திங்கள், டிசம்பர் 06, 2010

“தமிழியம்”இதழ் வெளியீட்டு விழா



தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் “தமிழியம்இதழ் வெளியீட்டு விழா மதுரையில் 05-12-10 ஞாயிறு மாலை மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது. திரு.பொன்.மாறன் வரவேற்பில் திருவாளர்கள் “தேமதுரத்தமிழோசைஆசிரியர் தமிழாலயன், சோ. சேது ரத்தினம் ஆகியோர் முன்னிலையில் திரு.பறம்பை அறிவன் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழியம்முதல் இதழை “வெங்காலூர் வெடிவால் சித்தன்புலவர் மகிபை திரு.பாவிசைக்கோ வெளியிட, திரு.அரசேந்திரன் பெற்றுக்கொண்டார். வாழ்த்துரையில் திருவாளர்கள் பாவலர் இராமச்சந்திரன், புலவர் தமிழ்க்கூத்தன், பொறிஞர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்த்தேசியத்தின் தேவை குறித்து உரையாற்றினர். “எழுகதிர்இதழாசிரியர் திரு. அரு.கோ. சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது, திராவிடத்தால் தமிழன் வீழ்த்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை எண்ணிப் பாருங்கள். இந்தியத்தேசியம் என்பது ஒரு மாயை. அது எப்போதும் தமிழனுக்கு எதிராகவே இருந்து வந்திருக்கிறது. சுதந்திர காலம் முதல் இன்று வரை, ஜவர்ஹர்லால் நேரு முதல் சோனியாகாந்தி வரை தமிழினம் வஞ்சிக்கப் பட்டிருக்கிறது. ஆகவே, இந்தியம் எனும் போலித்தேசியத்தால் தமிழன் பழிவாங்கப்பட்ட நிலையில் கொஞ்சமும் குறைவின்றித் திராவிடமும் தமிழனை வஞ்சித்துவிட்டது. முப்படை வைத்து, தமிழை நீதிமொழியாக்கி, தமிழனுக்கென இராணுவம், காவல்துறை அமைத்து, மிகப்பெரிய வல்லரசு நாடுகளான சீனா, இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கூட்டு இராணுவ உதவியுடன் வந்த சிங்கள இராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட தமிழ்த் தேசியத்தலைவன் பிரபாகரனின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க உதவிய இந்தியமும், திராவிடமும் தமிழினத்தின் எதிரிகள்! மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலத்தில் தமிழக எல்லை வரையறுக்கப்பட்ட போது, தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதிகளான, தற்போது கேரளப்பகுதிகளான இடுக்கி, திருவனந்தபுரம், மூணாறு மற்றும், கர்நாடகப் பகுதிகளான கோலார், வெங்காலூர் (பெங்களூரு), மற்றும் ஆந்திர மாநிலப்பகுதிகளான சித்தூர், திருப்பதி போன்றவைகளைத் மிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென்று எந்த “திராவிடத்தந்தையும் கோர வில்லை. ம.பொ.சி. போராடவில்லை என்றால் இன்று திருத்தணி நமக்கு இல்லை. நேசமணி போராட வில்லை என்றால் நமக்கு குமரி மாவட்டம் இல்லை. இராஜகோபாலாச்சாரி இல்லையென்றால் நமக்கு சென்னைப் பட்டணம் இல்லை. தமிழகத்தின் எல்லைப்பிரச்சனையில் தந்தை பெரியார் கூட தமிழனுக்காக குரல் கொடுக்கவில்லை. மாறாக மலையாளிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தார். 1944ல் சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சி “தமிழர் கழகம்என பெயர் மாற்றப் பட்டது. மதிய உணவுக்குப்பின் “தமிழர் கழகம்திராவிடர் கழகம்எனப் பெயர் மாற்றப்பட்டு, அது பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. 1927ல் “தமிழ்நாடு தமிழருக்கேஎன்று குரல் கொடுத்த தந்தை பெரியார், இந்திய விடுதலைக்குப் பின், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் “தமிழ்நாடு தமிழருக்கேஎன்று குரல் கொடுத்தார். சென்னைராஜதானியில் இருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திரம் பிரிந்த பின்னர் “தமிழ்நாடு தமிழருக்கேஎன்ற அவரின் கோரிக்கை பலனற்றுப் போயிற்று. திராவிடம்என்று ஓர் இனம் இல்லவே இல்லை. இல்லாத இனத்தைச் சொல்லி, அந்த இனத்துக்கென ஒரு நாடு வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, பின்னர் அதையும் கைவிட்டு, இன்று திராவிடம் எனும் பெயரால் தமிழனின் பூமி சுரண்டப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? தொண்ணூறு ஆண்டுகால தமிழக வரலாற்றில், சுப்பராயன், பி.டி.இராசன், காமராசர், பன்னீர்சசெல்வம் ஆகியோர் மட்டுமே தமிழ்ச் சாதியைச் சேர்ந்த முதலமைச்சர்கள். அதிலும் இடைகால முதல்வர்களாக பி.டி.இராசனும், பன்னீர்ச் செல்வமும்! என்ன கேவலம்? இந்த நிலை ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் உண்டா? தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டாமா? திராவிடம் எனும் பெயரால் தமிழரல்லாதார் தமிழகத்தை ஆள அனுமதிக்கக் கூடாது. மதுரை விமான நிலையத்துக்கு தமிழனான பசும்பொன் தேவர் பெயர் வைக்க யோக்கியதை யில்லை. ஆனால் யாரையும் கேட்காமல் அரசு தலைமையகத்துக்கு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் எனும் தெலுங்கர் பெயரை வைக்கும் தமிழக முதல்வர் தான் ஒரு தெலுங்கர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூறியது போல “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!என்ற வைர வரிகளைத் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லும் இதழாகத் “தமிழியம்வளர வாழ்த்துக்கள்!

திரு. பொற்கைப்பாண்டியன் நன்றி கூறினர். திருவாளர்கள் உ.அரசுமணி, நெடுஞ்சேரலாதன் ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மதுரையிலிருந்து அரப்பா தமிழன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக