொரு சூழலைத் தோற்றுவித்திருக்கும்.


மேலும், அக்குத்தின்றி நெடுஞ்ஞாண் கிடையாகத் தரையில் வீழ்ந்து இறைவனிடம் அடிபணிகின்ற (சரணாகதி) நெறியான இறைப்பற்றி (பத்தி) நெறி, அடிமைகளாய் வழியறியாது திகைத்து நின்ற தமிழர்களிடம் மீப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியதும்கூட இந்திர வழிபாடு ஒழிக்கப்படுவதற்கான கரணங்களில் ஒன்றாயிருந்திருக்கும்.


4.8.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக