வெள்ளி, அக்டோபர் 11, 2013

மணல் நிறுவன முதலாளிகளைக் கைது செய்- அரிமாவளவன் கோரிக்கை!!!

மணல் நிறுவன முதலாளிகளைக் கைது செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழர்களம் அரிமாவளவன் கோரிக்கை!
“தென் கடலோர மீனவ மக்களோடு இணைந்து தமிழக அரசிடம் தமிழர்களம் வைத்த மூன்று கோரிக்கைகளுள் ஒன்றான மணல் அள்ளுவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதும் மணல் ஆலைகள் மீது விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதையும் தமிழர்களம் நெஞ்சாரப் பாராட்டி வரவேற்கிறது.
நடந்திருப்பது பகல் கொள்ளை!  வரலாறு காணாத கொள்ளை!  பல அரசியல் கட்சிகளையும் தனி நபர்களையும் வளைத்துப் போட்டு செய்த அதி நுட்ப ஊழல்தான் மணல் கொள்ளை!  இதில் பலியாகியிருப்பது கடல் வளங்களும் சுற்றுச் சூழலும்தான்.  அப்பாவிக் கடலோர மக்கள் மணல் அள்ளியதன் விளைவாக ஏற்பட்ட கதிரியக்கத்தினால் பல்வேறு கொடிய நோய்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.  இத்தகைய சமூக் குற்றங்களின் கடுமைத் தன்மையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, மணல் கொள்ளையில் ஈடுபட்ட முதலாளிகளையும் அவர்களது கைக்கூலிகளையும் உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.  கடற்கரைகளையும் ஆற்றோரங்களையும் கபளீகரம் செய்து ஈட்டிய சொத்துகளைப் பறிமுதல் செய்து முடக்க வேண்டும்” என்று தமிழர்களம் தமிழக அரசை மிகுந்த பற்றுதியோடு கேட்டுக் கொள்கிறது.  இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக