செவ்வாய், ஜனவரி 28, 2014

நிமிர்ந்து வாழ்வோம்! நீடு வாழ்வோம்!!


கடந்த 26 ஞாயிறு பிற்பகல் இடிந்தகரையில் நடந்த அணுஉலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நடந்த கடலோரச் சமுதாய மக்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன். ஆம் ஆத்மி கட்சியில் இணைவது, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பது, ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவைக் கோருவது போன்றவை உள்ளிட்ட “அரசியல் நகர்வு” குறித்தான சூடான விவாதங்கள் நடந்தன. எனது கருத்து என்ன? என்று உங்களில் பலர் என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
தற்போதைய அணு உலை எதிர்ப்பு இயக்கம் ஏறத்தாழ 900 நாட்களை கடக்கிறது. இந்த இயக்கத்தின் வெற்றி என்பது ஓரிரு நபர்களை மையப்படுத்தியது அன்று. மாறாக மனவுறுதி கொண்ட நான்கு பகுதியினரைச் சாரும் என்று கருதுகிறேன். அதில் முதலாவதாக இடிந்தகரை ஊர் மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள். இரண்டாவதாக அந்த ஊர்க் கமிட்டி. மூன்றாவதாக கடலோரச் சமூதாயம் நான்காவதாக தமிழகம் தழுவிய பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், ஓரிரு அரசியல் கட்சிகள். இவைகள்தான் இந்த இயக்கம்! இவர்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் இல்லாமல் போராட்டத்தின் வாயிலாக தாக்கங்களை ஏற்படுத்தியிருக்க முடியாது. இவ்வளவையும் ஒருங்கிணைத்த அண்ணன் உதயகுமார், தம்பி புஷ்பராயன், தம்பி மை.பா. நன்மாறன் போன்றோரின் பணியும் ஈகமும் அளப்பரியது.
ஊர் கமிட்டியில் சிக்கல்கள் இருந்தன! கருத்து முரண்பாடுகள் இருந்தன! ஆனால் ஒரு புள்ளியில் ஒன்றாக நின்றார்கள்.
ஊர் மக்களிடையே பல்வேறு கருத்துகள் தொடர்பாக வேறுபாடுகள் இருந்தன! மோதல்கள் இருந்தன! ஆனால் ஒற்றைப் புள்ளியில் ஒன்றாக நின்றார்கள்.
கடலோர ஊர்களில் கணக்கிலடங்கா பிரச்சனைகள் வந்து போயின! இன்னும் இருக்கின்றன. இன்றும் முகம் கொடுத்துப் பேச முடியாத அளவிற்கு தனி நபர்களுக்கிடையிலும் குழுக்களுக்கிடையிலும் கோவமும், மோதல்களும் உள்ளன. ஆனால் ஒற்றைப் புள்ளியில் ஒன்றாக நின்றார்கள்.
இணைந்த இயக்கங்கள் அதைவிட வியப்பானவை. ம.தி.மு.க இருந்தது. திராவிடத்தை அடியோடு எதிர்க்கிற நாங்கள் தமிழர்களமும் இருக்கிறோம். மதச் சார்பான கட்சிகள் இருந்தன. கடவுளே இல்லை என்று சொல்கிற இயக்கங்களும் இருந்தன. தேர்தலை வெறுக்கிற இயக்கங்கள் ஏராளமாக உள்ளே இருந்தன. தேர்தலில் பங்கேற்கும் அமைப்புகளும் இருந்தன. வேறொரு தளத்தில் கருத்துக்காக, கொள்கைக்காக கடுமையாக மோதும் இயக்கங்களும் கட்சிகளும் ஒற்றைப் புள்ளியில் கை கோர்த்து நின்றன.
மையத்துக்குள் இருந்த ஒருங்கிணைத்த இந்த ஐந்தாறு பேருக்குள்ளும் கடு¬மான மோதல்கள் இருந்தன! ஆனால் அணுஉலை எதிர்ப்பு என்பதில் சமரசமற்ற ஒரு நிலைப்பாடு இருந்தது.
அந்த ஒற்றைப் புள்ளி என்பது என்ன? “கூடங்குளம் அணு உலையை மூடுவது!” அதன் நீட்சியாக அணுக் கதிர்வீச்சு இல்லாத பசுமையான ஒரு நாட்டை உருவாக்குவது. இந்த ஒற்றை புள்ளியில்தான் மேற்சொன்ன மக்களும் மக்கள் இயக்கங்களும் ஒன்று பட்டு நின்றன. இன்றும் நிற்கின்றன.
இப்படி நிற்பதற்காக இவர்கள் அத்தனை பேருமே கடுமையான விலை கொடுத்திருக்கிறார்கள். சிலர் உயிர் கொடுத்திருக்கிறார்கள். பலர் வாழ்வை இழந்து தவிக்கிறார்கள். ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்பின்றி தவிக்கிறார்கள். பாஸ்போர்ட் மறுக்கப்பட்ட இளைஞர்கள் ஏராளம் இந்தப் பகுதியிலே உண்டு. இடிந்தகரையைத் தாண்டி வேறு ஊர்களுக்குப் போகமுடியாதவர்கள் உண்டு! இப்படிப்பட்ட அரசின் பல்வேறு அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்தவர்கள் இவர்களே! இணைந்த இயக்கங்களும்கூட, “அணு உலைக்கு ஆதரவான ஒரு பெருந்திரள் மக்களின் வாக்குகளை இழக்கிறோமே” என்ற எதார்த்தமான தன்னலச் சிந்தனை கடந்து கொள்கைப் பிடிப்போடு நின்றார்கள். இதையெல்லாம் யாரும் மறுக்க முடியாது.
அணுஉலை எதிர்ப்பு இயக்கம் இந்த ஒற்றைப் புள்ளியிலிருந்து, அதாவது, “கூடங்குளம் அணு உலையை மூடுவது” என்ற இலக்கிலிருந்து எப்படி விலகினாலும் அது சறுக்கல் மட்டுமல்ல! சாவை முத்தமிடுவதற்கு சமம்!
தேர்தலுக்காக பல கட்சிகள் பல சமரசங்கள் செய்கின்றன! அணு உலை எதிர்ப்பு இயக்கத்திற்கு அப்படிப்பட்ட கட்டாயமோ நெருக்கடியோ சங்கடமோ இருப்பதாக எனக்குப் படவில்லை! அப்படி இந்த இயக்கம் ஏதாவது சமரசம் செய்துவிட்டது என்றால் எப்படி சமரசம் செய்யும் மற்ற கட்சிகளை மக்கள் கோவம் கொப்பளிக்கப் பார்க்கிறார்களோ, புறக்கணிக்கிறார்களோ அப்படியே இதையும் பார்ப்பார்கள், புறக்கணிப்பார்கள்.
“ஆம் ஆத்மியோடு இணைவதா?” போன்ற கேள்விகள் வந்தபோது, இம்மாதம் கடந்த ஆறாம் நாள் இதே கருத்தை போராட்டக்குழுவின் மையத்திலிருக்கும் அனைவரிடமும் இடிந்தகரையில் வைத்து பகிர்ந்து கொண்டேன். “ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் கூடங்குளம் அணுஉலையை மூடுவோம் என்றோ, நாடாளுமன்றத்திற்குள் (எதிர்கட்சியாக) வந்தால் அதே கருத்தை வலியுறுத்தி போராடும் என்றோ அதிகாரபூர்வமாக வெளிப்படையாக அறிவிக்குமா?” என்று கேட்டேன். அதன் அடிப்படையில் போராட்டத்தின் மைய ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. உதயகுமார் அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு முறையாக மடல் ஒன்று விடுத்தார். அதில்தான் இப்போது பேசப்படுகிற ஐந்து கருத்துக்கள் வெளிப்பட்டன (ஈழத்தமிழர், கூடங்குளம், அணுக்கொள்கை, கட்சியின் தமிழ் பெயர் போன்ற..)
இன்றுவரை அவர்களிடமிருந்து அதிகாரபூர்வமாக எந்த பதிலும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. அப்படி, உறுதியான வெளிப்படையான “ஆம்” வந்தால் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தோடு இருக்கிற பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள், சமுதாய இயக்கங்கள் ஆகியனவற்றோடு அவர்களும் இணைந்து முதலில் களமாடட்டும்.
தேர்தலில் பங்கேற்க வேண்டுமா? என்றால், “ஆம்” என்பது எனது தனிப்பட்ட மட்டுமல்ல தமிழர்களத்தின் நிலைப்பாடும் கூட! ஆனால், அணுஉலை எதிர்ப்பு இயக்கத்திற்குள் தேர்தல் புறக்கணிப்பு என்கிற உறுதியான நிலைப்பாட்டோடு பலர் இருக்கிறார்கள். சிறையில் வாடும் கொளத்தூர் மணி, தமிழ்தேசியப் பொதுவுடமைக் கட்சியின் மணியரசனார், திரு. மீ.தா.பாண்டியன் அவர்கள் சார்ந்திருக்கிற அமைப்பு, கோவை ராமகிருட்டிணன் போன்ற இனிமையான நண்பர்களோடு சில அரசியல் கருத்து முரண்பாடுகளைக் கொண்டவர்கள் நாங்கள். ஆனால், அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் இவர்கள்! இவர்களைப் போன்ற பலர்! அவர்களைக் கலந்து ஆலோசிப்பது அவசியம் மட்டுமல்ல! தலையாய கடமையும்கூட! குறைந்தபட்சம், “தேர்தலில் ஏன் பங்கேற்க வேண்டும்” என்று நினைக்கிறோம் என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.
இனி தமிழர்களத்தின் நிலைப்பாட்டிற்கு வருவோம்!
அணுஉலையை மூட வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் சற்றும் பின்வாங்கப்போவதில்லை. தமிழர்களத்தின் இலக்கும், நோக்கமும், செயற்பாடுகளும் இன்னும் உண்டு!
அண்டை மாநிலங்கள் எங்கள் நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு அங்குள்ள எங்கள் மக்களை நாலாந்தரக் குடிகளாக நடத்துகின்றன! நாங்கள் இழந்த பகுதிகள் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அதை அநியாயமாக இழந்துவிட்டு இன்று ஆற்று நீருக்கும் குடிநீருக்கும் அல்லாடுகிறோம். எங்களுக்கு அந்தப் பகுதிகள் திரும்ப வேண்டும்.
தமிழ்நாட்டுக்குள் இந்தி தேசிய அரசியல் பேசி, திராவிட தேசிய அரசியல் பேசி இந்த மண்ணை வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாற்றியிருக்கிறார்கள். எனவே, அன்னியர் ஆட்சியை அகற்றி மண்ணின் மக்களின் ஆட்சியை இங்கே நிறுவ முற்படுகிறோம்.
திபெத்திய ஏதிலிகளை தங்கத் தட்டில் வைத்துக் தாங்குகிற இந்திய அரசு எங்கள் ஈழச் சொந்தங்களை நாயினும் கீழாக நடத்துகிறது. எங்கள் சொந்தங்களுக்கு ஈழத்தில் நாடு வேண்டும். இந்த மண்ணில் அவர்கள் எங்களுக்கு மற்ற இனத்தாரைவிட நெருங்கிய சொந்தங்கள் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும்!
“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்று!, ஈழத்தை அங்கீகரி!” அன்றேல் தமிழகத்திற்கென ஒரு வெளியுறவுக் கொள்கையை ஏற்படுத்தும் சூழ்நிலையை நாங்கள் உருவாக்கிக் கொள்வோம்.
தில்லியைக் காப்பாற்ற, தில்லிப் பெண்களின் கற்பைக் காப்பாற்ற எப்படி தில்லி காவல்துறை தில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று சேகரிவாலா போராடுவதில் ஞாயம் இருக்கிறதோ அதே போன்று எங்கள் மக்களை எங்கள் மீனவர்களை காப்பாற்ற கடலோரக் காவல்படை மீதான அதிகாரம் எங்களுக்கு வேண்டும். அவர்கள் என்ன மாதிரியான ஆயுதங்கள், படகுகள் வாங்க வேண்டும் என்று நாங்களே முடிவு செய்வோம்.
இப்படி தமிழர்களம் ஞாயமான பல இலக்குகளோடு நகர்கிறது. இந்தப் பாதையில் பார்வையில் இன்று தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களும் இளைஞர்களும் அமைப்புகளும் இயக்கங்களும் சீர்மையோடு ஒன்றுபடத் தொடங்கியிருக்கின்றன.
நாங்கள் பதட்டப்படவும் இல்லை! பரபரப்பு அடையவும் இல்லை! வரும் 9ஆம் நாள் சென்னையில் நாங்கள் இதே இலக்குகளோடு இணைந்து செயலாற்றும் கட்சிகளோடு அமைப்புகளோடு பேசவிருக்கிறோம்.
நான் கட்டிய மனைவி சற்று பருமனாக, சற்று கருப்பாக இருக்கிறாள்! “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை! ஆனால் அவளுக்கு இணை இந்த உலகில் எவளுமில்லை” என் தமிழகத்தைச் சொன்னேன்!
என் மகளுக்கு மூக்கிலே கட்டியிருந்தது. எவ்வளவு சங்கடப்பட்டாள்! “கோணக்காலி” என்று கிண்டலடிக்கிறார்கள். ஆனால் என் உயிரில் கலந்தவள் அவள்! என் மூச்சு சிதையும்வரை அவளை முத்தத்தால் நனைப்பேன்! அது சிதைந்தபின்னும் அவளையே நான் வட்டமடிப்பேன்! என் சேய்நாடு ஈழத்தைச் சொல்கிறேன்!
இந்தியர்களான நமீதா, நயன்தாரா, குசுப்பு எல்லாம் பார்க்கப் பளபளவெனதான் இருக்கிறார்கள். ஆனால், வீழ்வதற்கு நான் தயாராக இல்லை!
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்”
என் சாவுக்கு முன்னால் சாதித்துவிட வேண்டும் என்ற சாணக்கிய வழி வந்தவனல்லன் நான்! என் சாவே உரமானாலும் என் இனம் தலைநிமிர வேண்டும் என்ற எல்லாளன் வழி நின்று துடிக்கிற பாமரன் நான்! நாங்கள் நீடு வாழ்கிறவர்கள்!!
உங்கள் அரிமாவளவன்
தமிழர்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக