வெள்ளி, நவம்பர் 26, 2010

மாவீரர் நாள் - 2010


மாவீரர் தின உறுதிமொழி !
மாண்ட வீரர்களின் கனவு பலிக்கும் , நாளை நமது ஈழம் பிறக்கும் ! நம்பிக்கை மிகுந்த இந்த வரிகள் நமக்கு உணர்த்துவதென்ன?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாக்கப்பட்ட தமிழினம் இன்று வரை அடிமையாக வாழ்ந்து வருகின்றது , தனக்கேற்பட்ட இன்னல்களுக்கு காரணம் தேடி அலைகிறார்கள் நம்மில் பலர் . ஏதேதோ பிதற்றல்களை காரணமாக காட்டி நமக்கு ஆறுதல் தருவதுபோல் நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகிறார்கள் சிலர் . பொதுஉடமைத் தத்துவம் கூட நமக்கு விடியலைக் தரவில்லை .

தமிழ்நாட்டில் தமிழனைத் தவிர அனைவரும் தமிழினத் தலைவர்கள்தாம் , அந்தத் தலைவர்களால் நமக்கான உரிமைகளை பெற்றுத்தரமுடியாது. ஏனனில் அவர்கள் தமிழரல்லர் ! நண்பன் யார் ? எதிரி யார் ? என அடையாளம் காணமுடியாதபடி தமிழினம் மாயைகளில் மயக்குண்டு கிடக்கின்றது.

ஈழம் வீரம் நிறைந்த மண்தான் . அந்த மண்ணின் மாவீரர்களுக்கு நம்மால் மௌன அஞ்சலி மட்டுமே செலுத்த முடியும் , அதுவும் அரசின் அனுமதி பெற்றபிறகுதான் ! ஏனனில் இது தமிழ்நாடுதான் ஆனால் தமிழர்களுக்கான நாடல்ல . இது எதைக் காட்டுகிறது. தமிழன் தன்னை ஆளவில்லை , வந்தாரைஎல்லாம் வாழவிட்டு ஆளவிட்டு அழகு பார்க்கிறது தமிழினம் . முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பின்பும் அவர்களைத்தான் நம்புகிறது தமிழினம் . தன்னால் எதாவது செய்ய முடியுமா என ஏங்கும் ஒரு சில தமிழர்களும் இந்தி வல்லாண்மை கூட்டாச்சி அரசால் தளைப் படுத்தப்படுகின்றனர் . எழுத்துரிமை பேச்சுரிமை மறுக்கப் படுகிறது. இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை கொள்வதால் தமிழர்களின் பொதுவான சிக்கல்களைத் தீர்க்க தோள்கொடுக்க தயங்குகின்றனர் . காரணம் ஆயிரக்கணக்காக சொல்லலாம் . தமிழக அரசின் அச்சுறுத்தல்கள் நேரிடையாகவும் , மறைமுகமாகவும் தோற்றுவிக்கப் படுகின்றன . தமிழர் அல்லாதோரை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டுள்ளான் .

உண்மைகளை உரக்கச் சொல்லும் பாவலர் காசியானந்தனின் பாடல் வரிகளும், தமிழரை எழுச்சிகொள்ளச் செய்யும் புலவர் செம்பியனின் கவிதை வரிகளும் , அறிஞர் குணா , போன்றோரின் எழுத்துகளும் தமிழினத்தை தலை நிமிரச் செய்யவல்லன . ஆயினும் ஊடகங்களின் கயமைத் தனத்தால் உண்மைகளை தமிழர்கள் அறிய முடியா வண்ணம் சிந்தனை மழுங்கி வாழ்கின்றனர் .

காலம் மாறும் , காட்சிகளும் மாறும் இது இயங்கியல் விதி . வரலாற்றை ஒன்றின் ஊடாக ஒன்றை மீளாய்வு செய்ய வேண்டும் . அவற்றின் ஊடாக நாம் நம்மை அடையாளப்படுத்தி நமக்கான உரிமைகளை பெறுவோம், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவோம் ! தமிழகத்தின் அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காண தமிழர்கள் ஓரணியில் திரள்வோம் . தமிழர் நாட்டை தமிழர்தானே ஆளவேண்டும் . இந்த நன்னாளில் அதற்கான உறுதிமொழியை ஒவ்வொரு தமிழரும் ஏற்போம் . தமிழ்நாடு தமிழர்கே ! இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !!

- மா.முருகானந்தம் ,
ஓவியன் . கரூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக