திங்கள், நவம்பர் 04, 2013

தாது மணல் கொள்ளையர்களைக் கைது செய்யக் கோரி கரூரில் தமிழர்களம் ஆர்ப்பாட்டம்!!

 
 
              “60 ரூபாய் பிக்பாக்கெட் அடிக்கிறவனை உள்ளே தூக்கிப் போடுகிற இந்த அரசு 60 லட்சம் கோடி அடித்தவர்களை நாட்டில் சுதந்திரமாகச் சுற்றித் திரிய அனுமதித்திருக்கிறது.  இது சட்டத்தின் ஆட்சியா?  அல்லது மாஃபியாக்களின் ஆட்சியா?” என்று தமிழர்களப் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் கேள்வி எழுப்பினார்.
 
                 நேற்று கரூர் நகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் உரையாற்றினார்.  தாது மணல் கொள்ளையில் ஈடுபடுகிறவர்கள் தனியொரு ஆட்சியே நடத்தி வருகிறார்கள்.  கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்த அரசு, நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த அரசு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த அரசு மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை மட்டும் முட்டுக் கொடுத்துத் தாங்குகிறது என்றால் இந்த ஆட்சியில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கும் உள்ள நெருக்கத்தைத்தானே அது காட்டுகிறது.  எதிர்க்கட்சிகளும் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றன என்றால் பணம் பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது என்பதுதானே பொருள்.
திரு. ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு செய்யச் சென்றபோது அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் மணல் மாஃபியாக்களால் தடுத்து நிறுத்தப்படுகிறார்.  சில ஊடகவியலார்கள் அவர் முன்னிலையிலேயே கடத்தப்படுகிறார்கள்.  இத்தனையையும் பார்த்தபிறகு, காவல்துறை கை கட்டி நிற்கிறது.  அப்படியானால் இது யாருக்கான ஆட்சி?  மாஃபியாக்களின் ஆட்சி இல்லையா?
 
                250 ஆண்டுகளில் படிப்படியாகவும் முறைப்படியும் அள்ளி அரசுக்கும் மக்களுக்கும் வருவாய் ஈட்ட வேண்டிய தமிழகத்தின் மணல் வளத்தை 20 ஆண்டுகளில் மொத்தமாக வழித்தெடுத்து முடித்துவிட்டார்கள்.  ஆறு அங்குலத்திற்கு வழிக்க வேண்டிய மணலை அரக்க எந்திரங்களைக் கொண்டு அள்ளி எடுத்திருக்கிறார்கள்.  கடற்கரைகளில் பாறைகள் தென்படும் அளவிற்கு மணலை கொள்ளை கொண்டு போய் இருக்கிறார்கள்.  30 அடி 40 அடி ஆழத்திற்கு மணலை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.  அரசுக்கு 60 லட்சம் கோடி இழப்பீடு என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறுகிறது.  இவையெல்லாம் அத்தான காட்டுக்குள் யாருமறிய இருளுக்குள் நடந்த குற்றங்கள் இல்லை.  பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் நடந்த கொள்ளை இது.  அரசு அதிகாரிகள், காவல் துறையினர், வருவாய் அதிகாரிகளின் கண்களுக்கு முன்பாகவே இவை நடந்தன.  20 ஆண்டுகளாக இவர்கள் வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை.  அந்த மாஃபியாக் கும்பலோடு கை கோர்த்து மக்களை அடித்து நொறுக்கினார்கள்.  20 ஆண்டுகளுக்கு முன்பாக பெருமணல் என்ற கடற்கரை கிராமத்தில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தபோது ஜாங்கிட் என்கிற காவல் அதிகாரியின் தலைமையில் 26 வண்டிகளில் வந்து தாக்கி அந்தப் போராட்டத்தை ஒடுக்கினார்கள்.  இப்படி அரசே இவர்களுக்கு ஒத்துழைத்த காலமும் கடந்து அரசே இவர்களின் காலடி மண்ணுக்கு சேவகம் செய்யும் இழி நிலைக்கு மாறிப்போனது.
 
               

  
                   மாஃபியாக்களின் ஆதிக்கம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது.  கடற்கரை கிராமங்களில் இவர்களே வெடிகுண்டுகளை தாராளமயமாக்கி ஊர்களையும் மக்களையும் இரு கூறாக்கி சமூக விரோதிகளின் கூடாரங்களாக இன்று மாற்றிவிட்டார்கள்.  இந்த மாஃபியாக்களின் வளர்ச்சி சனநாயகத்தின் வீழ்ச்சி!  எனவேதான், இவர்களைக் கைது செய்யாமல் எந்த விசாரணையும் முறைப்படியும் நடக்காது.  நேர்மையாகவும் நடக்காது என்கிறோம். நீதியை நிலை நாட்ட வேண்டுமென்றால் இவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று அரிமாவளவன் குறிப்பிட்டார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு கரூர் மாட்ட ஆட்சியரைச் சந்தித்து இது தொடர்பாக தமிழர்களத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக