புதன், டிசம்பர் 22, 2010

தமிழக அரசின் அன்னிய மொழித் திணிப்பு ஆணையை எதிர்த்து - நெல்லையில் தமிழர்களம் போராட்டம்





தமிழக அரசின் அன்னிய மொழித் திணிப்பு ஆணையை எதிர்த்து நெல்லையில் தமிழர்களம் போராட்டம்
அண்மையில் கருணாநிதி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அரபிக் ஆகிய மொழிகளைச் சமச்சீர் கல்வியின்கீழ் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் வாரத்திற்கு நான்கு முறை நடத்துப்படும் என்ற அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதற்கானப் பாடநூல்களை தமிழ்நாட்டு அரசே தன் செலவில் அச்சிட்டு வழங்கும் என்றார். இதை வன்மையாகக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தமிழர்களம் அறப்போராட்டத்தில் இறங்கியுள்ளது.
தமிழர்களத்தின் தென்மண்டலப் பொறுப்பாளர் திரு. மை.பா. சேசுராசு தலைமையில் நடந்த இந்தத் தொடர்முழக்கப் போராட்டத்தில் தமிழர்களத்தின் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளின் வாயிலாக மக்கள் நடுவில் கருணாநிதி அரசின் அன்னிய மொழித் திணிப்பு ஆணை பற்றிய விழிப்பை விதைத்தனர்.
தலைமையுரை ஆற்றிய திரு. மை.பா அவர்கள், “தமிழ்நாட்டைத் திராவிட நாடாக மாற்றிய கருணாநிதிக் கும்பல் இன்று இலங்கையில் ராசபக்சே எப்படித் தமிழ் மொழி அழிப்பு செய்கிறானோ அதையே மறைமுகமாக தமிழ்நாட்டில் செய்ய வருகிறது. அன்னிய மொழிகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்ப்பதன் வாயிலாக தமிழ் மொழி மேலும் புறக்கணிக்கப்பட்டு அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படும்! கருநாடகத்திலும் ஆந்திரத்திலும் கேரளாவில் 2 கோடித் தமிழர்கள் இருந்தாலும் அங்கு படிப்படியாக தமிழ்ப் பள்ளிகள் அனைத்தையும் இழுத்து மூடிவிட்டனர்! அங்கெல்லாம் தமிழ்ச் சாதிகளுக்கு இருந்த இட ஒதுக்கீடு முற்றாக அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், தமிழ்நாட்டின் நிலையோ தலைகீழாக இருக்கிறது. இங்கு தமிழில் படிக்காமலேயே ஒருவர் பட்டம் பெற்றுவிடலாம் என்ற நிலை இருக்கிறது. உச்ச நீதி மன்றப் பரிந்துரையான தொடக்கக்கல்வி தமிழில் இருக்க வேண்டும் என்பது தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு இன்று அதற்கு நேர் எதிராக அன்னிய மொழிகளைத் திணிக்க கருணாநிதி பாடுபடுவது அவரது தெலுங்கு இன ஓர்மையின் வெளிப்பாடோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது” என்றார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்டச் செயலாளர் நிக்சன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அமலரசு, சங்கர், மூக்கையூர் நேசன், மள்ளர் களத்தின் செந்தில் மள்ளர் உள்ளிட்ட பலரும் எழுச்சியுரை ஆற்றினர்.

செய்தி : ஊடகபிரிவு, தமிழர் களம் , தமிழர்நாடு.

1 கருத்து:

  1. தமிழர் களம் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என நம்புகிறேன். பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்கள் இக் கொடுந்திட்டத்தின் பின் விளைவுகள் குறித்த ஓர்மையற்று உறங்குகின்றனர். இவ்விடயம் குறித்த "பன்மொழித் திட்டம்? - உள்ளிருந்து கொல்லும் திராவிடம்!" என்ற எனது கட்டுரையை http://yuvabhaarathi.blogspot.com/ என்ற எனது வலைப்பூவில் காண்க.

    பதிலளிநீக்கு