வெள்ளி, அக்டோபர் 15, 2010

நாங்கள் தமிழர்கள்! - கருவைமுருகு

கவிதை:

நாங்கள் தமிழர்கள்
வாழ்வின்
வரலாறரியாதவர்கள்,
அதனாலோ என்னோவோ
கரீபியன் தீவு வரை
கடத்தப்பட்டு
தொலைந்துபோனோம்!
இன்றும்கூட
ஏமாளிகள்தான்
நாகரிக
கோமாளிகளால்
நையாண்டி செய்யப்பட்டு
வேதனையை மட்டுமே
விலையாகப் பெறுகிறோம் !
என்றுமே
எங்களுக்கு
ஏற்றதாக
இருந்ததில்லை
தலைமை!
வந்தேறிகளால்
வாழ்விழந்தோம்
சொந்த பூமியில்
தொலைந்து போகிறோம்!
ஆனாலும் நாங்கள்
தமிழர்கள்தான்!
இலவசம்
எதற்கென்றாலும்
எப்படியேனும்
பெறதுடிப்போம்!
எங்களை நாங்கள்
நம்ப தயாரில்லை
அதனாலே
நாட்டாமை தேடி
அலைகின்றோம்!
கண்ணகி வாழ்ந்தபூமி
கலைகள் செழித்த பூமி
நெற்களஞ்சியம் பெற்றபூமி;
கண்ணகியை வழிபடவே
விழி பிதுங்குகிறோம்!
நெற்களஞ்சியம்
சொற்களில்மட்டும்தான்!!
கலைகள் காம களியட்டமாகிவிட்டன
காவிரியை பற்றி கவலையில்லை
முல்லை பெரியாற்றையும்
பவானியையும்
இன்ன பிற
நீராதாரங்களையும்
வேனிற் காலத்தில் மட்டுமே
பேசிகொன்டிருப்போம்!
எதை பற்றியும்
எங்களுக்கு
கவலையில்லை
விவசாயம்
நெசவு ரெண்டும் கெட்டால்
இருக்கவே இருக்கு
தொழிற்பூங்கா
ரிலையன்சும் வால்மார்ட்டும்
வந்தாலென்ன போனாலென்ன
குடிப்பது கூல்தான் என்றாலும்
நாங்கள்
பல் இளிப்பது
பெப்சிக்காகவும்
கோலாவிற்காகவும்தான்
கூத்தாடி பூமி இது
எப்படியேனும்
நசுக்கபட்டாலும்
ரசிகர்மன்ற கொடிபிடிப்போம்
நாய்களாய்
அலைவோம் திரிவோம்
நங்கள் தமிழர்கள்!!!


-- கருவை முருகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக