திங்கள், நவம்பர் 04, 2013

தரகு வேலைக்குத்தான் முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்வு பயன்படப்போகிறது !!


                     "நேற்றைக்கு முந்தைய நாள் மலேசியாவில் வாழும் ஈழத் தமிழர் ஒருவர் அதாவது எனது மதிப்பிற்குரிய பெரியவரும் தமிழ்த் தேசிய அரசியலின் அறிவுத் தளத்தில் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவருமான நண்பர் ஒருவர் இணையவழி இணைப்பில் வந்தார். “தேர்தலில் செயலலிதாவை ஆதரிக்க வேண்டும்” என்று அறிவுருத்திய அவர், அதுவே சிறந்த கள உத்தி என்ற நோக்கில் பேசினார். அதன் பின்னர் நடந்த வாக்குவாதத்தில் நான் கடுஞ்சினத்தோடு பேசத் தொடங்கி, “அப்படியானால் தமிழ்நாட்டு அரசியலில் இனி நம்பிக்கை இல்லை” என்று அவர் இறுதியாக முடித்துக் கொண்டார்.
                   தலைவர் பிரபாகரன் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் எனக்கு அளவுகடந்த பற்றும் மரியாதையும் உண்டு. ஆனால், அண்மைக் காலங்களில் நான் சந்திக்கிற சில ஈழத் தமிழர்கள், “தமிழ்நாட்டு அரசியலையும் உலகத் தமிழர் அரசியலையும் தாங்களே நிர்ணயிக்க வேண்டும்” என்ற நோக்கில் கட்டளையிடுவதும் பரிந்துரைப்பதுமாக இருக்கிறார்கள். அண்மையில் தமிழகத்திற்கு வந்துபோன மற்றொரு ஈழத் தமிழரும், தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சொல்லி, எல்லாரும் அவர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தொனியில் பேசினார். எனக்கு ஐயம் வலுத்து கடைசியில், “ஆமாம் நாங்கள் நெடியவன் தலைமையில் செயல்படுகிறோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.
இவர்களுக்கெல்லாம் நாங்கள் பணிவோடும் அன்போடும் அழுத்தமாகச் சொல்லிக் கொள்வது என்னவென்றால், “தமிழ்நாட்டு அரசியலை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.”

             “உடனடியாக தமிழ்நாட்டு அமைப்பினர் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்” என்பது இவர்களது அழுத்தமான அழைப்பு. இதில் கருத்தளவில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஓர் இயங்கியலை இவர்கள் புரிய வேண்டும். கருத்துகள் மாறுபடுவதாலும் முரண்படுவதாலும்தான் இவ்வுலகில் கட்சிகள், மதங்கள், கருத்துருக்கள் இருக்கின்றன.
                ஒற்றுமை பற்றி பேசுகின்ற இவர்கள் என்றைக்காவது ஒற்றுமையாக இருந்திருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்தாலேயே இந்த எதார்த்தம் அவர்களுக்குப் புலப்பட்டுவிடும்.
கருணாவுக்கு இணையான இரண்டகர்கள் இங்கே உண்டு. டக்ளசுக்கு இணையான இன எதிரிகள் இங்கே உண்டு. இவர்களோடு கை கோர்க்கச் சொல்கிறார்களா?
 

              முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கிறார்கள். “பீர் காசில் போர் முற்றம்?” என்று தமிழ்நாட்டு இளைஞர் ஒருவர் சீறுகிறார். அதாவது சாராய வியாபாரி நடராசனின் காசில் ஈழப் போர் முற்றம் கட்டலாமா என்பது அவரது வினா! தமிழ்நாட்டு இளைஞர்கள் குருதியும் வேர்வையும் சிந்திக் கட்ட வேண்டிய நினைவிடத்தை சாராயக் காசில் கட்டி முடித்துவிட்டார்களே என்பது பலரது வேதனை. அதையும் கடந்து அந்த முற்ற விழாவில் நடக்கும் அரசியல் தரகு வியாபாரம், அசர வைக்கிறது. குசராத்தின் நர வேட்டை நாயகன், குசராத்தின் ராசபக்சே, அப்பாவி இசுலாமியர்களைக் கரிக்கட்டையாக்கிய நரேந்திர மோடியின் தமிழ்நாட்டுத் தரகர்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழின உரிமைக்காகப் போராடும் பல தமிழர் அமைப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. திராவிடத் தரகர்கள் இந்த விழாவிற்கு வருகிறார்கள். ஆனால், திராவிட அரசியலைத் தோலுரிக்கும் பலர் விடுபட்டிருக்கிறார்கள். அப்படியானால் என்ன நடக்கிறது?
ஈழத்தில் சிந்திய ரத்தம் விலை பேசப்பட்டுவிட்டது! அப்படித்தானே! இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முற்றத்தில் ஈழத்து முள்ளிவாய்க்கால் ரத்தம் கூறுபோட்டு கூவி விற்கப்படுகிறது. கேட்டால், அரசியல் கள உத்தி என்று பேசுவார்கள்.

                சட்ட மன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. இரண்டு தொகுதி பிச்சை போட்டால் அதை வாங்கி நக்கிப் பிழைப்பது கள உத்தியா? அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் நுனி நாக்கில் மட்டும் ஈழம் பேசும் தெலுங்கு வந்தேறிகளுக்கு வாய்ப்பளித்தால் அது மாபெரும் வெற்றியா? தெலுங்கருவி மணியனின் இயக்கத்தில் நடராசனின் முதலீட்டில் “சில நாடக நடிகர்கள்” இப்போது நடிக்கிறார்கள்.
              பாரதீய சனதாக் கட்சியின் ஈழ நிலைப்பாடு என்ன? அணுஉலை நிலைப்பாடு என்ன? ஸ்டெர்லைட் நிலைப்பாடு என்ன? (ஐந்து ஆண்டு வாச்பாய் அரசில் .தி.மு.க. இருந்தது. இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். ஸடெர்லைட்டின் கழிப்பறைக் கதவுகளைக்கூட அவர்கள் மூட எத்தனிக்கவில்லை என்பது தேர்தல் களத்தில் பேச வேண்டிய செய்தி) மணல் மாஃபியா குறித்த நிலைப்பாடு என்ன? தேவாரம் நியூட்ரினோ நிலைப்பாடு என்ன? தொடர் மீனவர் படுகொலை நிலைப்பாடு என்ன? (மீண்டும் வாச்பாய் ஆட்சியின் ஐந்து ஆண்டில் நடந்த மீனவர் படுகொலைகளை நினைத்துப் பார்ப்போமா?) சுஷ்மா சுவராஜ் ராசபக்சேவைச் சந்தித்ததன் விளக்கம் என்ன? காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நிலைப்பாடு என்ன? இவைகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் தில்லியின் நரகல் அரசியலுக்கு மூடி மாற்ற வந்திருக்கிறீர்களா? தில்லியின் நாதாரித்தனத்தை புது மூட்டைகளில் கட்டித் தமிழன் தலையில் சுமத்த வந்திருக்கிறீர்களா?
தில்லி அரசியலை, நரித்தனத்தை தமிழகத்தின் மீது திணிக்கிற தரகர்களாகத்தான் இதுநாள் வரை தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தரவல்ல தமிழகம் தனது நலனை தில்லியின் நெற்றியில் அடித்துச் சொல்ல வேண்டுமானால் முதலில் தரகர்களை களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஈழக் குருதியைப் பார்த்த பின்னும் தரகு வேலை பார்க்கிறவன் ஒன்று தமிழனில்லை அல்லது அவன் கருணாவினும் இழியவன்.
தரகு வேலைக்குத்தான் முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்வு பயன்படப்போகிறது என்றால், தரகர்களைத் தகர்ப்பதே நமது வேலையாக இருக்க வேண்டும்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக