செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

நாங்கள் எங்கே போகின்றோம்....

வன்னி மண்ணில் விடுதலைப் புலிகளின் தலைமை சீராக இயங்கி வந்த காலத்தில் அந்த ஒரு குடையின் நிழல் உலகெங்கும் தமிழ் மக்கள் பரந்து வாழும் நாடுகளிலும் பரந்து நின்றது. அங்கு மக்கள் அந்த நிழலை நாடிச் சென்றார்கள். தெளிவு பெற்றார்கள்.

மறுபக்கத்தில் கொடிய அரசியல் தலைமையுள்ள இலங்கை தேசத்தின் இராணுவமும் விமானப்படையும் ஆகாயப்படையும் சேர்ந்து நின்ற வண்ணம் விடுதலைப் புலிகளை குறி வைத்து நின்றாலும் உலகெங்கும் விரிந்த கிடக்கும் தமிழ் மக்களை அந்த விடுதலை இயக்கம் இலகுவாகத் தொடர்புகொண்டு பல செயற் திட்டங்களை மேற்கொண்டது. ஆனால் உலகம் சதி செய்து அந்த விடுதலை இயக்கத்தின் வீரத்தை பறித்துக் கொண்டதால் அனைத்தும் பறிபோன நிலையில் உலகத் தமிழினம் தாழ்ந்து நிற்;கின்றது.

கடந்த ஒரு வருட காலமாக உலகத் தமிழர்கள் வானத்தைப் பார்த்தபடி வாழ்கின்றார்கள். தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் யாருக்கு யார் துரோகிப் பட்டம் சூட்டுவது என்று தெரியாமல் பல குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன. பல கோடி டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் நாட்டில் தமிழர் நலனில் அக்கறையோடு செயற்பட்டு வரும் நண்பர் ஒருவர் கனடா உதயனுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் “இங்கே பணத்தை வைத்துக் கொண்டு கோத்தபாயாவோடு யார் முதலில் சினேகிதம் கொள்ளுவது என்பதில் போட்டி நடக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் தாங்கள் நினைப்பதை வெளியில் கூறமுடியாத அளவிற்கு மந்த நிலையில் உள்ளார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர் தற்போது தாயகத்திற்கு பயணம் மேற்கொள்ளுகின்றார்கள். அவர்கள் திரும்பி தங்கள் வாழும் நாடுகளுக்கு வந்து “ அங்க நமது ஊர் அந்தமாதிரி…எல்லாரும் சந்தோசமாக இருக்கினம்” என்று சொல்லி தாங்களும் சந்தோசப்படுவதைப் போல காட்டுகின்றார்கள். அவர்கள் கூறுவதில் உண்மை இருக்கின்றதோ அன்றி பொய் இருக்கின்றதோ… யாரை இவர்கள் “குற்றம்” சொல்லுகின்றார்கள் என்பதுதான் மிக முக்கியமான விடயமாகும்.

நேற்று வெளியான செய்தியொன்றில் கே. பி அவர்கள் கொழும்பில் ஒரு பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் “புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவோடு சேர்ந்து வேலை செய்ய தயாராக இருக்கின்றார்கள்” என்று கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இன்னுமொரு பத்திரிகை அறிக்கை வெளியாகலாம். கே. பி அவர்கள் அந்த பேட்டியை வழங்கவில்லை. அதனால் அந்த கருத்துக்களுக்கு அவர் பொறுப்பல்ல”என்று

நாம் இந்தப் பக்கத்தில் ஆரம்பத்தில் கூறியதைப் போல வன்னியிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைமை இல்லாமல் போனதன் பின்னர் தமிழினம் நன்கு தாழ்ந்து போய்விட்டது. அந்த தாழ்ந்த நிலையிலிருந்து அவர்களை மேலெழச் செய்ய ஏதேனும் முயற்சிகள் நடைபெறுகின்றனவா என்பதை நாம் நோக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை யார் முதலில் வெற்றி கொள்ளுவது என்பதில் பலர் மத்தியில் போட்டி நிலவுகின்றது. இவர்களில் “யார் நேர்மையானவர்கள். எவர் பக்கம் உண்மை நிலவுகின்றது” என்பது பற்றியெல்லாம் சிந்தித்து செயற்படுவதற்கு எமது மக்களுக்கு அவகாசம் கிடைப்பதில்லை. ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகளை அவர்கள் கேட்டு குழம்பிப் போயுள்ளார்கள்.

பத்து இலட்சத்திற்கு அதிகமான தமிழ் மக்கள் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் தங்கள் குடும்பம், பொது வாழ்வு மற்றும் தாயகம் தொடர்பான அக்கறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் பங்களிப்புக்ளைச் செய்கின்றார்கள். இவ்வாறான புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒழுங்கான தலைமைகளால் வழிநடத்தப்பட வேண்டும். தாழ்ந்து நிற்கும் தமிழினம் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும்.

மற்றவர்களை துரோகி என்று நாமம் சூட்டுவதற்கு முன்னர் பல தடவைகள் மற்றவர்களைப் பற்றியும் தங்களைப் பற்றியும் விமர்சனமும் சுயவிமர்சனங்களும் செய்து கொள்ளவேண்டும். இதுவே தற்காலத்திற்கு ஏற்ற தமிழச் சமூகத்திற்குரிய நகர்வு என்றே உதயன் நம்புகின்றான்.

கனடா உதயன் கதிரோட்டம்

நன்றி : தமிழ்வின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக