புதன், நவம்பர் 06, 2013

காமன்வெல்த் நாடகம்!

 
                     ஓர் அமைப்பை உருவாக்குகிறோம்.  சமத்துவம், மாந்த உரிமை, இன உரிமை போன்ற உயரிய கொள்கைகளுக்காக அந்த அமைப்பில் 53 பேர் இணைகிறார்கள்.  அதில் ஒருவன் ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அமைப்பிலிருந்த ஒருவரை வெட்டிச் சாய்க்கிறான். மீதி பேரும் அதைப் பார்க்கிறார்கள்.  ஒன்று அவன் கொலைவெறியோடு வெட்டும் போது தடுத்திருக்க வேண்டும்.  அல்லது அவனைப் பிடித்து உதைத்து உரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.  “நீ இந்த அமைப்பிற்கே லாயக்கு இல்லை” என்று அவனை அமைப்பிலிருந்து விலக்கியிருக்க வேண்டும்.  கொலையின் கொடூரத்தை முன்னிட்டு அவனுக்கு உச்சத் தண்டனையைக் கொடுத்திருக்க வேண்டும்.
 
                  இனப்படுகொலை செய்த இலங்கை அதிபருக்கும் அந்நாட்டின் குற்றவாளிகளுக்கும் தண்டனை அளிக்க இந்த காமன் வெல்த் நாடுகள் முன் வந்திருந்தால் அந்த அமைப்பின் நோக்கம் சிதையாமல் இருந்திருக்கும்.
ஆனால், நடப்பதோ தலை கீழாக இருக்கிறது.  இனப்படுகொலை நடந்த உடனேயே, முதலில் இலங்கையை காமன் வெல்த் நாடுகளின் அமைப்பிலிருந்து விலக்கி இருக்க வேண்டும்.  விசாரணையை முடுக்கிவிட்டு ராசபக்சேவையும் இலங்கை ராணுவத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற உதவியிருக்க வேண்டும்.  ஆனால், காமன் வெல்த் மாநாடே ராசபக்சேவின் அக்குளுக்குக் கீழேதான் நடக்கப் போகிறது.
இந்தியாவின் இழிவான நிலைப்பாடு!
 
                  இந்த நீதி கேட்கும் போராட்டத்தில் முன்னிலையில் இருக்க வேண்டிய இந்தியா கொலையாளிக்கு முட்டுக் கொடுக்கிறது.  ஒருவேளை சர்வதேசிய அரங்கில் இலங்கைக்கு அதிக ஆதரவு இருப்பதாக இந்தியா கருதினால் குறைந்தபட்சம் அந்தக் கொலைகார இலங்கை இருக்கும் அந்த காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகிவிட்டால்கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் இந்தியா அதைவிட மட்டமான ஒரு நிலைக்குப் போகிறது.  இலங்கையில் அதே கொலைகாரன் தலைமையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கப் போவதாகக் கூறுகிறது.  தமிழ்நாட்டிலிருக்கும் திராவிடக் கட்சிகளும் சில தமிழ் தேசிய அமைப்புகளும் ஒன்றுக்கும் உதவான ஒரு வேண்டுகோளை இந்தியா முன் வைக்கிறது, “மாநாட்டில் கலந்து கொள்ளாதே!” என்று.என்ன மட்டமான சிந்தனை இது!  கொலையாளிக்குத் தண்டனை என்ற நிலையிலிருந்து சறுக்கிச் சறுக்கி “மாநாட்டில் கலந்து கொள்ளாதே!” என்கிற உப்புச் சப்பு இல்லாத கெஞ்சலுக்கு இறங்கி இருக்கிறது.  இதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானம்!  இதுதான் திரு. கருணாநிதி உள்ளிட்ட திராவிடத் தலைவர்களின் போராட்டம்!
 
           ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொடுமையாகப் பறிகொடுத்த தமிழினத்தின் ஒரே கோரிக்கை, “இலங்கையை தண்டி!  தனி ஈழம் அமை!” என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.
 
              உலக நாடுகளின் அனைத்து அவைகள், அமைப்புகள் முன்பாகவும் நாம் வைக்க வேண்டியது இரண்டே கோரிக்கைகள்தான்!
 
                              “இனப்படுகொலை செய்த இலங்கையைத் தண்டி!”
                    “தனிநாடு கேட்டுப் போராடும் தமிழருக்குத் தனிநாடு கொடு!”
 
                  போராட்டம், கோரிக்கை, வற்புறுத்தல் என்று அனைத்துமே இவைகள் நோக்கியதாகவே இருக்க வேண்டும்!  மீதி அனைத்துமே சறுக்கல், சமரசம்!
இனப்படுகொலை விவகாரத்தில் சறுக்கல், சமரசம் என்பதெல்லாம் பித்தலாட்டம், பிறதேசித்தனம்!  தலைவர்களுக்கு ஆயிரம் அழுத்தங்கள் இருக்கலாம்!  அவர்கள் ஒரு புறம் இருக்கட்டும்.  தமிழர்களே, நாம் இணைவோம்!  உலக நாடுகளின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேட்போம்!  இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக