புதன், அக்டோபர் 09, 2013

தமிழர்களம் திரு. அரிமாவளவன் கடும் கண்டனம்.


தமிழரைக் கொன்று குவித்த நாட்டில் காமன்வெல்த் மாநாடா?
தமிழர்களம் கடும் கண்டனம்.
வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் களம் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.  மாநிலச் செயலாளர் திரு. அழகர் தலைமையில் நடைபெற்ற அந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.  அதில் கண்டன உரை ஆற்றிய திரு. அரிமாவளவன் அவர்கள், “எங்கோ இருக்கிற கனடாவும் ஆஸ்த்திரேலியாவும் இலங்கையில் ஈவு இரக்கமில்லாத மனிதப் படுகொலைகள் நடந்திருக்கின்றன, இனப்படுகொலை நடந்திருக்கிறது என்று வெளிப்படையாக அறிவித்து நாங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.  ஆனால், முதல் ஆளாக துடித்துக் கிளம்பி இலங்கையில் நடபெறப்போகும் இந்த மாநாட்டைத் தடுத்திருக்க வேண்டிய இந்தியா இன்றுவரை கள்ள மவுனம் சாதித்து வருகிறது.  பச்சிளம் குழந்தைகள் பிணக்குவியல்களாகக் கிடந்ததை இந்தியா காணவில்லையா?  எம் குலப் பெண்கள் சீரழிக்கப்பட்டு சின்னாபின்னமாய்க் கிடந்ததை இந்தியா காணவில்லையா?  அனைத்துலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ரசாயண ஆயுதங்களையும், கொத்துக்குண்டுகளையும் இலங்கை அரசு அப்பாவி மக்கள் மீது பயன் படுத்திக் கொன்றதை இந்தியா காணவில்லையா?  இப்படி ஒன்றரை லட்சம் மக்களைக் கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட ராசபக்சே அரசு எஞ்சியிருந்த தமிழர்களையும் சும்மா விட்டார்களா?  அவர்களது நிலங்களையும் வீடுகளையும் பறிந்து நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். எஞ்சியிருந்த இளைஞர்களைக் கொன்றார்கள், இளம்பெண்களை கற்பழித்துக் கொன்றார்கள்.  இந்த ஒரு நாட்டில்தான் மாந்த உரிமைகளை மையப்படுத்தி இயங்கும் காமன் வெல்த்


நாடுகளின் மாநாடு நடக்கவிருக்கிறது.  காந்தி தேசம் என்று தன்னை மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவும் அதில் கலந்து கொள்ளப் போகிறது.  அந்த மாநாட்டிற்கு ராசபக்சே தலைமை வகிக்கப் போகிறார்.  இனிவரும் இரு ஆண்டுகளுக்கு அவரே அக்கூட்டமைப்பின் தலைவராகவும் இருப்பார்.  என்னே கொடுமை இது!  மனித உயிர்கள் மலிவாகக் கொல்லப்படுவதை நாம் ஆதரிக்கிறோமா?  தமிழர்கள் நாம் அப்படிக் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டதை இந்தியா வரவேற்று வாழ்த்துக்கிறதா?
இந்தியா யார் பக்கம் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது!  குருதிச் சேறு படிந்த கைகளோடும் கொலை வெறிக் கண்களோடும் நிற்கிற ராசபக்சேவுடன் இதுநாள் வரை மறைமுக உறவாடிவந்த இந்தியா இப்போது வெளிப்படையாக கைகுலுக்கப் போகிறது!  தமிழர்களாகிய நாம்தான் “இந்தியா எங்கள் தாய் நாடு, தாய்நாடு” என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறோம்.  ஆனால் தில்லி ஆட்சியாளர்களோ “நீங்கள் அயல்நாடு, அயல்நாடு” என்று வெறுத்துத் தள்ளுகிறார்கள்.  “இந்தியர் எங்கள் உடன்பிறப்பு” என்று தமிழர் நாம் சொல்லி வருகிறோம்.  ஆனால் நம் உடன்பிறப்புகளைக் கொன்று வெறியாட்டம் போட்டவனுடைய வீட்டில் தடபுடலான விருந்துக்கு இந்தியா தயாராகி வருகிறது.  “நீங்கள் இந்தியர்கள் இல்லை!  நீங்கள் தமிழர்கள்!” என்று வெறுப்போடும் உறுதியோடும் இந்தியா சொல்லி வருகிறது.
தொடர்ந்து சொந்த பந்தங்களை இழந்து வருகிற நாம் அதைத் தடுத்தாள வேண்டிய நிலையில் இருக்கிற இந்தியாவை நம்பி நம்பி இன்னும் கெட்டழிய வேண்டுமா? இல்லை தன்மானத்தோடு தனிஉரிமை வேண்டி, இந்திய வரைபடத்தை மாற்றியமைக்க வேண்டுமா? என்று கேட்டாக வேண்டும்!  இந்தியாவை நம்பி நம்பி நம் இனத்தை முற்றாக அழியக் கொடுக்க வேண்டுமா?  இல்லை இப்போதாவது விழித்தெழுந்து எஞ்சியிருக்கிற நம் மக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றுவோமா?  நமது எச்சரிக்கைகளையும் மீறி இந்தியா இலங்கையில் நடைபெறப் போகும் காமன் வெல்த் மாநாட்டிலிருந்து விலகாவிட்டால் நாமும் இறுதி முடிவு எடுப்போம்!” என்று தனது கன்டன உரையில் திரு.  அரிமாவளவன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக