புதன், ஆகஸ்ட் 11, 2010

எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!


enthiran-01 உங்களுக்கு தமிழ்ச்சினிமாவில் பிடிக்காத இயக்குனர் யார் என்று கேட்டால், உடனடியாக ‘ஷங்கர்’ என்று சொல்வேன். அப்படியொரு திடமான நம்பிக்கையை அவர் குறித்து அவரே எழுப்பி இருக்கிறார். நமது நிறத்தின், பண்பாட்டின், அடையாளங்களின், விழுமியங்களின், மகத்துவங்களின் மீது அப்படியொரு வன்மமும், துவேஷமும் ஷங்கரின் படங்களில் தொடர்ந்து இருக்கிறது.
மொத்த தமிழ்ச்சினிமாவையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வைக்கும் ஏகபோகமாக தன் நிறுவனம் உருவெடுக்க வேண்டும் என்கிற வெறியும், வேட்கையும் கொண்டவராக கலாநிதி மாறன் சமீப காலங்களில் தனக்கான அரசியல் அதிகாரம் பயன்படுத்தி முன்னுக்கு வந்திருக்கிறார். சினிமா, அதன் கலை அழகு, வடிவம், மொழி எல்லாவற்றையும் சிதைத்து, தன் பண வேட்டைக்கான களமாக அதனை மாற்றிடும் அகோரப்பசியோடு சன்நிறுவனம் இன்று காட்சியளிக்கிறது.

அபூர்வ ராகங்களில் துளிர்த்து, முள்ளும் மலரில் வளர்ந்த ரஜினிகாந்த் என்னும் நடிகர், தான் வந்த பாதையை மறந்து இன்று திசைமாறி எங்கோ போய்விட்டார். தன் ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் அவரிடம் இப்போது தென்படவில்லை.

இளையராஜாவுக்கு எதிராக அல்லது மாற்றாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும், தன் திறமையின் மூலம் இசையுலகில் தனக்கென்று அல்லது தனக்குரிய ஒரு இடத்தை அடைந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். நல்ல படங்கள் என்றால், தன் சன்மானத்தை பொருட்படுத்தாமல் இசையமைக்கும் இளையராஜா போன்றோரின் முன்னால், பெரும் நிறுவனங்களின் பேனர்களில் மட்டுமே தன் இசையை வெளிக்காட்டும் ஏ.ஆர்.ரகுமானின் ‘சர்வதேசக் கலைத்தாகம்’ யாருக்கானது எனச் சொல்லத் தேவையில்லை.

இந்த தில்லாலங்கடிகளின் கூட்டுத் தொழிலில் (உழைப்பில் என்று சத்தியமாய்ச் சொல்ல மாட்டேன்), உருவாக்கிய சினிமாவான எந்திரன் குறித்து எகிறி எகிறிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான் தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.

endhiran-finish-shooting-05 “இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது.

“இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன்” என்று அதிரடியாய் அறிவிக்கிறார்கள். என்னா தெனாவெட்டு! “சயின்ஸ்னா என்ன? ஃபிக்‌ஷன் என்ன?” என்று யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற தைரியம்தானே இப்படியெல்லாம் பேச வைக்கிறது. “வித்தியாசமான ரஜினியை பார்க்கப் போகிறீர்கள்” என்று நெஞ்சு விம்மிப் போகிறார் ஷங்கர். தமிழ்ச்சினிமா ரசிகர்களை இந்த ‘வித்தியாசம்’ எனும் வார்த்தை சொல்லி எத்தனை காலம், எத்தனை பேர், எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவை ஏமாந்தபோதும், திரும்பவும் ஏமாறத் தயாராய் இருக்கிறார்கள் என்னும் கொழுப்பில்தானே இப்படியெல்லாம் பேச முடிகிறது.
பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்று கதைக்கிறவர்களுக்கும், வித்தியாசம் என மார்தட்டுபவர்களுக்கும் நடிகர் விவேக் பேசியதைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். ”ஆமையும் முயலும் கதையினை ஷங்கர் எடுக்க வேண்டும். அதனை ஜெர்மனியில் உள்ள பெரும் மைதானத்தை வாடகை எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ படம் எடுக்க வேண்டும். மேலே நான்கு ஹெலிகாப்டரில் வைத்து அந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும்” என்று அவர் நகைச்சுவையாக பேசியதில் உண்மைகளும் இருக்கின்றன.

எந்திரன் படப்பிடிப்பின் கடைசி நாளன்று பெரிய கேக் வெட்டி விழா. அதுகுறித்துச் செய்திகள். அப்புறம் அதன் பாடல்கள் வெளியீட்டு விழா. அது குறித்து தொலைக் காட்சியில் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள். அதன் வெளியீடு நடப்பதற்குள், என்ன திகிடுதத்தங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ! அதையெல்லாம் அவரவர் புத்திசாலித்தனத்துக்கேற்ப கலர் கலராய் வாந்தியெடுத்து, பிரமாதப்படுத்துவதற்கு என்று பலரும் இருக்கிறார்கள். சமூகப் பார்வையும், சினிமா குறித்து அக்கறையும் அற்ற இந்த ஜென்மங்களை என்ன செய்வது?

“ஜஸ்ட் 150 கோடி செலவு செய்து..” என்று பெருமிதமாய்ப் பேசுகிறார் ரஜினிகாந்த். நாளைய வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்று அறியாத பெரும் கூட்டம் அதைக்கேட்டு இறுமாந்து போகிறது. இந்த “ஜஸ்ட்டில்” என்னவெல்லாம் இந்த தேசத்தில் செய்ய முடியும் என நினைத்தால் கொதிப்பாய் இருக்கிறது. காசு கொடுத்துப் பார்க்கிற யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாமல், ஒரு படம் எடுத்து, அதற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற இந்த வியாபார உத்திகளின் மீது நமது கோபத்தைக் காட்டாமல், வேடிக்கைப் பார்க்கிற அல்லது ரசிக்கிற மனோபாவமே சமூகக் கேடு. அதைத் தகர்க்கிற மூர்க்கம் பொறுப்புள்ள பிரஜைக்கு வந்தாக வேண்டும்.

எத்தனை எத்தனையோ கனவுகளுடன், சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் இங்கு பல இளைஞர்கள் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தனது பிரம்மாண்ட கால் சுண்டு விரலால் நசுக்கிப் போட்டு விடும் இந்த ‘எந்திரன்’கள். சினிமா மொழி அறிந்த, அதன் நுட்பங்கள் தெரிந்த, நல்ல கதை சொல்லத் தெரிந்த புதிய இயக்குனர்கள் இப்போது முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனது சூறாவளி வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் இந்த ‘எந்திரன்’கள். யதார்த்தங்களை விட்டு சினிமாவை வெற்று பிம்பங்கள் நிறைந்ததாக, மாய உலகமாக, கைக்கு எட்டாத பிரதேசமாக தள்ளி நிறுத்தும் காரியமே ‘எந்திரனின்’ வருகையாய் இருக்கப் போகிறது. கதைகளுக்குத்தான் தொழில்நுட்பமே தவிர, தொழில்நுட்பத்திற்கு கதைகள் அல்ல! பணத்தை மட்டுமே முன்னிறுத்தும் எதுவும், சமூகத்திற்கு உருப்படியாய் எதையும் தந்துவிட முடியாது.

சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டு தந்த அற்புத கலைச்சாதனம். மகத்தான கலைஞர்கள் அதனைக் கையாண்டு சமூகத்தோடு எவ்வளவோ உரையாடல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காலங்களைத் தாண்டி அவர்கள் தந்த காட்சிகள் இன்றும் உயிர்த்துடிப்போடு வலம் வருகின்றன. அப்படிப்பட்டவர்களை களங்கப்படுத்துவதோடு, சினிமா என்னும் அரிய பொக்கிஷத்தை கபளீகரமாக்க முயற்சிக்கும் ’எந்திரன்’கள் குறித்து எச்சரிக்கை தேவைப்படுகிறது.

”இது மக்களுக்கான சினிமா அல்ல, வியாபாரிகளுக்கான சினிமா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக