சனி, மார்ச் 16, 2013

மாணவர்களின் அறப்போராட்டம்!!

17.03.13
சென்னை.

                இலங்கை அரசின் போர்க்குற்றங்களை கண்டித்து ராஜபக்சேவை தண்டிக்க கோரியும், தனிதமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும், இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்கக் கோரியும். இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலைதான் என ஐநா மன்றத்தில் பகிரங்கமாக அறிவிக்ககோரியும், மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டத்தை கடந்த ஒரு வார காலமாக நடத்தி ஓர் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளனர். சென்னை டாக்டர்.அம்பேத்கர் சட்டக் கல்லுாரி மாணவர்கள்.


                       தமிழகமெங்கும் இன்று பற்றி எரியும் மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டங்களைக் கண்டு ஆட்சிஅதிகாரத்திலிருப்பவர்களே அஞ்சுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாத கோழைத்தனத்தால் கல்லுாரிகளுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளித்து மாணவர்களின் போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது. ஆயினும் கடந்தகால அரசியல் நிகழ்வுகள் மாணவர்களின் மனதில் பதிந்திருக்கும் என்றே நினைக்கின்றோம். அதனடிப்படையில் மாணவர்கள் பின்வாங்காமல் தொடர்ந்து எழுச்சியுடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் நிலைக்கு சென்று ஆட்சியாளர்களுக்கு கடும் நெருக்கடியைத் தந்து போராட்டத்தில் வெற்றி பெறுவார்கள் என்றே நம்புகின்றோம். 

                        அரசியல் ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு ஆட்சியிலிருப்பர்களுக்கும் ஓட்டுப் பொருக்கிகளுக்கும் ஆதரவாக போராட்ட நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்தாலும் எரிமலையாய் வெடித்துக் கிளம்பும் மாணவர்களின் கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்க முடியாமல் காகிதப் போர் நடத்திக்கொண்டிருக்கும் கருணா போன்றவர்கள் அச்சத்தில் உறைந்துதான் போயிருக்கின்றனர். தங்களின் உண்மையான இன உணர்வுகளை காட்டவேண்டிய கட்டாய காலத்தில் மாணவர்கள் இருக்கின்றனர். புரட்சிகர வேடமணிந்து  “இந்திய ஒற்றுமையை கட்டிக்காக்க வேண்டியது நமது கடமை“ என்று கருத்து கந்தசாமிகளாக வலம்வரும் குள்ளநரிகளை மாணவர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். எதிரிகளைவிடவும் இவர்கள் கொடியவர்கள். கடந்த கால போராட்டங்களில் தமிழ்தேசியத்திற்கெதிராகவே திரும்பி தனி தமிழீழம் தேவையற்றது அங்குள்ள தமிழர்களுக்கு சமஉரிமை போதுமானது என்று நஞ்சை கக்கினார்கள். மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். எனவே இந்த முறை மாணவர்கள் தமிழர் தேசிய அரசியல் எது என்பதை நன்கு புரிந்து கொண்டு அதனடிப்படையில் ஒன்றிணைந்து போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என வேண்டுகிறோம்.

                  தமிழினப் படுகொலை இலங்கையில் மட்டும் நிகழவில்லை இங்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்ந்துள்ள மாணவர்கள் பல்வேறு இன்னல்களையும் தாண்டி போராடி வருவது நிச்சயம் போராட்டம் வெல்லும் காலத்தை முன்னறிவிக்கின்றது என்பதையே காட்டுகின்றது. தமிழர்களின் உரிமைகள் மீட்கப்படப்போவது மாணவர்சக்தியால்தான் என்பதை இந்த சட்டக்கல்லுாரி மாணவர்கள் போராட்டம் தெளிவுபடுத்துகிறது. 












             தங்கள் உடல்வருத்தி போராடும் இவர்கள் நிச்சயம் எதிர்கால தமிழர்நாட்டின் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழின உணர்வாளர்கள் எப்போதும் இவர்களுக்கு துணை நிற்பார்கள் என்று உறுதிகூறுகிறோம்! தயங்காமல் தளராமல் போராடி 
வெற்றியை  அடைவார்கள் இந்த இளையோர்கள். இவர்களுடன் அனைவரும் கைகோர்த்து வலுசேர்க்க வேண்டியது பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரின் கடமையாகும். இப்படிப்பட்ட மாணவர்களை பெற்றதற்காக இவர்களின் பெற்றோர்கள் பெருமைப்படவேண்டும் என வேண்டுகிறோம்!

                  
- கருவைமுருகு


              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக