செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

தமிழர்களம் மண்ணுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்



1 ஈழ விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்போம்!
தமிழரில்லா நாடில்லை ஆனால் தமிழருக்கென்று ஒரு நாடில்லை. உலகில் நாம் 12 கோடி பேர் இருந்தும் நாம் நாடற்ற மக்களாக வாழ்ந்து வருகிறோம். ஈழ மண்ணை முற்றாக சிங்களனிடம் பறிகொடுத்தும், தாய்த்தமிழ்நாட்டு மண்ணை முற்றாகத் திராவிடரிடம் அடகு வைத்தும் இவைகளின் விளைவாக ஏதிலியராக உலகப் பரப்பெங்கும் மண்ணுரிமையும் ஆட்சியுரிமையும் இழந்து நிற்கிறோம். ஆனால் வீரமிகு ஈழத் தமிழரின் விடுதலைக்கான போராட்டம் இன்று பல்முனைப் போராட்டங்களாக வடிவெடுத்து வருகின்றன! எம் உயிரினும் மேலான எம் மக்களின் இந்த விடுதலைப் போராட்டங்களில் தமிழர்களம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள உறுதி பூணுகிறது.
2 தமிழர் சீனர் கூட்டணி அமைப்போம்!
இது வரை தமிழக மீனவர்கள் 534 பேர் சிங்களப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். பல நூறு முறை தமிழக மீனவர்களின் பொருட்களும் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளன அல்லது கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளன! தமிழக மீனவர்களை சிங்களப் படைகள் தொடர்ந்து அடித்தும், வதைத்தும் வருகின்றன! இந்திய இறையாண்மை பற்றி வாய்கிழியப் பேசும் தமிழக மற்றும் நடுவணரசுகள் இத் தொடர் நிகழ்வுகளின் வழியாகவும்; அது குறித்து எள்ளளவும் எதிர் நடவடிக்கை எடுக்காததன் வாயிலாகவும் இந்த இரு அரசுகளும் இந்திய இறையாண்மையை கேலிக்குரியதாகவும் கேள்விக்குரியதாகவும் மாற்றியிருப்பதுதான் உண்மை!
மீனவர்களை அன்னியரிடமிருந்து பாதுகாக்க வேண்டிய அரசுகள் பாராமுகம் காட்டுவதும் அது குறித்து மீனவர்கள் எழுப்பும் அழுகுரலும், வேண்டுகைகளும், மனுக்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனதும்தான் மிச்சம்! “மீனவர்களின் தற்காப்பிற்கு எங்களிடம் ஆயுதங்களாவது கொடுத்துத் தொலையுங்கள்” என்ற வேண்டுகோளும் முற்றாக நிராகரிக்கப்பட்டுவிட்டது! இனிமேலும் தமிழக இந்திய அரசுகள் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் முற்றாக அழிந்து போன ஒரு நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.
இந்தியாவை எதிர்க்கும் நோக்குடன் தமிழர்களை இந்தியர்களாகக் கருதிக்கொண்டு அதே வேளையில் தமிழக அரசியல் பற்றிய புரிதல் இல்லாமல் சீன அரசும் தமிழக மீனவர்களை இப்போது சீண்டி வருகிறது! ஆக, ஒரு புறம் தமிழர்களை இந்தியர்களாகக் கருதி சீனா சீண்டுகிறது. மறுபுறம் இந்தியா தமிழர்களை மாற்றான்போலக் கருதி அடி உதை படுவதையும், கொலை செய்யப்படுவதையும் வேடிக்கை பார்க்கிறது! படைவழி நடவடிக்கை எடுக்க மறுக்கிறது! இந்திய சீன வல்லாதிக்கப்போட்டியில் சிங்களனை வளைக்க எண்ணி தமிழக மீனவர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.
இனியும் ஒருமுறை சிங்களர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால், சீனர் தமிழர் நல்லுறவை வலுப்படுத்தி சீன அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சோழக்கடலின் அரசியல் கட்டாயங்களையும் காய்நகர்வுகளையும் தெளிவுபடுத்தி தமிழக மீனவர்களின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தவிர்க்க இயலா ஒரு மாற்றுக் கூட்டணியை உறுதியாக ஏற்படுத்துவோம் என்று இம் மாநாடு கடுமையாக எச்சரிக்கிறது!
3 சீமானை விடுதலை செய்!
534வது முறையாக தமிழக மீனவர் ஒருவர் சிங்களரால் அடித்தே கொல்லப்பட்ட நிலையில் தமிழகத்தைப் பீடித்திருக்கிற திராவிட அரசும் மத்தியில் நிலைகொண்டிருக்கிற பேராயக் கட்சியும் எந்தவொரு எதிர் நடவடிக்கையும எடுக்காத நிலையில் தமிழரான நாம் தமிழர் இயக்கத்தின் நாட்டுப் பொறுப்பாளர் திரு. சீமான் அவர்களைத் தமிழக அரசு கைது செய்தது மட்டுமல்லாமல் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கொடுமையாக ஏவியிருப்பதை தமிழர்களம் வன்மையாகக் கண்டிக்கிறது! உரிமைகளைக் கேட்கும் போதும் உண்மைகளை உரைக்கும் போதும் தமிழர்கள் மீது கொடுமையான சட்டங்களை ஏவி சிறையில் அடைத்தும், உடல்/உள்ள வதை செய்தும் அடக்கி ஒடுக்க முற்படுகிறது இந்த வந்தேறித் திராவிட அரசு! சீமானை உடனடியாக விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல் தமிழர் அமைப்புககளின்மீது நடாத்தப்படும் வன்கொடுமைகளை அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது! தமிழர்களை ஒடுக்கவும், தமிழர் தேசிய சிந்தனைகளை நறுக்கவும் நினைக்கும் இந்த ஆட்சியை வேரடி மண்ணோடு வரும் சட்ட மன்றத் தேர்தலில் சாய்த்துக்கட்ட தமிழர்களம் களமிறங்கும் என்பதை இந்நேரத்தில் அறிவிக்கிறோம்.
4 சனவரி 29 இனப்போர் ஈகிகள் நாள்!
தமிழக வரலாற்றில் முத்துக்குமரனின் ஈகமும் அவரைத் தொடர்ந்து தமிழ் மண்ணிலும் பிற இடங்களிலும் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவுகளை வரும் தமிழ்த் தலைமுறைகளுக்கெல்லாம் நினைவூட்டவும் உயிரூட்டவும் முத்துக்குமரன் தனிஉயர் ஈகம் செய்த சனவரி 29ஆம் நாளை இனப்போர் ஈகிகள் நாளாக அறிவிக்கிறோம்! ஆண்டுதோறும் இன எழுச்சிக்கு வித்திடும் நாளாக அது அமையட்டும்!
5 சாராயக் கடைகளை மூடு!
கல்விக் கூடங்களையும், நலவாழ்வு மையங்களையும், பொருளியல் மேம்பாட்டு நிறுவனங்களையும், பண்பாட்டு வளர்சிச் செயல்களையும் நடத்திடவேண்டிய அரசு சாராயக்கடை நடத்திக் கொண்டிருக்கிறது! திரைக்கூத்தும் மதுக்கூத்தும் திராவிடத்தின் முதலீடுகள் என்பதை இந்த அரசும் தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறது! ஆனால் தமிழர் தலைமுறையோ படிப்படியாக அழிந்து நசிந்து வருவதை எம்மால் ஏற்றுக்கொளள இயலாது! தமிழகத்தில் அரசே முன்வந்து முழு மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது!
6 அண்டை மாநிலத் தமிழ்ப் பகுதிகளைத் தமிழகத்தோடு இணை!
2011ல் நடத்தபடவிருக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது தவிர்க்க முடியாதது என்ற ஓரு நிலையில், அக்கணக்கெடுப்பின் முடிவில் தமிழ்ச்சாதியினர் நிறைந்துள்ள ஆனால் அண்டை மாநில எல்லைகளுக்குள் சிக்கித் தவிக்கிற தமிழர்களையும் அவரது வாழ்விடங்களையும் தமிழகத்தோடு இணைத்து, 1956ல் எந்த நோக்கோடு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ அதை இப்போதாவது நிறைவேற்றி இந்திய இறையாண்மை சிதைவுறாமல் காக்க அரசுகள் முன்வரவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது!
7 திராவிடத்தை ஒழித்து தமிழர் தேசியம் உருவாக்குவோம்!
திராவிடம் ஒழிந்தாலொழிய தமிழர் வாழ்வு இங்கும் ஈழத்திலும் எங்கும் ஏற்றம்பெறாது அல்லது விடுதலை அடையாது என்பதை உணர்ந்து, தமிழர் தலைமுறைக்கெல்லாம் இதை உணர்த்தி, திராவிட ஒழிப்பு என்னும் நற்பணியில் நட்பாற்றல்களை ஒருங்கிணைந்து, ஆக்கபூர்வ அமைப்புக்களோடு ஒத்துழைத்து தமிழர் தேசியம் மலர தமிழர்களம் முனைப்போடு பணியாற்றும் என்று உறுதிமொழி ஏற்கிறோம்!

மையக்குழு
தமிழர்களம்
31/07/2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக