வியாழன், அக்டோபர் 24, 2013

தமிழ் இனிக்கும்! அத் தமிழே இனி எரிக்கும்!!

          "வேணும்னா பாருங்களேன்.....
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் நேற்று இடிந்தகரையில் இருந்தேன்!
        
        பல விவாதங்களுள் “தேர்தல் காலம்” என்பது குறித்தும் ஒரு விவாதம் எங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது...
“தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள், தேர்தலில் பங்கேற்காத இயக்கங்கள்” என்று இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் குழுவினர் இரு வகைப்படுவர்.
      
ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, த.மு.மு.க. போன்றன தேர்தலில் பங்கேற்கும் ஆனால் அணுஉலை எதிர்ப்பில் தீவிரம் காட்டும் கட்சிகள்.
தேர்தல் வந்ததும் அற்றகுளத்து அறுநீர் பறவைபோல ஓடிவிடுவார்களா அல்லது தொடர்ந்து களம் காண்பார்களா என்பது போகப் போகத் தெரியும். வரப்போவது, நாடாளுமன்றத் தேர்தல்! காங்கிரசு, பாரதீய சனதா என்ற இரு அணிகளில் கட்சிகள் நிற்கும். பா.ம.க. போன்றன தனி அணி காணும்.


       தமிழர்களின் வாழ்வையும் மானத்தையும் வளங்களையும் பாதிக்கிற பல்வேறு பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைக்கின்ற நேரம் இது. கூடங்குளம் அணுஉலையும் அவற்றில் ஒன்று! ம.தி.மு.க ஒருவேளை பா.ச.க. அணியில் சேர்ந்தது என்று வைத்துக் கொள்வோம்! (ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்! ஏன்யா கோவப்பட்ற..) “கூடங்குளம் அணுஉலை கூடவே கூடாது!” என்று அதன் அறிக்கையில் இருக்குமா? இருக்காதா? “ஈழம் அமைய உதவிடுவோம்” என்று இருக்குமா? இருக்காதா? “மணல் கொள்ளையர்களை பிடித்து உள்ளே போடுவோம்” போன்ற மக்களின் உள்ளக்கிடக்கைகளை எதிரொளிப்பதாக அந்த அறிக்கை இருக்குமா? இல்லை வழக்கம்போல, “மண்ணாங்கட்டி! ஸ்டெர்லைட்டும் இருக்கிறது நமது போராட்டமும் இருக்கிறது! ஸ்டெர்லைட் இருக்கும்போதே நாங்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தோம். இல்லாதபோது தெருவில் இறங்கி போராடினோம். அந்த இழவு போல இந்தக் கூடங்குளம் அணுஉலையும் இருக்கும். வசதிப்படும்போது கூக்குரலிட்டு, லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்” என்று வாய் பிழிற உரையாற்றுவோமா! எனக்குத் தெரியாது. இடிந்தகரை ஊருக்கு வெளியே ஒரு பதாகை இருக்கிறது, “அணுஉலையை எதிர்க்காத கட்சி ஓட்டு கேட்டு நுழையக்கூடாது” என்று. மைக் டெஸ்டிங்.... ஒன்று.... இரண்டு... மூன்று...”
       
அதே மாதிரி நம்ம விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க. கூட்டணி அதன் வாயிலாக (எவண்டா அது...? “எந்த வாய்?” என்று சும்மா சும்மா கிளறுறது) காங்கிரஸ் கூட்டணி என்று தூள் கிளப்பும் போலத் தெரிகிறது. “மதவாதக் கட்சிகளோடு கூட்டணி இல்லை” என்று அண்ணன் அடித்துச் சொல்லிவிட்டார். அப்புறம் என்ன? “சோனியாவே வருக. சுகமான ஆட்சி தருக” என்று பதாகை வைத்துவிடுவோம். இராமநாதபுரம் தொகுதியில் பசில் ராசபக்சே நின்னாலும் நிப்பான். “அண்ணே, இசைப்பிரியா, பாலச்சந்திரன், ஒன்றரை லட்சம் மக்கள், காங்கிரஸ் கொடுத்த ஆயுதம், ஆதரவு.... ராசபக்சே...”மண்ணாங்கட்டி! கண்ட நேரத்திலயும் கண்டதையும் பத்திப் பேசிக்கிட்டு.... கசவாளிப் பயல்க... ஒரு மேனர்ஸ் கிடையாது. போர்னா.... பூவானம், தூவானம், அடிவானம், மப்புவானம், மந்தார வானம் எல்லாம் இருக்கும்!

       “அண்ணே... இடிந்தகரையில பதாகை வச்சிருக்கானுங்க அண்ணே...”
மட ராஸ்கல், எந்த நேரத்தில என்னத்தப் பேசுறதுனே ஒரு விவஸ்தை கிடையாதா? தேர்தல் கூட்டணி என்பதற்கு ஒரு தனி வரலாறும், தர்மமும், தத்துவமும், சித்தாந்தமும், சீரிய சிந்தனையும், பொறுக்கித்தனமும், போக்கிரித்தனமும், விளங்காத்தனமும், விவஸ்தை கெட்ட தனமும்.... (ஐயோ.... எப்படி இருந்த என்னை? இப்படி ஆக்குறான்களே!)
"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக