ஞாயிறு, மார்ச் 17, 2013

எங்கேப் போகிறோம், மாணவர்களே? உதயக்குமார்

எங்கேப் போகிறோம், மாணவர்களே?
உதயக்குமார்

சேர்ந்து உட்கார்ந்து சிந்திப்போம், பேசுவோம், செயல் திட்டம் வகுப்போம். இடிந்தகரை விடிந்தகரை ஆகும்! வீழ்ந்து கிடக்கும் தமிழினம் வீரியத்தோடு எழுந்து நிற்கும்!

கனவா, கற்பனையா, காட்சிப்பிழையா என்று நம்மை கிள்ளிப்பார்க்கச் செய்கிறது தமிழத்தில் தற்போது நடந்துவரும் மாணவர் புரட்சி.

நீண்ட காலமாக எல்லோராலும் வஞ்சிக்கப்பட்டிருக்கும் தமிழினம், ‘பொறுத்தது போதும்’ எனப் பொங்கி எழுந்து கொண்டிருக்கிறது. இந்த எழுச்சி 2009-ம் ஆண்டே முழு வீச்சில் வரவேண்டியது. ஆனால் சில சுயநலவாத இனத்துரோகிகளால் அது மழுங்கடிக்கப்பட்டு, முடக்கப்பட்டது. தொடங்கிவிட்ட மாணவர்கள் எப்படித் தொடரலாம் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை இங்கேப் பதிவிடுகிறேன். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம், தெரிவு, உரிமை.

[1] களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் ஓர் ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக ஏற்படுத்தியாக வேண்டும். இறுதியாண்டில் இருக்கும் மாணவர்கள் ஓரிரு மாதங்களில் வெளியேப் போய்விடுவார்கள் என்பதால் அவர்களைத் தவிர்க்கலாம். பெண்கள், சிறுபான்மையினர், தலித் போன்ற அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி, பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தலைவர், செயலாளர் எனும் அடுக்கதிகார முறை (hierarchy) வேண்டாம். பொது நிர்வாகம், மேடை நிர்வாகம், நிதி நிர்வாகம், தகவல் தொடர்பு, வெளியுறவு, சுகாதார வசதி என ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளருக்கும் ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டு, அனைவருமாகக் கூடி ஒருமித்த முடிவுகளை (consensual decision-making) எடுங்கள்.

[2] இந்த ஒருங்கிணைப்புக் குழு அவ்வப்போது கூடி இடம், பொருள், ஏவல் அறிந்து போராட்ட முடிவுகளை எடுக்கட்டும், தொடரட்டும். பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தினர், அரசியல், சமூகப் பிரமுகர்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆதரவு தரட்டும்; பேசவிடலாம், கருத்துக்களைக் கேட்கலாம். ஆனால் அவர்களை முடிவெடுக்க விடவேண்டாம். போராட்டம் நடக்கிற இடம் உங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். பாதுகாப்பு உணர்வு, ஏற்பாடுகள் மிக முக்கியம். சமூக விரோதிகள் விஷமங்கள் செய்யாமலிருக்க, புழுப் பூச்சிகள் அண்டாமலிருக்க, காவல்துறையினரோடு மோதல் வராமலிருக்க முன்னேற்பாடுகள் அவசியம்.

[3] உடனடியாக உங்கள் மாவட்டத்திலுள்ள ஊர்களில் நடக்கும் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டங்களை ஓர் ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி அல்லது முகநூல் வழியாகவோ, அல்லது நேரில் சந்தித்தோ தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியம். அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. இன்னொரு ஒருங்கிணைப்பாளர் பிற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம்.

[4] மாணவர்கள் பலம் மிக்கவர்கள். ஆனால் நம்மைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு வேண்டாம். நாமெல்லாம் சே குவாராக்களும் அல்ல, இங்கே நடப்பது கியூபா புரட்சியுமல்ல. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரிடும்போது, முன்னதாகவே கூடிப்பேசி முடிவெடுத்துவிட்டு, கருத்துப் பரிமாற்றக் கலையில் தேர்ச்சி பெற்ற வெளியுறவு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பேசலாம். அரசு அதிகாரிகளிடம், காவல் துறை அதிகாரிகளிடம் மரியாதையாக ஆனால் உறுதியாகப் பேசுவதும், நமது இலக்கு இவையெனக் குறிப்பிட்டுச் சொல்வதும், அதற்காக நமக்கு உதவக் கேட்டுக்கொள்வதும் நல்ல அணுகுமுறையாக இருக்கும். அதிகாரிகள் நம்மைப் பார்த்து பயப்படும்படியான, வெறுக்கும்படியான மொழி, உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம்.

[5] அதுபோல ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது. அவர்கள் கேட்கும் கேள்விகள் நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும், எரிச்சல் தந்தாலும், அவர்களை இணைத்துக் கொண்டு நடப்பதுதான் நல்லது. ஊடகங்களோடு ஒருவரே பேசுவது சிறப்பு; வீண் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

[6] நமது கோரிக்கைகள் என்னென்ன, நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்க் கடலின் அந்தப்பக்கம் இருக்கும் நம் சொந்தங்கள் தங்கள் தாயகமாம் தமிழீழம் அமைத்துக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடத்தப்படும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்குப் பதிலாக இந்தியா மாற்றியமைக்கப்பட்டத் தீர்மானம் கொண்டுவர வேண்டும். இனப்படுகொலை செய்த ராஜபக்சே கும்பல் மீது சுதந்திரமான (ஆசிய நாடுகள் தவிர்த்த) சர்வதேச நீதி விசாரணை வேண்டும். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் பெரும்பாலும் அனைத்து மாணவர் குழுக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்க்கடலின் இந்தப் பக்கம் உள்ள தமிழர் நிலையைப் பொறுத்தவரை, தமிழக மீனவர் பாதுகாப்பு பிரச்சினை அனைத்து மாணவர்களாலும் ஏற்கப்படுகிறது.

[7] மத்திய, மாநில அரசுகள் போராட்டங்களையும் விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் விரும்புவதில்லை. கையாலாகாத மக்கள் விரோத மன்மோகன் சிங் அரசு மேற்காணும் எந்த கோரிக்கையையும் ஏற்காது. முடிந்தால் ராஜபக்சே குடும்பத்துக்கு இன்னும் அதிகமாக உதவிகள் செய்யும், தமிழர்களை முறியடிக்கும். தேசிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. முதலைக் கண்ணீர் வடிக்கும். மார்க்சிஸ்ட் தோழர்கள் ஒன்றுபட்ட இலங்கை என்று பிதற்றிக் கொண்டிருப்பர். இவர்கள் யாரையும் நம்ப முடியாது, நம்பக்கூடாது.

தி.மு.க.—அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, அவர்களுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வேண்டும், தில்லியிலே அதிகாரம் வேண்டும், அமைச்சர் பதவி வேண்டும், ஏராளமானப் பணம் வேண்டும்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை நாமெல்லாம் முட்டாள்கள், நம்மை இன்னும் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று பகற்கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் முற்றிலுமாக முறியடிக்கப்படவேண்டும்.

மதிற்மேல் பூனையாய் உட்கார்ந்து கவனமாய் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவின் அரசு சும்மா இருப்பதாக நினைக்கக் கூடாது. பாராளுமன்றத் தேர்தல், அனைத்து தரப்பினரின் வாக்கு, 40 தொகுதிகளில் வெற்றி,– எனும் கணக்குத்தான் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறதே தவிர அங்கே ஈழத்தமிழர் பாசமோ, இங்குள்ள தமிழர்மீது அன்போ எதுவும் கிடையாது. பெரிய அடக்குமுறை நேரடியாக வராது; ஆனால் காலுக்குக் கீழே கட்டையை உருவும் வேலை கச்சிதமாக நடக்கும். மாணவர்களுக்கு. சற்றே கால அவகாசம் கிடைக்கலாம். அதை எப்படி அறிவுக்கூர்மையுடன் பயன்படுத்துவது என்று சிந்திப்பது நல்லது.

[8] போராட்டம் நடக்கட்டும். தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை அவசியம் வேண்டும். நமது கையில் இருக்கும் ஒரே மிகப் பெரிய ஆயுதம் பாராளுமன்றத் தேர்தல்தான். அதை எப்படி பயன்படுத்துவது என்று சிந்திப்பது மிக முக்கியமானது. இதற்காக எதிர்வரும் ஏப்ரல் 7-ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, காலை 9 மணிக்கு இடிந்தகரையில் ஒரு மாபெரும் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறோம். இது ஒரு புதுக்கட்சி தொடங்கும் முயற்சியோ அல்லது கூட்டணி அமைக்கும் திட்டமோ அல்லது யாரை ஏமாற்றி நாம் எம்.பி. ஆகலாம் எனும் கபட நாடகமோ அல்ல.

நம்மைப் போல தமிழின விடிவு பற்றி, தமிழரின் வருங்காலம் பற்றி சிந்திக்கும் நண்பர்களோடு வாருங்கள். தமிழகமெங்கும் உள்ள ‘மக்கள் அரசியல்’ நடத்தும் சிறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், சேவை நிறுவனங்கள், மக்கள் மன்றங்கள், நண்பர் குழுக்கள் என யாராக இருந்தாலும் வரலாம். 144 தடை உத்தரவு நம்மைக் கட்டுப்படுத்துவது இல்லை. வரும்போது ஒரு மின்னஞ்சல் (koodankulam@yahoo.com) அல்லது ஒரு குறுஞ்செய்தி (9865683735) அனுப்புங்கள்; நாங்கள் வழி சொல்கிறோம். எளிய உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம். பயணச் செலவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

வாருங்கள். வருவதற்கு முன்னால் உங்கள் கருத்துக்களை அறியத்தந்தால் (koodankulam@yahoo.com) நமது நேரத்தை கச்சிதமாக உபயோகிக்கலாம். சேர்ந்து உட்கார்ந்து சிந்திப்போம், பேசுவோம், செயல் திட்டம் வகுப்போம். இடிந்தகரை விடிந்தகரை ஆகும்! வீழ்ந்து கிடக்கும் தமிழினம் வீரியத்தோடு எழுந்து நிற்கும்!

சுப. உதயகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

இடிந்தகரை
மார்ச் 14, 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக