சனி, மார்ச் 31, 2012

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கனடாவில் எதிர்ப்பு

[ புதன்கிழமை, 28 மார்ச் 2012, 01:39.22 PM GMT +05:30 ]
கனடாவாழ் தமிழ் மக்கள் சார்பில், 'கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு' போராட்டக்குழுவினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் கனடாவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்பு அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வினைக் கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒழுங்கமைத்திருந்தனர்.
மோசமான காலநிலையையும், உறைபனிக் குளிரையும், 'ஓ' வென்று அடித்த குளிர் காற்றையும் மக்கள் எதிர்கொண்டாலும் கூடங்குளத்தில் பெருத்த அடக்குமுறைக்கு மத்தியிலும் இந்திய அரச இயந்திரத்தை எதிர்த்துப் போராடும் நம் தமிழ் உறவுகளுக்கு எமது ஆதரவைத் தெரிவித்தே ஆகவேண்டும் என்ற உறுதியோடு கனடியத் தமிழ் உறவுகள் இவ் அடையாள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது பெருமளவு வேற்றின மக்கள் நிகழ்விடத்துக்கு ஆர்வமாய் வந்து கூடங்குளம் அணு உலை குறித்தும், அதன் பாதிப்புக் குறித்தும் போராட்டக் குழுவினரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.
நிகழ்விடத்தின் இருமருங்கிலும் உள்ள தெருவில் இறங்கி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, இடிந்தகரை மக்கள் போராட்டம் தொடர்பான செய்திகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை தமிழ் உறவுகள் வேற்றின மக்களுக்குக் கையளித்தனர்.
ஆர்ப்பாட்ட ஒருங்கினைப்பாளர்களில் ஒருவரான அருண்மொழி வர்மன் தெரிவிக்கையில், இயற்கை வளங்களைக் கொண்டே போதுமான மின்சாரம் பெறக்கூடிய வாய்ப்பு இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது. அப்படி இருந்தும் பேரழிவு தரக்கூடிய அணு உலையில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று தெரிவித்தார்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தை சேர்ந்த திரு. தங்கவேலு (நக்கீரன்) அவர்கள் கூறுகையில், 'ஜப்பான் போன்ற நாடுகளே புக்கிஷிமா அணுக் கசிவு போன்ற அபாயகரமான சூழலை எதிர்கொள்ளமுடியாமல் அணு உலைகள் அனைத்தையும் மூடியுள்ள நிலையில் இந்திய அரசு தமிழ் மண்ணில் இது போன்ற அணு உலையைத் திறக்க எத்தனிப்பது விவாதத்துக்குரியது. புக்கிஷிமா மக்களின் அச்சம் நியாயமானது. இவ்வுலகம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.
தமிழறிஞர் திரு. சிவம் பரமநாதன் அவர்கள் தெரிவிக்கையில், 'நாங்களும், அவர்களும் ரத்த உறவு கொண்ட மக்கள். அவர்களால் தமது துன்பத்தை உலகுக்கு எடுத்துரைக்கமுடியாத வகையில் இந்திய இறையாண்மை ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது.
அவர்கள் துன்பத்தை உலகுக்கு எடுத்துரைப்பது எம் வரலாற்றுக் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றவே நான் இங்கு வந்துள்ளேன்' என்றார்.
அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களின் அறப்போராட்டத்தினைக் காவல்துறையின் வன்முறைகொண்டு அடக்கமுயலும் இந்திய நடுவண் அரசு மற்றும் தமிழக அரசுகளின் அராஜகத்தைப்போக்கைக் கண்டித்தும், பேரவலத்தை ஏற்படுத்தவல்ல அணு உலை எமது தமிழ் மண்ணுக்கு வேண்டாம் என்று குரல்கொடுத்துக் கடந்த 23 ஆண்டுகளாகப் போராடிவரும் இடிந்தகரை கிராம மக்களுக்கும் அணு உலை எதிர்ப்புப் போராளிகளுக்கும் எமது தார்மீக ஆதரவைத் தெரிவித்தும், இடிந்தகரை மக்களின் போராட்டத்தை முற்றிலுமாக இருட்டட்டிப்புச் செய்யும் இந்திய ஊடகங்களை கண்டித்தும் இந்நிகழ்வில் குரல் எழுப்பப் பட்டது.
இந்நிகழ்வில் 'அணு உலை வேண்டாம்' 'எங்கள் குழந்தைகளே எதிர்காலம், அவர்களுக்கு இயற்கையைப் பரிசளிப்போம்', 'உயிரைக் கொல்லும் அணு உலை வேண்டாம்' 'இந்திய அரச படையே.. கூடங்குளத்தை விட்டு வெளியேறு' 'இனியொரு புக்கிஷிமா, செர்நோபில் வேண்டாம்', 'எங்கள் குழந்தைகளை வாழவிடுங்கள்' 'அணு உலை: தவறான முடிவு' போன்ற பல பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தன.
புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இடிந்தகரை மக்களின் போராட்டத்தை உலக அரங்குக்கு வெளிக்கொணர்ந்து அம்மக்களின் குரலாய்ச் செயல்படுவோம் என ஆர்ப்பாட்டத்தில் உறுதி எடுக்கப்பட்டது.
இதற்கு முன்பு, இந்நிகழ்வுக்கு 'க்ரீன்பீஸ் கனடா' என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போராட்டக் குழுவினருக்குத் தமது தார்மீக ஆதரவைத் தெரிவித்த 'கிரீன்பீஸ் அமைப்பினர், கூடங்குளம் அணு உலைக்கு எதிராகக் கனடா முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அமைப்புகளைத் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கடந்த 1979 ஆம் ஆண்டு முதல்கொண்டே சுற்றுச் சூழல் குறித்த அக்கறையோடு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, உலக அளவில் 40 நாடுகளில் செயல்படுகிறது என்பதும், 2.9 மில்லியன் தொண்டர்களைக் கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக