ஞாயிறு, ஜனவரி 15, 2012

சூரியசக்தி மின்சாரமே மாற்று தீர்வு: நார்வே விஞ்ஞானிகள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை மற்றும் நார்வே ஓஸ்லோ பல்கலைக்கழகம் இணைந்து சூரியசக்தி மின்சாரம் குறித்த கருத்தரங்கத்தை நடத்தியது. இதில் பல்கலைக்கழகத்தின் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் துறை தலைவர் ஆர்.சரஸ்வதி வரவேற்றார்.

வேதியியல் துறை தலைவர் ராமு தலைமை தாங்கினார். முன்னாள் பேராசிரியர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். நார்வேயில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் எனர்ஜி டெக்னாலஜி மூத்த விஞ்ஞானி கராஜானவ், இத்தாலி பேராசிரியர் செர்ஜியோ பிஜ்ஜினி, லண்டன் பாத் பல்கலைக்கழக பேராசிரியர் பஞ்சமாதியா, நார்வே ஓஸ்லோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் பொன்னையா ரவீந்திரன், நவீன்கவுத் ஞானகோனா, லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய ஆய்வகத்தின் ஆன்ட்ரூஸ் நிக்கோல்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

"நாடு முழுவதும் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை தேசிய எரிசக்தி சேமிப்பு வாரவிழா கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்சக்தியும் தேவைப்படுகிறது.

இதற்கிடையே ஜப்பானில் சுனாமி தாக்குதல், அணு உலைகளின் பாதிப்பு ஆகியவற்றால் மாற்று மின்சாரத்தை மக்கள் நாடுகின்றனர். ஆனால் அந்த மின்சக்தியானது பாதிப்பு இல்லாததாகவும், இயற்கையைச் சீரழிக்காமலும், செலவு குறைவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

சூரியசக்தி மின்சார கருத்தரங்கில் கலந்து கொண்டோர்

சூரியசக்தி மின்சார கருத்தரங்கில் கலந்து கொண்டோர்
இந்த நிலையில், சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் வளர ஆரம்பித்துள்ளது. இதில் முதல் தலைமுறையில் ஒருமுனை படிவ சிலிகான் சூரிய செல்கள் மூலம் 10 சதவீதம் வரை மின்சாரம் தயாரிக்கப்பட்டது. 2 ஆம் தலைமுறையில் பலமுனை படிவ சிலிகான் மற்றும் பகுதி கடத்தி மூலம் மின்சக்தி தயாரிக்கப்பட்டது.

தற்போது 3 ஆம் தலைமுறையில் ஒளி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய மின்சார தேவைக்குச் சூரியஒளியின் பங்கு முக்கியமானது. அதனைப் பயன்படுத்தி வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் தேவையைக் குறைந்த செலவில் நிறைவு செய்ய முடியும். அதற்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தொடங்கியுள்ளன."

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கருத்தரங்கில், உயர்ந்த செல்திறன் கொண்ட கலப்பின சூரிய மின்கலம், ஒளி பண்புகளில் ஹைட்ரஜனின் செல் விளைவுகள், சூரியஒளியில் மின் வேதியியல் ஆற்றல் சேமிப்பு, குறைந்த விலை சூரிய மின்கலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.

சூரிய ஒளியில் இயங்கும் பொருள்கள் குறித்த செயல்முறை கண்காட்சியும் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளைத் தொழில்நுட்ப அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி பேராசிரியர் ஜெயந்திநாத் ஆகியோர் செய்து இருந்தனர்.



Thanks; www.inneram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக