செவ்வாய், ஜனவரி 28, 2014

சாயாக் கடை அரசியல்!


மணி சங்கர ஐயர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது என் கருத்து. செம்மொழி மாநாடு நடத்துவது பற்றிய எண்ணமே வருவதற்கு முன்பாக கருணாநிதி தினமணி ஆசிரியரைக் கூப்பிட்டு செம்மொழி பற்றிய ஒரு கட்டுரை எழுதுங்கள் என்று சில குறிப்புகளை கொடுத்து எழுதவைத்துவிட்டு பின்னர் ஏதோ அதைப் படித்துவிட்டு செம்மொழி மாநாடு நடத்த முன்வந்தது போல காட்டிக் கொண்டார். அதுபோல, நரேந்திரமோடியின் விளம்பர உத்திகளுள் இதுவும் ஒன்று போலத் தெரிகிறது.
மக்களாட்சி என்பது என்ன? பண்ணையாருக்கும் ஒரு வாக்குதான் பாமரனுக்கும் ஒரு வாக்குதான். ஆண்டியும்கூட ஆண்டை ஆகலாம். “டீக் கடையில வேல பார்த்த உனக்கு நாட்டை ஆளத் தெரியுமா?” என்ற சொற்கள் பாமர மக்களிடம் மட்டுமல்ல பரந்துபட்ட மக்களிடமும் பரவலான ஆதரவையே அள்ளிக் கொடுக்கும். இது மணிசங்கர ஐயருக்குத் தெரியாதா என்ன? எல்லாமே நாடகம்தான். காங்கிரசுக்குள்ளும் சங்கப்பரிவார அமைப்பின் கிளைகள் உண்டு, வேர்கள் உண்டு! மணிசங்கர ஐயர் அதற்கு எடுத்துக்காட்டு!
மற்றகட்சிகளுக்குள் இதுபோன்ற சங்கப்பரிவாரக் கிளைகள் உண்டு என்றால் அண்ணா தி.மு.க.வில் அதற்கு தலைமையே உண்டு. “நரேந்திர மோடி தலைமை அமைச்சராக வரவேண்டும். அல்லது செயலலிதா வரவேண்டும்” என்று துக்ளக் சோ கூறுவதன் பொருளும் இதுதான். சோவைப் பொறுத்தமட்டில் அவரது முதல் தேர்வு செயலலிதாதான். தமிழகத்தில் 40 தொகுதிளை வெல்லும் வாய்ப்பு செயலலிதாவிற்கு இருந்திருந்தால் சோ தாண்டவம் ஆடி, தரகு பார்த்து அம்மணியை அங்கே கொண்டு போயிருப்பார். காரணம் மோடி பிராமணர் அல்லர். செயலலிதா ஒரு பிராமணர். இப்போதைய நிலையில் செயலலிதா 40 தொகுதிகளையும் வெல்லும் வாய்ப்பு இல்லை. “இந்தியாவில் பிராமணருடைய ஆட்சியே இருத்தல் வேண்டும்” என்பது ஒவ்வொரு பிராமணனின் இலக்கு! கனவு!
முதல் கதைக்கு வருவோம். நரேந்திரமோடி ஏன் வரக்கூடாது என்பதற்கு வலுவான பல காரணங்கள் இருக்க... சாயாக்கடைப் பின்னணியை உசுப்பி விடுவது என்பது பச்சையான மட்டமான அரசியல். அதாவது உணர்வின் அடிப்படையில் மக்களை உசுப்பிவிட்டு வாக்கு அறுவடை செய்வது காலாகாலமாக இந்திய, வடுக அரசியல்வாதிகளின் வழக்கம்.
நரேந்திரமோடியின் குசராத் படுகொலைகள் என்பது உணர்ச்சிப் பெருக்கால் நடந்த மதக்கலவரத்தில் நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக நடந்து விட்டவை என்று சொல்லவே முடியாது. “எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. காவல்துறை தயாராக இருக்கவில்லை. தவிர்க்க முடியவில்லை!” என்று யாரும் சொல்லவே முடியாது.
கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டது. பின்னர் அரசே முன்னின்று இசுலாமியர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்தது, எரித்து முடித்தது! இந்தக் கொடூரம் மோடியின் உள்ளத்திற்குள் சீறிக் கொண்டிருந்த ஒரு பயங்கரவாதத்தைத்தான் காட்டுகிறது. இதுவே, அவர் இந்த நாட்டின் தலைமை அமைச்சராக வரக்கூடாது என்பதற்கான அழுத்தமான காரணம். இதுபோக, இன்னும் அலசி ஆராய வேண்டிய பல முகாமையான காரணங்கள் உள்ளன. மோடி விளம்பரங்களில் வாழ்ந்தவர், வளர்ந்தவர்! குசராத்தில் ஏதோ மாபெரும் புரட்சி நடந்துவிட்டதாக திட்டமிட்டு சில ஆண்டுகளாக ஊடகங்களில் பரப்புரை செய்யப்பட்டது. அதன் நோக்கமே அவரை தலைமை அமைச்சர் பதவிக்கு நிறுத்துவதுதான். விளம்பரங்களில் வாழும் வீண் மனிதர்களை நம்பி நாட்டை ஒப்படைக்கக்கூடாது. விளம்பரங்களின் வழியாக ஒருவன் வருகிறான் என்றால் வந்தபின் உள்ளக்கிடக்கைகள் மட்டுமே ஆளும்! மோடியைப் பொறுத்தமட்டில் அது தெளிவாகத் தெரிகிறது.
மறுபுறம் காங்கிரசுக் கட்சி! ஈழப்படுகொலைகளை மறக்க முடியமா? இசைப்பிரியா, பாலச்சந்திரன், ரமேசு உள்ளிட்ட பல்லாயிரம் மக்களை கொடூரமாகக் கொன்று குவித்த காங்கிரசு அரசை மன்னிக்க முடியுமா? இது போக, ஊழலின் உச்சத்தில் குளித்து கும்மாளமிட்ட கட்சி இது. சசி தரூர் போன்ற கழிசடைகளை அமைச்சர்களாக வைத்திருக்கும் ஒரு கட்சியை அரசியல் கட்சி என்று ஏற்றுக் கொள்வதா என்ன? சாக்கடையை அள்ளி நடுவீட்டுக்குள் வைக்க முடியாது.
எனவே, இரு பெரும் பயங்கரவாதிகள் அரசியல் வேடம் போட்டு அரிதாரம் பூசிக்கொண்டு அப்பிராணிகள் போல நாடாளுமன்றத் தேர்தலுக்கு நம்மிடம் வருகிறார்கள். இருவருமே மனிதக் குருதியை மலிவாகச் சிந்தும் காடடுமிராண்டிகள்! இதில் இந்த சாயாக்கடை விவகாரம் மலிவான உத்தி! இதைச் சொல்லி மக்களைத் திசை திருப்புகிறார்கள். நாம் முகநூலில் மட்டுமல்லாது முகம் பார்க்கும் மனிதரிடமும் இந்தச் செய்திகளைப் போட்டு வைப்போம்.
உங்கள் அரிமாவளவன்
தமிழர்களம்
கீழே உள்ள படங்கள் ஓன்று குஜராத் மற்றொன்று ஈழம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக