புதன், மார்ச் 21, 2012

கூடங்குளத்தில் அச்சத்தைப் போக்குவோம் என்று சொன்ன அரசு இப்போது அச்சத்தைத் திணிக்கிறது - அரிமாவளவன் கடும் கண்டனம்

புதன்கிழமை, மார்ச் 21, 2012


கூடங்குளம்


கூடங்குளத்தில் அச்சத்தைப் போக்குவோம் என்று சொன்ன அரசு இப்போது அச்சத்தைத் திணிக்கிறது என்று தமிழர் களம் தலைவர் அரிமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தமிழர் களம் தலைவர் அரிமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

மத்திய அரசு விரித்த மாய வலையில் தமிழக அரசு இப்போது சிக்கிக் கொண்டது. கூடங்குளத்தில் 15 நாட்களில் மின் உற்பத்தியைத் தொடங்குவோம் என்று சொன்ன மத்திய அரசு இப்போது ஆகஸ்டு மாதம் என்று இழுக்கத் தொடங்கிவிட்டது.


ஏதோ கூடங்குளம் அணுமின்நிலையம் திறந்துவிட்டால் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையே முடிவுக்கு வந்துவிடும் என்று பொய்களைக் கட்டவிழ்த்துவிட்ட மத்திய அரசும் சில ஊடகங்களும் போராடும் மக்களின் ஞாயமான கோரிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலுள்ள மக்களைத் திசைதிருப்பிவிட்டனர்.


இப்போது மாநில அரசும் அந்த மாய வலையில் சிக்கியது மட்டுமல்லாமல் வரலாறு காணாத அளவில் மத்திய மாநில அரசுகளின் படைகளை அப்பாவி கிராம மக்களுக்கு எதிராகத் திருப்பி வைத்துள்ளது. ஏதோ ஒரு எதிரி நாட்டைக் கைப்பற்றப் போகும் படைகள் போல கிராமத்து மக்களுக்குச் செல்லும் குடிநீரையும், மின்சாரத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. குழந்தைகளுக்குத் தேவையான பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் உள்ளே கொண்டு செல்லதைத் தடுத்து வருகிறது. சிங்களப் படைகள் தமிழீழ மக்களுக்குச் செய்த அதே கொடுமைகளே இப்போது மனதில் வந்து நிழலாடுகிறது.


எட்டு மாதங்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க அகிம்சை வழியில் நடக்கின்ற ஒரு போராட்டம். ஆனால் ஏதோ ஒரு பெரிய தீவிரவாதக் கும்பலைக் பிடிப்பது போன்ற நாடகத்தை அரசு திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது.


சுங்கரன் கோயில் இடைத் தேர்தல்வரை காந்திருந்து மறுநாளே தலைகீழ் மாற்றத்திற்குப் போயிருக்கும் தமிழக அரசு நடத்துவது நாடகமன்றி வேறேது?
எட்டு மாதங்களாக போராட்டக்குழுவின் பல்வேறு போராட்டங்களுக்கு நேரிடையான மற்றும் மறைமுக ஆதரவு கொடுத்து வந்த மாநில அரசு திடீரென குட்டிக் கர்ணம் போட என்ன கட்டாயம் வந்தது என்பது யாருக்கும் தெரியாது. போராட்டக்குழு பேச்சுவார்த்தைக்குச் சென்றபோது மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் அதில் உறுப்பினர்களாகப் பங்கேற்றது முதல் பல்வேறு போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததும் இந்த மாநில அரசுதான்.


ஆனால், தாங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு தங்களின் அச்சத்தைப் போக்கும், வாழ்வாதாரத்தை காக்கும், அணுஉலையை இழுத்து மூடும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்த மக்களின் எதிர்பார்ப்பில் மண்ணையள்ளிப் போட்டது மட்டுமல்லாமல் அப்பகுதியிலுள்ள மக்களுக்குப் பேரச்சத்தை உருவாக்கும் விதமாக அரச படைகளை அங்கே அமர்த்தியிருப்பது ஒரு சனநாயக நாட்டில் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு செயலேயன்றி வேறெதுவும் இல்லை. இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறு கூறினார்.


கூடங்குளம், பொது மக்கள், போராட்டம், அச்சம், மத்திய அரசு, தமிழர் களம், அரிமாவளவன் , கண்டனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக