சனி, டிசம்பர் 18, 2010

அந்நிய மொழியை திணிக்காதே !

அன்னைத் தமிழை அழிக்க முற்படும் கருணாநிதி அரசின்
அன்னிய மொழித் திணிப்பு ஆணையை
முறியடிப்போம்! மூழ்கடிப்போம்!!
தமிழர்களம் சூளுரை

நாம் இருப்பது தமிழ்நாடு! இந்திய அரசியல் சட்டம் 1956ல் தமிழ்பேசும் நமக்கு தனி ஒரு மாநிலம் தந்தது! கன்னடர்களுக்குக் கர்நாடகமும் தெலுங்கர்களுக்கு ஆந்திராவும் மலையாளிகளுக்கு கேரளாவும் கிடைத்தன!
கன்னடர்களுக்குத் தனி மாநிலம் கிடைத்த நாளிலிருந்து அங்கிருந்த தமிழ்ப் பள்ளிகளை மூடத் தொடங்கினார்கள், தமிழ் பேசும் சாதியினருக்கு இருந்த இட ஒதுக்கீட்டை எடுத்துவிட்டார்கள், தமிழர்களின் தங்கவயலை மூடிவிட்டார்கள். காவிரியைத் தமிழகத்திற்குத் தராமல் தடுத்தார்கள். மத்திய மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் கன்னடத்திற்கும் கன்னடர்களுக்கும் முதலிடம் கொடுத்தார்கள்! இது போலவேதான் ஆந்திரமும் கேரளாவும் நடந்து கொண்டன!
ஆனால், தமிழ்நாட்டின் நிலையோ தலைகீழாக இருக்கிறது. இங்கு திராவிடம் என்ற பேரில் ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறவர்கள் தமிழரல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் தமிழை அழிப்பதிலும், தமிழக வளங்களைச் சுரண்டுவதிலும், அன்னியர்களை வகைதொகையில்லாமல் திணிப்பதிலும் குறியாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தமிழே தெரியாமலும் படிக்காமலும் பட்டம்கூட பெற்றுவிடாலாம் என்கிற நிலை இருக்கிறது!
தமிழில் பெயர்ப்பலகை இருக்க வேண்டும் என்று 8 அரசு ஆணைகள் இருக்கின்றன! ஆனால் நடைமுறைப்படுத்த தமிழருடைய ஆட்சி இல்லை!
“தொடக்கக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தும் தமிழ்நாட்டில் அது நடைமுறையில் இல்லை என்பது மட்டுமல்ல அதற்காகப் போராடியவர்களை (100 தமிழ்ப் புலவர் உண்ணாநோன்பு) நசுக்கவும் கைது செய்யவும் முற்பட்டது இந்த அரசு!
தமிழ்நாட்டின் வளங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பேரிலும் டால்மியா, ஜின்டால், நோக்கியா போன்ற அன்னிய நிறுவனங்களுக்கும் வந்தேறிகளுக்கு அள்ளிக் கொடுக்கிறது இந்த அரசு!
சுற்றுச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் கூடங்குளம், ஸ்டெர்லைட், தோல் ஆலைகள் போன்றன தங்கு தடையின்றி தமிழ்நாட்டில் நடக்கின்றன!
காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, கருப்பாநதி போன்றவற்றை மீட்க நாதியில்லை!
தமிழகக் கடற்கரையில் பல நூறு மீனவர்களை சிங்களர்கள் கொன்று குவிக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசு இதைத் தடுக்கவில்லை!
ஈழத்தில் சில லட்சம் தமிழர்கள் மிகக் கொடூரமாக் கொன்று குவிக்கப்பட்டபோதும், முள்வேலி முகாம்களுக்குள் தமிழர்கள் சிதைக்கப்படும்போதும் தமிழ்நாட்டு அரசு கவலையின்றி இருக்கிறது!
“அன்னியர்களிடம் ஆட்சியயைக் கொடுத்தால் இதுதான் நிலை!” என்று சூடு பட்டு நிற்கிறோம்.
தமிழரின் வாழ்வை நெரிக்கும் பிரச்சனைகள் இப்படி அடுக்கடுக்காய் இருக்க ஆட்சியாளர்கள் செய்த ஊழல்கள் ஸ்பெக்டரெம் என்றும், வீட்டுமனை ஒதுக்கீடு என்றும் இமயத்தை விஞ்சி விண்ணைத்தொடும் அளவிற்கு இருக்கின்றன! இத்தனை நெருக்கடிகளுக்கு நடுவில் கருணாநிதி தமிழினத்தின் மீது அடுத்த குண்டை வீசியிருக்கிறார்!
பள்ளிகளில் பிறமொழிப் பாடங்களுக்கு வாரத்திற்கு 4 பிரிவு என்றும் அதற்கான புத்தகங்களை தமிழக அரசே அச்சிடும் என்றும் அறிவித்திருக்கிறார்!
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறார் திராவிடக் கருணாநிதி! கர்நாடகத்தில் 30% தமிழர்கள் நாங்கள் இருக்க அங்கு எங்கள் மொழி அழிக்கப்படுகிறது! மொழி உரிமை பறிக்கப்படுகிறது! கேரளாவில் தமிழர் வாழும் பகுதிகள் அனைத்தையும் மலையாளப் படுத்திவிட்டனர்! ஆந்திராவும் அப்படியே! தமிழ்நாட்டிற்கு மட்டும் என்ன கேடு வந்தது? ஆம், திராவிடம் என்னும் கேடு வந்தது! அது, அன்னிய மொழிகளைப் புகுத்தி தமிழை அழிக்க முற்படுகிறது!
“இலங்கையின் கருணாநிதி” ராசபக்சே அங்கு தமிழை எடுத்துவிட்டான்! “தமிழ்நாட்டின் ராசபக்சே” கருணாநிதியும் அதையே செய்கிறார்!
மொழி அழிந்தால் இனம் அழியும்! திராவிடரான கருணாநிதி தமிழைத் திட்டமிட்டு அழிக்கவே பள்ளிகளில் அயல்மொழியைத் திணிக்கிறார்! “தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்!” என்ற பாவேந்தரின் பாட்டு இனி போர்ப்பறையாய் தமிழர் நம் நாட்டில் ஒலிக்கட்டும்!
தமிழக அரசே, அன்னிய மொழித் திணிப்பு ஆணையைத் திரும்பப் பெறு!

- தமிழர் களம்

1 கருத்து: